Published : 15 Jul 2022 04:17 PM
Last Updated : 15 Jul 2022 04:17 PM
ஜெனிவா: பாலின சமத்துவ இடைவெளி தொடர்பான உலக நாடுகளின் தரவரிசைப் பட்டியலை உலகப் பொருளாதார மன்றம் வெளியிட்டிருக்கிறது. இதில் இந்தியா மிகவும் பின்தங்கியுள்ளது.
2022-ஆம் ஆண்டுக்கான பாலின சமத்துவ இடைவெளி பற்றிய அறிக்கை ஒன்றை உலக பொருளாதார மன்றம் ஜெனிவாவில் புதன்கிழமை வெளியிட்டது. இதில் 146 நாடுகளில் இந்தியாவுக்கு 135-வது இடம் கிடைத்துள்ளது.
இந்தப் பட்டியலில் இந்தியாவுக்குப் பின்னால் ஆப்கானிஸ்தான், ஈரான், பாகிஸ்தான், காங்கோ போன்ற நாடுகள் இடம்பெற்றுள்ளன.
இந்தியாவின் அண்டை நாடுகளான வங்கதேசம் 71-வது இடத்திலும், நேபாளம் 96-வது இடத்திலும், இலங்கை 110-வது இடத்திலும், பாகிஸ்தான் 145-வது இடத்திலும் உள்ளன.
பாலின சமத்துவ இடைவெளியில் ஐஸ்லாந்து தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து அடுத்த இடங்களில் பின்லாந்து, நார்வே , நியூசிலாந்து, ஸ்வீடன் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. தரவரிசை பட்டியலில் முதல் பத்து இடங்களில் ருவாண்டா, நமிபியா என இரண்டு ஆப்பிரிக்க நாடுகள் இடம்பெற்றுள்ளன.
இஸ்லாமிய நாடுகளான சவுதி அரேபியா 127-வது இடத்திலும், எகிப்து 129-வது இடத்திலும், குவைத் 130-ஆம் இடத்திலும் உள்ளன.
மேலும் "உடல்நலம் மற்றும் உயிர் வாழ்வு" அட்டவணையில் இந்தியாவுக்கு 146-வது இடம் கிடைத்துள்ளது.
எனினும், இந்தியாவில் சட்டமன்ற உறுப்பினர்கள், மூத்த அதிகாரிகள் மற்றும் மேலாளர்கள் போன்ற பதவிகளில் பெண்களின் பங்களிப்பு 14.6%-லிருந்து 17.6% ஆகவும், தொழில்முறை மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களாக பெண்களின் பங்ககளிப்பு 29.2%-லிருந்து 32.9% ஆகவும் அதிகரித்துள்ளது.
உலகப் பொருளாதார மன்றத்தின் இந்த அறிக்கை, 5 பரிமாணங்களில் பாலின சமத்துவத்தை ஆய்வு செய்திருக்கிறது. அவை பொருளாதார பங்கேற்பு, வாய்ப்பு, கல்வி அடைதல், ஆரோக்கியம் மற்றும் உயிர்வாழ்வு மற்றும் அரசியல் அதிகாரம்.
அத்தியாவசிய விலைகளின் விலை உயர்வு, உலகளவில் பெண்களை பெரிதும் பாதித்துள்ளது என்றும், இதில் கரோனா காலம் பாலின சமத்துவத்தை ஒரு தலைமுறைக்கு பின்னால் இழுந்துச் சென்றுவிட்டது என்றும் இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT