Published : 03 Aug 2022 09:15 PM
Last Updated : 03 Aug 2022 09:15 PM

டேராடூன் | அலுவலகத்திற்கு தினமும் சைக்கிளில் வந்து செல்லும் ஐஏஎஸ் அதிகாரி

டேராடூன்: தினந்தோறும் அலுவலகத்திற்கு மிதிவண்டியில் வந்து செல்கிறார் ஐஏஎஸ் அதிகாரியான புருஷோத்தம். அதிகரித்து வரும் சூழல் மாசுதான் இதற்கு காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.

தலைநகர் டெல்லியில் அவர் பணியாற்றியபோது அங்கு நிலவிய காற்று மற்றும் ஒலி மாசுபாடுகளின் தீவிரத்தன்மையை எதிர்கொண்ட காரணத்தால் மிதிவண்டிக்கு மாறியதாக தெரிவித்துள்ளார் அவர். அதன் காரணமாக வேலை நாட்களில் தினந்தோறும் தனது வீட்டில் இருந்து அலுவலகத்திற்கும், மீண்டும் வீடு திரும்பவும் சைக்கிளை பயன்படுத்தி வருகிறார்.

அவரது வீட்டிற்கும் அலுவலகத்திற்கும் இடையிலான தூரம் சுமார் 8 கிலோமீட்டர். இது காரில் வரும் நேரத்தை காட்டிலும் கூடுதலாக 5 முதல் 7 நிமிடங்கள் மட்டுமே நேரம் பிடிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு மாதங்களாக அலுவலகத்திற்கு சைக்கிளில் வரும் வழக்கத்தை அவர் கடைப்பிடித்து வருகிறார்.

“கடந்த ஜூன் 7 முதல் நான் சைக்கிளில்தான் அலுவலகம் வந்து செல்கிறேன். ஹெல்மெட் அணிந்து கொண்டுதான் இந்த பயணத்தை மேற்கொள்கிறேன். காலை நேரங்களில் அவசர அவசரமாக அலுவலகம் செல்ல வேண்டுமென்ற நெருக்கடி இல்லாமல் முன்கூட்டிய கிளம்பி சரியான நேரத்திற்கு என்னால் வர முடிகிறது. அதேபோல மாலை நேரங்களில் நிலவும் போக்குவரத்து சிக்கல்களுக்கு சைக்கிள்தான் சரியான சாய்ஸாக உள்ளது.

அலுவலகத்திற்கு வந்து செல்லும் 16 கிலோமீட்டர் தூரம் மட்டுமல்லாது காலை நேரங்களில் 20 கிலோமீட்டர் தூரம் சைக்ளிங் பயிற்சி மேற்கொள்கிறேன். இது உட்கார்ந்த படி வேலை செய்யும் என்னை ஃபிட்டாக வைத்துக் கொள்ள உதவுகிறது. நகரங்களில் வசிப்பவர்கள் வாரத்தில் ஒரு சில நாட்களாவது அலுவலகத்திற்கு சைக்கிளில் வர வேண்டும். அதன் மூலம் மாசுக்கு ஓரளவு தீர்வு காண முடியும்” என சொல்கிறார் அவர்.

தற்போது அவர் உத்தராகண்ட் ஒருங்கிணைந்த கூட்டுறவு மேம்பாட்டு திட்ட அலுவலகத்தில் தலைமைத் திட்ட இயக்குனராக பணியாற்றி வருகிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x