Published : 31 Jul 2022 12:52 PM
Last Updated : 31 Jul 2022 12:52 PM
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் மாடுமேய்க்கக்கூடிய லாயக்கில்லை என்று துரத்தப்பட்டவர் நூற்றுக்கணக்கான சமையல் கலைஞர்களை உருவாக்கி, அவர்களது குடும்பத்துக்கு நிரந்தர வாழ்வாதாரத்தை ஏற்படுத்தியுள்ளார்.
வரலாற்று புகழ்பெற்று விளங்கும் புதுக்கோட்டை மாவட்டமானது மொய் விருந்துக்கும் புகழ் பெற்று விளங்குகிறது.ஆண்டுக்கு 100-க்கும் மேற்பட்ட இடங்களில் இவ்விழா நடைபெறும். ஒவ்வொரு விழாவிலும் 5 ஆயிரம் பேருக்கு சமைக்கப்படும். அனைவருக்கும் கறிவிருந்து பரிமாறப்படும். தவிர, திருமணம், காதுகுத்து போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் சமையல் செய்ய வேண்டியிருப்பதால் சமையல் பணிக்கு ஆட்கள் தேவை இருக்கும்.
இப்பகுதியில் சுமார் 45 ஆண்டுகளுக்கு மேலாக சமையலுக்கு பாண்டிக்குடி கோ.பழனி (74) என்பவர் மிகவும் புகழ் பெற்றவர். தனியொருவராக சமையல் பணியில் இறங்கி, இன்று நூற்றுக்கணக்கானோரை சமையல் கலைஞர்களாக உருவாக்கி உள்ளார். கூலியோடு, சமையல் கலையையும் கற்றுக்கொடுத்துள்ளதால் ஏராளமானோருக்கு வாழ்வாதாரமாக இத்தொழில் அமைந்துள்ளது.
இது குறித்து 'இந்து தமிழ்' நாளிதழிடம் பழனி கூறியதாவது: ''பாண்டிக்குடியில் மிகவும் சாதாரண குடும்பத்தில் பிறந்த நான் ஒன்றாம் வகுப்போடு பள்ளிக்குச் செல்லவில்லை. அதன்பிறகு, சிறு வயதிலேயே மாடு மேய்க்கச் சென்றேன். ஒரு நாள் அடுத்தவர் வீட்டு வயலில் மாடுகள் மேய்ந்துவிட்டதால் அந்த தோட்டத்துக்காரர் அடித்து துன்புறுத்திவிட்டார்.
அதற்குப் பயந்து அந்த வழியாக வந்த ரயிலில் ஏறி நாகப்பட்டினத்துக்கு சென்றுவிட்டேன். ரயில் நிலையத்தில் பணமின்றி விழித்துக் கொண்டிருந்த என்னை, அந்த ஊரைச்சேர்ந்த ஒருவர் அழைத்து சமையல் பணிக்கு சேர்த்துக்கொண்டார். அங்கு ஒரு வருடம் சைவம் சமைப்பதற்கு கற்றுக்கொண்டேன்.
அதன்பிறகு, கீரமங்கலத்தில் உள்ள ஒரு உணவகத்தில் சமைத்தேன். அந்த சமயத்தில் கீரமங்கலத்தைச் சேர்ந்த நடேசன் அசைவம் சமைக்கக் கற்றுக்கொடுத்தார். அடுத்த 5 ஆண்டுகளுக்குப் பிறகு தனியாக சமையல் வேலைக்கு இறங்கினேன். படிப்படியாக அனைத்து விதமான சமையல், பலகாரம் தயாரிக்கவும் கற்றுக்கொண்டேன். இந்தப் பகுதியில் மொய் விருந்து, திருமணம், காதுகுத்து போன்ற நிகழ்ச்சிகளுக்கு சமையல் மற்றும் பரிமாறுவதற்கு ஆட்கள் அதிகமாக தேவைப்படுவதால் சமைக்கத் தெரியாதவர்களையும் அழைத்து வஞ்சகமின்றி சமையல் கற்றுக்கொடுத்தேன்.
வேலை முடிந்ததும் கூலியையும் சரியாக கணக்கிட்டு கொடுத்து அனுப்புவேன். இப்படியாக என்னிடம் சமையல் கற்றுக்கொண்டவர்கள் தனித்தனியாக சமையல் வேலை செய்து வருகின்றனர். அதன்படி, வடகாடு, மாங்காடு, பாண்டிக்குடி, கீரமங்கலம், புள்ளான்விடுதி உட்பட பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கணக்கானோர் சமையல் கலைஞர்களாக உள்ளனர்.
சமையல் தொழில் தெரிந்ததால் பல்வேறு மாவட்டங்களில் கேண்டீன் நடத்தி வருகின்றனர். படிப்பறிவு இல்லாவிட்டாலும் நான் சமையல் செய்த எந்த இடத்திலும் தொய்வு ஏற்பட்டதில்லை. அதோடு, டிஜிட்டல் தராசு வைத்து சமையல் பொருட்களை போட்டு சமைப்பதும் இல்லை. கைப்பக்குவம்தான் சமையல்.அதேபோன்று, உடலுக்கு கேடு விளைவிக்கக்கூடிய வேதிப்பொருட்களை சேர்ப்பதும் இல்லை.
தொடக்கத்தில் சமையலுக்குத் தேவையான பாத்திரங்கள், இருக்கைகள் எல்லாம் வாடகைகக்கு வாங்கிப் பயன்படுத்தி வந்தேன். பின்னாளில், படிப்படியாக பாத்திரங்கள் திருடுபோனதால் தற்போது அவற்றை விற்றுவிட்டு சமையல் வேலைக்கு மட்டும் செல்கிறேன். அதிகபட்சம் 2 ஆயிரம் கிலோ கறிவரை ஒரே இடத்தில் சமைத்துள்ளேன். ஆயிரம் கிலோ கறிக்கு சுமார் 40 பேர் சமையல் மற்றும் பரிமாறுவதற்கு தேவைப்படுவார்கள். பறிமாறுவதற்கு ஆட்கள் பற்றாக்குறை இருந்தால் கேட்டரிங் கல்லூரியில் இருந்து மாணவர்களை அழைத்து பயன்படுத்துவோம்.
அதேபோன்று, இந்த மாவட்டத்தில் உள்ள பிரலமானவர்கள் மற்றும் அவர்களால் அறிமுகப்படுத்தக்கூடியவர்கள் என அனைவருக்கும் நானே சமையல் செய்துள்ளேன். வெளி மாவட்டங்களிலும் சமையலுக்கு சென்றுள்ளேன். இந்தப் பகுதியில் ஆண்டுக்கு 3 மாதங்கள் மொய் விருந்து விழா நடத்துவதால்தான் இந்த அளவுக்கு சமையலர்கள் உருவாகியுள்ளனர்.
சமையலர்களுக்கு மட்டுமல்ல, வாழை இலை, காய்கனி, இறைச்சி வியாபாரி, பந்தல் அமைப்பாளர், பத்திரிக்கை, வாடகை பாத்திரம் உள்ளிட்ட பலருக்கும் வேலை வாய்ப்பு அளிக்கப்படுகிறது. ஏன், மிகப்பெரிய படிப்பு படித்தவர்கள்கூட சம்பளத்துக்கு மொய் எழுதுவார்கள். 'படிக்காதவன், மாடுமேய்க்கக்கூட லாயக்கில்லை' என்று அடித்து துரத்தப்பட்டதன் வலிதான், என்னால் இன்று நூற்றுக்கணக்கானோருக்கு சுய வேலைவாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்க முடிந்துள்ளது'' என்கிறார் பெருமிதத்தோடு சமையல் கலைஞர் பழனி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT