Published : 29 Jul 2022 03:38 PM
Last Updated : 29 Jul 2022 03:38 PM
உலகளவில் வயிற்றுப்போக்கால் ஆண்டுதோறும் 1.30 மில்லியன் குழந்தைகள் உயிரிழந்து வருவதாக திருச்சி அரசு மருத்துவமனை குழந்தைகள் நல மருத்துவர் ஜி.எஸ்.வைரமுத்து தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறியது: உலக அளவில் வயிற்றுப்போக்கால் ஆண்டுதோறும் 5 வயதுக்குட்பட்ட 1.3 மில்லியன் குழந்தைகள் உயிரிழந்து வருகின்றனர். அதிலும் பாதி உயிரிழப்புகள் இந்தியா, நைஜீரியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், எத்தியோப்பியா போன்ற நாடுகளில்தான் நிகழ்கின்றன.
வயிற்றுப்போக்கால் உடலில் நீர்ச்சத்து குறையும்போது உயிரிழப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது என்பதால், வயிற்றுப் போக்கு ஏற்படும்போது உப்பு சர்க்கரை கரைசல்(ஓஆர்எஸ்) வழங்கப்படுகிறது. இது உடலுக்கு தேவையான சத்துகளை அளித்து உயிரிழப்பை தடுக்கிறது. இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 29-ம் தேதி உலக உப்பு சர்க்கரை கரைசல் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
வயிற்றுப்போக்கின் 3 நிலைகள்: குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப் போக்கை மூன்று நிலைகளாக பிரிக்கிறோம். முதல் நிலையில் லேசான சோர்வு,அயர்ச்சி ஆகியவை இருக்கும். அதற்குவீட்டிலேயே உள்ள அரிசி கஞ்சி, காய்கறி சூப், இளநீர் ,மோர் போன்றவற்றை கொடுக்கலாம்.
2-வது நிலையில் குழந்தைகளுக்கு நா வறட்சி, தண்ணீர் தாகம் அதிகம் இருக்கும். இதற்கு, ஓஆர்எஸ் என்று சொல்லப்படுகிற உப்பு சர்க்கரை கரைசல் கொடுக்க வேண்டும். இதில் உலகசுகாதார நிறுவனம் பரிந்துரைத்த உப்பு சர்க்கரை கரைசல் ஒரு பாக்கெட்டை, ஒருலிட்டர் நன்கு கொதிக்க வைத்து ஆற வைத்த தண்ணீரில் கலந்து கொள்ளவேண்டும். அதை 24 மணி நேரத்துக்குள் பயன்படுத்த வேண்டும்.
மூன்றாம் நிலை மிகவும் சோர்வாக இருக்கும். அழுதால் கண்களில் தண்ணீர் வராது. தண்ணீர் குடிக்க முடியாது. இது தீவிரமான வயிற்றுப்போக்கு நிலை என்பதால் நரம்பு வழியாக குளுக்கோஸ் செலுத்த வேண்டும். இவ்வாறு செய்வதால் வயிற்றுப் போக்கால் ஏற்பட்ட சோர்வு தடுக்கப்படும், வயிற்றுப்போக்கும் நிற்கும். இதனால் வயிற்றுப்போக்கால் ஏற்படும் உயிரிழப்புகள் முற்றிலும் தடுத்து நிறுத்தப்படும்.
வயிற்றுப்போக்கை தடுக்க... வயிற்றுப்போக்கு ஏற்படாமல் தடுக்க குழந்தைகளுக்கு ரோட்டா வைரஸ் தடுப்பூசி போடலாம். மேலும், சத்தான உணவுகளை அளிக்க வேண்டும். காய்ச்சி ஆறிய தண்ணீரை கொடுக்கலாம். வெளி உணவுகளை தவிர்க்க வேண்டும். இதனால் வயிற்றுப்போக்கால் குழந்தை உயிரிழப்பதை தடுக்க முடியும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT