Published : 13 Jul 2022 02:09 PM
Last Updated : 13 Jul 2022 02:09 PM
சென்னை: முஸ்லிம்களின் பக்ரீத் பண்டிகை மீதான மதநல்லிணக்க நிகழ்ச்சி, சென்னை மேல் அயனம்பாக்கத்தின் வேலம்மாள் வித்யாலாயா இணைப்பு பள்ளியில் நடைபெற்றது. இதில் சென்னையின் கிரசண்ட் பல்கலைகழகத்தின் உதவிப் பேராசிரியர் எஸ்.சபா முக்கிய விருந்தினராக கலந்துகொண்டு சொற்பொழிவாற்றினார்.
மதசார்பற்ற ஜனநாயக நாடாக இருப்பது நம் இந்தியா. இதில், இந்து, முஸ்லிம், கிறித்துவர், சீக்கியர், ஜெய்னம், புத்தம் உள்ளிட்டப் பல்வேறு வகை மதத்தினர் வாழ்கின்றனர். இதனால், பொதுமக்கள் அனைவரும் மற்ற மதத்தினரை பற்றி அறிந்து கொண்டு மதநல்லிணக்கத்தை வளர்ப்பது அவசியமாகிறது.
இதற்காக, பல மதத்தினர் கொண்டாடும் பண்டிகைகளை பற்றியும் அறியும் தேவை உள்ளது. குறிப்பாக இதை பள்ளி மாணவர்கள் அனைத்து மதத்தினரின் பண்டிகைகளை பற்றி அறிவது அவசியமாகிறது. இதை உணரும் அரசு, தனியார் பள்ளிகள் தம் மாணவர்களுக்கு இதர மதத்தின் பண்டிகைகளை பற்றிய விழிப்புணர்வு அளிப்பது உண்டு. கடந்த ஜூலை 10-ம் தேதி கொண்டாடப்பட்ட முஸ்லிம்களின் பக்ரீத் பண்டிகைகக்கான மதநல்லிணக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், சென்னை மேல் அயனம்பாக்கத்தின் வேலம்மாள் வித்யாலயா இணைப்பு பள்ளியிலும் பக்ரீத் மீதான மநதல்லிணக்கச் சொற்பொழிவு மாணவர்களுக்காக நடத்தப்பட்டது. இதை சென்னையின் கிரசண்ட் பல்கலைகழகத்தின் சட்டத்துறையின் உதவிப் பேராசிரியர் எஸ்.சபா வழங்கினார்.
இந்நிகழ்ச்சியின் முக்கிய விருந்தினருமான சட்டத்துறை உதவி பேராசிரியர் எஸ்.சபா நிகழ்ச்சியில் ஆற்றிய உரையில் பேசியதாவது: "இறைத்தூதர்களில் ஒருவரான இப்ராஹிம் தன் மகனை பலி கொடுக்க முன்வந்த சம்பவம் தான் பக்ரீத்.
தம் இறைவனான அல்லாவை நம்பிய இப்ராகிமிற்கு ஆட்டை பலி கொடுக்கும்படி உத்தரவிடப்பட்ட தினத்தை முஸ்லிம்கள் பக்ரீத் எனத் தியாகத் திருநாளாக வருடந்தோறும் கொண்டாடுகின்றனர்.
இந்த சம்பவத்தில், எந்த ஒரு பொருள் மீதும் அதிக அன்பும், ஆர்வமும் காட்டக் கூடாது என்ற கருத்து வெளியாகிறது. இந்த வீட்டு விலங்கு குர்பானியின் மூலம், இயற்கையின் வாழ்க்கை சக்கரம் பாதிக்கப்படாமல் சமமாகத் தொடர்கிறது.
குர்பானி இறைச்சியின் மூன்றில் ஒரு பகுதியை ஏழைகளுக்கும் அளிக்க வேண்டும் என்பது கட்டாயம். இதன் காரணமாக சமூகத்தின் ஏழைகள் பலனடைவார்கள், தானதர்மம் அளிக்கும் வழக்கமும், மதநல்லிணக்க உணர்வும் பொதுமக்களிடம் வளரும் என்பது ஒரு வழக்கறிஞராக என்னால் பார்க்க முடிகிறது" எனத் தெரிவித்தார்.
உதவிப்பேராசிரியர் சபாவின் இந்த உரை தம் மாணவர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றதாக அந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த பள்ளி முதல்வர் காஞ்சனமாலா தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், இறைத்தூதர் இப்ராகிமின் தியாகச் சம்பவத்தை நாடகமாகவும் மாணவர்கள் நடத்திக் காட்டினர். இதுபோல், ஒவ்வொரு மதத்தினரின் முக்கியப் பண்டிகைகள் குறித்து பள்ளி மாணவர்கள் இடையே விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும், மதநல்லிணக்கச் சொற்பொழிவுகளும் வேலம்மாள் பள்ளிகளில் நடத்துவது வழக்கமாக உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT