Published : 19 Jul 2022 06:43 PM
Last Updated : 19 Jul 2022 06:43 PM
அண்மையில், கடல் கீழ் நிலப்பரப்பைக் காண்பிக்கும் ‘ஜெப்கோ’ படங்களைக் கொண்டு புவித்தகவல் அமைப்பு மென்பொருள் மூலம் கன்னியாகுமரிக்குத் தெற்கே குமரிக்கண்டம் விவரிக்கப்பட்ட பகுதிகளில் கடல் கீழ் நிலப்பரப்பை முப்பரிமாணமாக வடிவமைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அந்த ஆய்வில் சங்க இலக்கியங்களிலே விவரிக்கப்பட்ட குமரிக்கண்டத்தின் புவிப்பரப்பியல் தெளிவாகத் தெரிகிறது. கன்னியாகுமரிக்கு மேற்கே தற்போதைய பரளியாற்றின் கழிமுகத்திலிருந்து தெற்காக சுமார் 400 கி.மீ. மிகப் பெரிய பள்ளத்தாக்கை ஏற்படுத்தி ஓடி, பின்னர் 500 கி.மீ. தூரத்துக்குச் சமவெளியில் கிழக்காகத் தெரியும் ஆறு, பஃறுளி ஆறு என்றே தெரிகிறது.
இதே போன்று குமரிமுனைக்குக் கிழக்கே தற்காலக் குமரியாற்றின் கழிமுகத்திலிருந்து தெற்கு-தென்கிழக்காகச் சுமார் 300 கி.மீ. தூரம் ஆழமான பள்ளத்தாக்கை ஏற்படுத்தி, மேலும் சுமார் 500 கி.மீ. சமவெளியில் ஓடியிருக்கும் நதி குமரி ஆறு என்று தெரிகிறது.
வைகை இதற்கு வடக்கே தற்போதைய கழிமுகத்திலிருந்து தெற்காகச் சுமார் 400 கி.மீ. தூரம் வரை மிக ஆழமான பள்ளத்தாக்கை ஏற்படுத்தி ஓடி, பின்னர் சற்றே கிழக்காக மேலும் 300 கி.மீ. ஓடி, இலங்கைக்குத் தெற்கே சமவெளியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியாவையும் இலங்கையையும் வடக்கு-தெற்காகப் பிரித்து ஓடும் வைகைப் பள்ளத்தாக்கில் தாமிரபரணி நதி இணைவதை ‘ஜெப்கோ’ படங்கள் காட்டுகின்றன.
பஃறுளி ஆற்றுக்கும், குமரி ஆற்றுக்கும் இடையே வடக்குத் தெற்காகக் காணப்படும் தென் கன்னியாகுமரி மலைகளை ஏழ் மதுரை நாடுகள் என்று கணிக்கலாம்.
மணிமேகலையில் விவரிக்கப்பட்ட கடல்கோள்களை ஜெப்கோ படம் கணித்ததை முப்பரிமாணக் கடல் கீழ் புவிப்பரப்பியல் மீது காட்சிப்படுத்திப் பார்க்கும்போது, கடல்கோள்களால் சிறிதுசிறிதாகப் பாண்டியர்கள் வடக்கு நோக்கி நகர்ந்திருக்கக்கூடும் என்று தெரிகிறது.
அப்படி நகர்ந்தபோது, வைகை-தாமிரபரணி பள்ளத்தாக்கைப் பாதைகளாக அவர்கள் பயன்படுத்தியிருப்பதற்கான சாத்தியமும் தென்படுகிறது. இந்தப் பின்னணியில் கடல்கோள் ஆழிப்பேரலையாக ஆகும்போது, குமரிக்கண்ட மக்களும், தளவாடங்களும் தாமிரபரணி பள்ளத்தாக்கில் தள்ளப்பட்டு, அதன் குவியலே ஆதிச்சநல்லூரில் தென்படுகின்றன என்கிற யூகங்களும் எழுகின்றன.
மேற்கூறியவை அனைத்தும் கன்னியாகுமரிக்குத் தெற்கே ஒரு நிலப்பகுதி இருந்திருக்கிறது என்பதைக் காட்டுகின்றன. ஆனால், பண்டைய அறிஞர்கள் கருதியதைப் போல் மிகப் பெரிய நிலப்பரப்பாக மடகாஸ்கர் - அண்டார்க்டிகா - ஆஸ்திரேலியா வரை பரவியில்லாமல் மேற்கே மகேந்திரபுரம் மலைத் தொடரிலிருந்து, கிழக்கே தென் கன்னியாகுமரி மலைகள் வரை பரவியிருப்பதை ஜெப்கோ படங்கள் காட்டுகின்றன.
எக்கோ பீம் சௌண்டர் சர்வே மூலம் கடல் புவிப்பரப்பியலை ஆராய்ந்தால், அதன் மூலம் கடல் கீழ் தரைமட்டத்தில் உள்ள கலாச்சாரச் சின்னங்களை வெளிக்கொணர்வதோடு, அதன் பின்னர் பூபௌதீக ஆய்வுகள் மூலம் புதையுண்ட மனிதக் குடியிருப்புகளையும் கண்டுபிடிக்க முடியும்.
அதன் தொடர்ச்சியாக, தொல்லுயிர் எச்சங்களையும் அவற்றின் காலத்தையும் கார்பன் காலக் கணிப்பு மூலம் கண்டறிந்து, குமரி மனிதர்களின் பரிணாம வளர்ச்சி, அவர்கள் வடக்கே நகர்ந்த பாதைகள் ஆகிவற்றையும் வெளிக்கொணர முடியும்.
> இது, முனைவர் சோம.இராமசாமி, ஜெ.சரவணவேல் எழுதிய இந்து தமிழ் திசை ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்
> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க - டிஜிட்டல் சந்தா திட்டங்கள்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT