Published : 10 Aug 2022 06:08 PM
Last Updated : 10 Aug 2022 06:08 PM
மதுரை: விளைநிலத்தில் விலைமதிப்புடைய சந்தன மரக்கன்றுகளை நட்டு சிசிடிவி கேமராக்கள் கண்காணித்து வளர்த்து வருகிறார் உசிலம்பட்டி விவசாயி.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வகுரணி கிராமத்தைச் சேர்ந்தவர் எம்.அரசு (வயது 60). நெல், காய்கறி, பூ என விவசாயம் செய்துவருபவர், வருங்காலத்தை வளமோடு கழிக்க சிசிடிவி கேமரா கண்காணிப்பில் சந்தன மரக்கன்றுகளை வளர்த்து வருகிறார். சுமார் 15 மற்றும் 25 ஆண்டுகள் கழித்து வருவாய் கிடைக்க வழிவகை செய்துள்ளார்.
இதுகுறித்து விவசாயி எம்.அரசு கூறியது: ''விவசாயிகள் வழக்கமான பயிர்கள் நட்டு போதிய விலையின்றி நஷ்டமே ஏற்படுவதாக புலம்புவதைவிட்டு மாற்றி யோசிக்க வேண்டும். மரப்பயிர்கள் வளர்த்து வருவாய் ஈட்ட திட்டமிட வேண்டும். அதன்படி 3 ஆண்டுக்கு முன்பு 200 சந்தன மரக்கன்றுகள் நட்டு வளர்த்து வருகிறேன்.
மரத்தின் வளர்ச்சியை பொறுத்து 15-லிருந்து 25 ஆண்டுக்குள் அறுவடை செய்யலாம். சந்தன மரத்தின் வைரத்தன்மையை பொறுத்து தற்போது ஒருகிலோ சந்தன மரக்கட்டை ரூ.7 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது. ஒரு மரத்திற்கு 30 கிலோவிலிருந்து 50 கிலோ வரை தரமான மரக்கட்டை கிடைக்கும். ஒரு மரத்திற்கு 50 கிலோ என்றால் ரூ.3.50 லட்சம் கிடைக்கும், 100 மரங்கள் என்றால் ரூ.3 கோடியே 50 லட்சம் கிடைக்கும்.
ஒரு ஏக்கருக்கு 10க்கு 10 அடி இடைவெளியில் 500 மரக்கன்றுகள் நடலாம். ஒரு மரக்கன்று ரூ.20-லிருந்து ரூ.150 வரை கிடைக்கும். மரக்கன்றுகள் நடவு செய்தவுடன் கிராம நிர்வாக அதிகாரியிடம் பதிவு செய்ய வேண்டும். பின்னர் 15 அல்லது 25 ஆண்டுகள் கழித்து மரத்தை வெட்டும்போது வனத்துறை அனுமதி பெற வேண்டும்.
விலைமதிப்புடைய சந்தன மரங்கள் என்பதால் சிசிடிவி கேமராக்கள் நான்கு திசைகளிலும் பொருத்தி கண்காணித்து வருகிறேன். ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் விவசாயிகள் விழிப்புணர்வோடு சந்தன மரப்பயிர் விவசாயம் செய்து வருவாய் ஈட்டுகின்றனர். அதேபோல், நமது பகுதி விவசாயிகளும் சந்தனமரம் உள்ளிட்ட மரக்கன்றுகள் பயிர் செய்து வருவாய் ஈட்ட முன்வர வேண்டும்'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT