Published : 26 Jul 2022 06:40 PM
Last Updated : 26 Jul 2022 06:40 PM
‘கர்நாடகா முட்டையை மதிய உணவுத் திட்டத்தில் கொடுப்பது தவிர்க்கப்பட வேண்டும்’ என்று ஓர் அறிக்கையைத் தயாரித்து, மாநில அரசிடமும் தேசியக் கல்வி ஆராய்ச்சி - பயிற்சி நிறுவனத்திடமும் (NCERT) சமர்ப்பித்துள்ளது. இந்தக் கருத்து பொதுவெளியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது; மருத்துவர்களிடமிருந்தும் எதிர்ப்பு உருவாகியுள்ளது. இது குறித்து மருத்துவ அறிவியல் என்ன சொல்கிறது?
முட்டை வழங்கப்படுவது ஏன்? - இந்தியாவில் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் கடந்த கால்நூற்றாண்டுக்கும் மேலாக மதிய உணவுத் திட்டத்தில் குழந்தைகளுக்கு முட்டை வழங்கப்படுவது நடைமுறையில் உள்ளது. இதன்படி தமிழ்நாட்டில் வாரத்துக்கு 3 முட்டைகள் வழங்கப்படுகின்றன.
முட்டை முழுமையான உணவு. எல்லோருக்கும் எளிதாகக் கிடைக்கிற, விலை மலிவான, ஆரோக்கியமான உணவு. இதனால்தான் குழந்தைகளுக்கு மதிய உணவில் முட்டை கொடுக்கப் பரிந்துரைக்கப்படுகிறது.
‘குழந்தைகள் தினமும் முட்டை சாப்பிட்டால் உடற்பருமன் ஏற்படும்’ என்று கர்நாடக அரசிடம் தரப்பட்ட அறிக்கை தவறானது. முட்டை ஒரு கொழுப்பு ஆயுதமல்ல; அது ஒரு புரதப் பொட்டலம். புரதம் என்பது குழந்தைகளின் தசை வளர்ச்சிக்குத் தேவைப்படுகிற ஒரு பேரூட்டச்சத்து (Macronutrient).
முக்கியமாக, சவலைநோய்க்கு முடிவு கட்டுகிற சத்து. குழந்தைகளுக்கு மட்டுமல்ல, பெரியவர்களுக்கும் உடற்பருமனைக் கொண்டுவருவது வெள்ளை அரிசி, வெள்ளைச் சர்க்கரை உள்ளிட்ட மாவுச்சத்துதான். ஆனால், முட்டையில் மாவுச்சத்து மிகவும் குறைவு. 100 கிராம் கோழிமுட்டையில் புரதச்சத்து 12.6 கிராம் இருக்கிறது. ஆனால், மாவுச்சத்து 1.12 கிராம்தான்.
அடுத்து, ‘முட்டையில் இருக்கிற வெள்ளைக்கரு மொத்தமும் புரதம், மஞ்சள்கரு மொத்தமும் கொழுப்பு என்று ஒரு தவறான புரிதலும் இருக்கிறது’. அப்படியில்லை. வெள்ளைக்கரு, மஞ்சள்கரு இரண்டிலும் சம அளவில் புரதம்தான் இருக்கிறது. வெள்ளைக்கருவோடு மஞ்சள்கருவையும் சேர்த்து எடுத்துக்கொண்டால்தான் அதிலிருக்கிற மொத்தப் புரதமும் முழுவதுமாகக் கிடைக்கும்.
உச்சம் தொடும் ‘உயிரிய மதிப்பு’
பல உணவு வகைகளில் புரதம் இருக்கிறது. ஆனால், முட்டையில் இருக்கிற புரதத்துக்குத் தனிமதிப்பு உண்டு. முட்டையின் ‘உயிரிய மதிப்பு’ 95 சதவீதம். மற்ற புரத உணவுகளுக்கெல்லாம் இந்த மதிப்பு 60 முதல் 70 சதவீதம்தான்.
சூரிய ஒளிக்கு அடுத்ததாக நமக்கு வைட்டமின்-டியை அதிகம் கொடுப்பது முட்டைதான். இதிலுள்ள கால்சியம், பாஸ்பரஸ் போன்றவை எலும்பு - பல் ஆரோக்கியத்தைக் காக்கும். வைட்டமின்-பி2, பி12 ரத்த உற்பத்திக்குப் பயன்படும். வைட்டமின்-இ பாலினச் சுரப்புகளை மேம்படுத்தும். இரும்பு ரத்தவிருத்திக்கு உதவும்; ரத்தசோகையைத் தடுக்கும். அயோடின் தைராய்டு குறைபாடு வராமல் பார்த்துக்கொள்ளும். பென்டோதெனிக் அமிலம் இளநரை ஏற்படுவதைத் தடுக்கும்; நினைவாற்றலை வளர்க்கும்.
முட்டையில் இருக்கிற கொழுப்பு உடலை வலுப்படுத்துமே தவிரப் பாதிக்காது. இதில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் இருக்கிறது. இது இதயத்துக்கு நல்லது. 100 கிராம் முட்டையில் கொலஸ்டிரால் 373 மி.கிராம் இருக்கிறது. ஆனால், நமக்குத் தினமும் 2,000 மி.கிராம் கொலஸ்டிரால் தேவைப்படுகிறது. ஆகவே 9 மாதம் முதலே குழந்தைகளுக்குத் தினமும் ஒரு முட்டை கொடுப்பது நல்லது. சவலைநோயுள்ளவர்களுக்குத் தினமும் 2 முட்டை கொடுக்கலாம்.
> இது, பொதுநல மருத்துவர் கு.கணேசன் எழுதிய இந்து தமிழ் திசை ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்
> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க - டிஜிட்டல் சந்தா திட்டங்கள்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT