Published : 17 Aug 2022 07:36 PM
Last Updated : 17 Aug 2022 07:36 PM

மதுரை அருகே 12 ஏக்கர் குத்தகை நிலத்தில் ஆட்டுப் பண்ணை அமைத்து வருவாய் ஈட்டும் எம்பிஏ பட்டதாரி

படங்கள்: என்.தங்கரத்தினம்.

மதுரை: சொந்த ஊரில் ஆட்டுப் பண்ணை அமைத்து வருவாய் ஈட்டி வருகிறார் வாடிப்பட்டி பட்டதாரி ராஜவடிவேல். இவர் சுய வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்களுக்கு பயிற்சிக்களமாகவும் பண்ணையை மாற்றியுள்ளார்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியைச் சேர்ந்தவர் ராஜவடிவேல் (வயது 52). எம்.காம், எம்பிஏ பட்டதாரியான இவர் எத்தியோப்பா நாட்டில் ஆயத்த ஆடைகள் நிறுவனத்தில் நிதித்துறை மேலாளராக பணியாற்றினார். கை நிறைய சம்பளம் வாங்கியவர் கடந்தாண்டு சொந்த ஊருக்கு திரும்பியவர், விவசாயத்தின் மீதான ஆர்வத்தால் விவசாயம் செய்ய தொடங்கினார்.

வெளிநாட்டில் சம்பாதித்ததை இங்கே சம்பாதிக்க வழி வகுக்க ஆட்டுப்பண்ணை அமைக்க திட்டமிட்டார். அதற்கான ஆலோசனைகளை பெற திருப்பரங்குன்றத்திலுள்ள கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆய்வு மையத்தில் பயிற்சி பெற்றார். தற்போது வெள்ளாடுகள் வளர்த்து விற்பனை செய்து வருவாய் ஈட்டி வருகிறார்.

இதுகுறித்து பட்டதாரி ராஜவடிவேல் கூறியது: ''பட்டம் முடித்துவிட்டு பல நாட்டுகளில் பணியாற்றினேன். கடைசியாக எத்தியோப்பியாவில் ஆயத்த ஆடைகள் நிறுவனத்தில் நிதித்துறையில் மேலாளராக இருந்தேன். வெளிநாட்டில் சம்பாதிப்பதை இங்கே சம்பாதிக்க வேண்டும் என ஆட்டுப் பண்ணைகள் அமைக்க முடிவெடுத்தேன். திருப்பரங்குன்றத்திலுள்ள கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றேன்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கல்லடிபட்டியிலுள்ள ஆட்டுப்பண்ணை அமைத்துள்ள வாடிப்பட்டி பட்டதாரி ராஜவடிவேல்.

அதன் தலைவர் சிவசீலனிடம் ஆலோசனையின்படி ஆட்டுப்பண்ணை அமைக்க திட்டமிட்டேன். ஆடுகளின் ரத்த மாதிரிகள், எச்சில் மாதிரிகள் எடுத்து பரிசோதனை செய்து தரமான ஆடுகள் வாங்கப்பட்டன.

அதற்காக வாடிப்பட்டி அருகே கல்லடிபட்டியில் 12 ஏக்கரில் குத்தகை எடுத்துள்ளேன். சப்போட்டா மரக்கன்றுகளுக்கு இடையே கொட்டகை அமைத்துள்ளேன். தீவனமாக அகத்திக்கீரை, வேலிமசால், சூப்பர் நேப்பியர் புல் ரகங்கள் தலா இரண்டரை ஏக்கரில் பயிரிட்டுள்ளேன்.

சுமார் 500 ஆடுகள் வரை வளர்க்க திட்டமிட்டு தற்போது முதற்கட்டமாக 150 ஆடுகள் வளர்த்து வருகிறேன். சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கண்காணித்து வருகிறேன். வெளிநாட்டில் சம்பாதித்ததை இங்கே சம்பாதிக்கும் வழிவகை உள்ளது. புதிதாக தொழில் முனைவோராக விரும்பும் இளைஞர்களுக்கு பயிற்சிக்களமாகவும் ஆக்கியுள்ளேன்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x