Published : 11 Jul 2022 09:00 AM
Last Updated : 11 Jul 2022 09:00 AM
மரச் சிற்ப தொழிலை நவீனப்படுத்த வங்கிக் கடனுதவிகள் வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என மரச்சிற்பம் வடிவமைக்கும் நாமக்கல்லைச் சேர்ந்த அங்குராஜ் என்ற சிற்பக் கலைஞர் தெரிவித்தார்.
நாமக்கல் அருகே கூலிப்பட்டியில் கல் சிற்பங்கள் வடிவமைப்பவர்கள் அதிகளவில் உள்ளனர். அவர்களுக்கு மத்தியில் அதே பகுதியைச் சேர்ந்த அங்குராஜ் (25)என்ற இளைஞர் மரங்களில் நேர்த்தியான முறையில் சிலை வடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துவருகிறார்.
இதுகுறித்து அங்குராஜ் கூறியதாவது;
பட்டயக் கல்வி படித்துள்ளேன். எனினும் மரச்சிற்பம் செய்யும் ஆர்வம் சிறு வயது முதல் இருந்தது. அதனால் தந்தையுடன் நானும் இதுதொழிலில் ஈடுபடத் தொடங்கினேன். கோயில்களில் திருவிழாக் காலங்களில் சுவாமி உருவங்களை வீதி உலா கொண்டு செல்ல தகுந்த வாகனங்கள் மரத்தினால் செய்யப்படுகின்றன.
குதிரை வாகனம், அன்னம் வாகனம், மயில் வாகனம், சிங்கம் வாகனம் மற்றும் தேர், காவடி, சப்பரம், ஊஞ்சல், கோயில் கதவுகள் என கோயில்களுக்குத் தேவையான அனைத்து மர வேலைகளும் இங்கு செய்யப்படும்.
இச்சிற்பங்கள் அனைத்தும் மாவுலிமரம், அத்திமரம், வாகை மரங்களில் செய்யப்படுகிறது. பெரும்பாலும் மர சிற்பங்கள் மாவுலி மரத்தில் செய்யப்படுகின்றன. சுவாமி வாகனம் செய்ய குறைந்த பட்சம் 3 மாதங்கள் ஆகும்.
மரச் சிற்பங்கள் செய்யத் தேவைப்படும் மரங்களை, பச்சையாக இருக்கும்போதே தேவையான வடிவத்திற்கு செய்துகொண்டு, அந்த மரம் நன்கு காய்ந்த பிறகு நிறைவுப் பணிகளை செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் மரச்சிற்பம் நீண்ட நெடுங்காலத்திற்கு பொலிவு குன்றாமல் இருக்கும்.
தற்போது கரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு கோயில்களில் திருவிழாக்கள் நடத்தப்படுவதால், மரச் சிற்பங்கள், சுவாமி உலா வரும் வாகனங்கள் செய்ய ஆர்டர்கள் கிடைத்து வருகின்றன. மத்திய-மாநில அரசுகள் இந்தத் தொழிலை நவீனப்படுத்த வங்கிக் கடனுதவிகள் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT