Published : 12 Jul 2022 08:48 PM
Last Updated : 12 Jul 2022 08:48 PM
மதுரை: நாட்டு மாட்டுச் சாணத்திலிருந்து கழுத்தில் அணியும் பாசி மாலை எனும் மதிப்புக்கூட்டிய பொருட்களை உருவாக்குவதன் மூலம் ஒரு கிலோ சாணத்திற்கு ரூ.300 விலை கிடைப்பதாக இயற்கை விவசாயி பா.கணேசன் தெரிவித்தார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெருங்காமநல்லூரைச் சேர்ந்தவர் பா.கணேசன் (வயது 52). இயற்கை விவசாயியான இவர் நாட்டு மாட்டுச் சாணம் மற்றும் கோமியத்திலிருந்து 100-க்கும் மேற்பட்ட கலைப்பொருட்களை உருவாக்கி விற்பனை செய்து வருகிறார். அதனைத் தொடர்ந்து தற்போது கழுத்தில் அணியும் பாசிமாலைகளையும் உருவாக்கி வருகிறார். இதன் மூலம் ஒரு கிலோ சாணத்திலிருந்து ரூ.300 மதிப்பிலான கலைப்பொருட்களை உருவாக்கியுள்ளார்.
இதுகுறித்து இயற்கை விவசாயி பா.கணேசன் கூறியது: ''இயற்கை முறை விவசாயத்திற்கு நாட்டு மாடுகள் அவசியம். விவசாயத்திற்கு தேவையான இயற்கை உரங்கள், இடுபொருட்கள் நாட்டு மாட்டுச்சாணம், கோமியத்திலிருந்து தயாரித்து வருகிறேன். எஞ்சிய சாணங்களிலிருந்து 100-க்கும் மேற்பட்ட கலைப்பொருட்களை உருவாக்கி வருகிறேன்.
தற்போது கழுத்தில் அணியும் பாசிமாலைகளை உருவாக்கி வருகிறேன். நாட்டு மாட்டுச் சாணம், கோமியத்தை மட்டுமே பயன்படுத்தி கைவேலைப்பாடாகவே தயாரித்து வருகிறேன். அதில் 31 பாசிகள், 54 பாசிகள், 108 பாசிகள் அடங்கிய மாலை தயாரித்து வருகிறேன். அதோடு டாலர்கள் இணைத்தும் மாலை அணியலாம்.
இந்த மாலை நெகிழிக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்தது. தியானம், ஆன்மிக தலங்களுக்கு செல்லும்போது இந்த மாலையை அணிந்து செல்லலாம். இம்மாலை உபயோகத்திற்குப்பின் மண்ணுக்கு உரமாகிறது. இதன்மூலம் ஒரு கிலோ சாணத்தை ரூ.300-லிருந்து ரூ.500 வரை விற்க வாய்ப்புள்ளது. தற்போது இதனை விரும்பி அணிவதால் அதிக எண்ணிக்கையில் உற்பத்தி செய்து வருகிறேன்'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT