Published : 12 Sep 2022 05:10 PM
Last Updated : 12 Sep 2022 05:10 PM
மதுரை: இந்தியாவில் கருவிழி பாதிப்பினால் 18 லட்சம் பேர் பார்வை இழந்துள்ளனர் என்று மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை டீன் டாக்டர் ரத்தினவேலு தெரிவித்தார்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கண்தான விழிப்புணர்வு கண்காட்சி நடத்தப்பட்டது. மருத்துவமனை டீன் டாக்டர் ரத்தினவேலு தொடங்கி வைத்தார். கண் பிரிவு துறைத் தலைவர் டாக்டர் விஜயசண்முகம் மற்றும் துறை மருத்தவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கண்தானம் செய்வதற்கான வழிமுறைகள், உறுதிமொழி தொடர்பான தகவல்கள் நோயாளிகள், பொதுமக்கள், மாணவர்களுக்கு தெரிவிக்கப்பட்டன. களந்திரி, செக்கானூரணி, செல்லம்பட்டி, சமயநல்லூர் ஆகிய இடங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள், செவிலிய மாணவர்கள் மற்றும் மதுரை கல்லூரி மாணவ, மாணவிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
டீன் ரத்தினவேலு பேசும்போது, ''அரசு ராஜாஜி மருத்துவமனையில் கருவிழி சோதிப்பதற்கான கருவிழி மாற்று அறுவை சிகிச்சை வசதிகள் உள்ளன. அதனால், கண்தானம் செய்தால் மற்றவர்கள் வாழ்வில் ஒளி ஏற்றலாம். தற்போது இந்தியாவில் கருவிழி பாதிப்பினால் 18 லட்சம் பார்வை இழந்தவர்கள் உள்ளனர். இவர்களுக்கு பார்வை அளிக்க ஆண்டிற்கு 1 லட்சம் கண்தானங்கள் தேவைப்படுகிறது.
கண்தானம் மூலமாக இவர்களுக்கு கருவிழி அறுவை மாற்று அறுவை சிகிச்சை செய்து பார்வை அளிக்க முடியும். இந்தியாவில் கருவிழி பாதிப்பினால் பார்வை இழந்தவர்களின் எண்ணிக்கை தானமாக பெறப்படும் கண்களை விட அதிகமாக இருக்கிறது. மதுரையில் கண் தானம் விழிப்புணர்வால் பலர் கண் தானம் செய்ய முன்வந்துள்ளனர். கரோனா பெருந்தொற்று காலத்திலும் கடந்த ஆண்டு 265 பேர் கண்தானம் செய்துள்ளனர்'' என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT