Published : 06 Jul 2022 04:20 PM
Last Updated : 06 Jul 2022 04:20 PM
நான் அவ்வப்போது தனியாக இருப்பதாலும் , என்னை நன்கு அறிந்த நபர் நான் மட்டுமே என்பதாலும்.. நான் என்னையே வரைந்தேன் - பிரீடா காலோ
மெக்சிகோ சிட்டியிலிருந்த பள்ளியிலிருந்து வீடு திரும்பி கொண்டிருக்கையில் நிகழ்ந்த விபத்தில் பிரீடா காலோ பலத்த காயமடைகிறார். இந்தக் காயங்களே எதிர்காலத்தில் அவர் வரைந்த ஓவியங்களுக்கான கருவை அளிக்கின்றன.
ஓவியர், பெண்ணியவாதி, கம்யூனிஸ்ட் என்ற பல முகங்களை கொண்ட பிரீடா காலோ,மெக்சிகோவில் 1907-ஆம் ஆண்டு பிறந்தவர். சிறுவயதில் போலியோவால் பாதிக்கப்பட்ட பிரீடா படுக்கைக்கு தள்ளப்பட்டார். எனினும் இடையூறுகளை தகர்த்து தன் பள்ளி படிப்பை அவர் தொடர்ந்தார்.
சிறுவயதிலேயே பிரீடா தைரியமான பெண்ணாக இருந்தார். பிரீடாவின் இக்குணத்தை கண்ட அவரது தந்தை, பிரீடாவை நீச்சல் கற்கவும், குத்துச் சண்டை கற்கவும் உற்சாகப்படுத்தினார். அப்போதுதான் அந்த பெரும் விபத்து நடந்தது. பள்ளிலிருந்து வீடு திரும்பி கொண்டிருக்கையில் பிரீடா சென்ற பேருந்து காரின் மீது மோதியதில் அவரது முதுகு தண்டுவடம், கழுத்து போன்ற பகுதிகள் பலத்த சேதம் அடைந்தன. அந்த விபத்தினால் அவர் மீண்டும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
சுமார் மூன்று மாதங்கள் அவர் சிகிச்சை பெற்றார். இந்தக் காலக்கட்டத்தில்தான் பிரீடாவுக்கு ஓவியத்தின் மீது ஈர்ப்பு வந்தது. அந்தக் காலக்கட்டத்தை ஓவியங்களுடனேயே அவர் கழித்தார். தெளிவாகக் கூற வேண்டும் என்றால் படுக்கையில் படுத்துக் கொண்டே பல ஓவியங்களை பிரீடா வரையத் தொடங்கினார்.
தன்னையயே வரைந்தார்: பிரீடாவின் ஓவியங்களில் மிகப் பிரபலமானது சுய ஓவியங்கள். பீரிடாவின் ஓவியங்கள் பெரும்பாலும் அவரை பற்றியதாகத்தான் இருந்தது. அவரது வலிகளை அவர் வரைந்தார். பள்ளி பருவத்தில் விபத்தினால் தன் உடலில் உண்டான நிரந்தர வலியை உணர்த்தும் வகையில் 1944 ஆம் ஆண்டு ’The Broken Column’ என்ற ஓவியத்தை பிரீடா வரைந்திருந்தார். பிரீடாவின் பிரபலமான ஓவியங்களில் இது முக்கியமானது.
இது மட்டுமல்லாது ’My Dress Hangs There’,’Self-Portrait on the Borderline Between Mexico and the United States’ போன்ற பீரிடாவின் ஓவியங்கள் இன்றளவு பேசப்படுகின்றன.
அவர் தனக்கு தோன்றிய அனைத்தையும் வரைந்தார். ஓவியங்களுக்கான குறிப்பட்ட வரையறையை அவர் வைத்துக் கொள்ளவில்லை. வரையறைகளை அவர் எதிர்த்தார். அவரது ஓவியங்கள் இலக்கற்றவை, கட்டுப்பாடுகளற்றவை. ஆனால் அவை உலகின் யதார்த்தத்தை மட்டுமே பேசியது. ஆம் பிரீடா தான் எதிர் கொண்ட யதார்த்ததை வரைந்தார். அதுவே வரலாற்றில் அவரை சிறந்த ஓவியராகவும் மாற்றியது.
உடல், மனநலம் தடைகள் அத்தனையும் தாண்டி தொடர்ந்து தனது வலிகளை தனது ஓவியங்களில் பிரீடா கொண்டு வந்தார். தனித்துவமான அவரது ஓவியங்களே அவருக்கு உலக முழுவதும் புகழை பெற்றுத் தந்தன. அதன் பொருட்டே பீரிடாவின் ஓவியங்கள் இன்றளவும் பேசப்பட்டு கொண்டிருக்கின்றன.
காதலும் - அரசியலும்: தன்னை இருபால் ஈர்ப்பாளராகவும், கடவுள் மறுப்பாளராகவும் பீரிடா வெளிப்படையாக அறிவித்தார். மெக்சிகோ மக்களுக்காகவும், அவர்களது உரிமைகளுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்தார். அவர்களுக்காக தொடர் போராட்டங்களிலும் அவர் ஈடுபட்டார். பிரீடா மெசிக்கோவின் கலாச்சாரத்தை மிகவும் நேசித்தார். தன் வாழ்நாள் முழுவதும் தனது சிகை, ஆடை அலங்காரத்தில் பீரிடா அதனையே வெளிப்படுத்தினார்.
பிரீடா, சுவர் ஓவியங்களில் மிக பிரபலமானவராக இருந்த டியாகோ ரிவேராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்துக்குப் பிறகு இருவரும் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். அந்தப் பயணங்களில் உலகம் முழுவதும் நிலவும் வேறுபாடுகளை கண்டு பிரீடா வருத்தம் அடைந்தார். சிறுவயதிலிருந்தே லெனினின் கம்யூனிச தத்துவங்களால் பிரீடா ஈர்க்கப்பட்டதால் அவரால் தான் கண்ட காட்சிகளை எளிதாக கடக்க முடியவில்லை. அவரது தலையில் அவை இடைவிடாது ஓடிக் கொண்டிருந்தன.
நியூயார்க் நகரில் ஏழைகளுக்கும், பணக்காரர்களுக்கும் இடையே இருந்த இடைவெளி பிரீடாவை தொந்தரவு செய்தன.
தான் கண்ட துயர்மிகு காட்சிகளை கடிதங்களாக தனது குடும்பத்திற்க்ய் பிரீடா எழுதி இருக்கிறார். நிமோனியாவால் பாதிக்கப்பட்ட பிரீடா தான் இறப்பதற்கு 14 நாட்கள் முன்னர் கூட, கவுதமாலாவில் அமெரிக்காவின் தலையீட்டை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
மறைவு: ஜூலை 13 ஆம் தேதி, 1954 ஆம் ஆண்டு தனது 47 வயதில் பிரீடா காலோ உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். பிரீடாவின் மரணம் நிகழ்ந்து 60 ஆண்டுகளுக்குப் பின்னரும் அவரது படைப்புகள் மூலமும், அவரது சமூக பணிக்காகவும் அவர் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறார்.
வெறும் ஓவியராகவும், ஃபேஷன் ஐகானாகவும் பிரீடாவை சுருக்கிவிட பலரும் தற்போது முயற்சிக்கின்றனர். உண்மையில் அவரது ஓவியங்கள் மட்டுமல்லாது யாருக்கும் அஞ்சாத அவரது அரசியல் குரலுக்காகவும் அவர் தொடர்ந்து நினைவுக்கூரப்பட வேண்டும் அதுவே பிரீடாவுக்கு நாம் அளிக்கும் அங்கீகாரமும் கூட...!
”நான் மலர்களை வரைந்தேன். ஏனெனில் அவை இறப்பதில்லை” - பிரீடா காலோ. அவர் கூறியது அவரது வரலாறு என்று பயணிக்கும்.
ஜூலை 6 - இன்று பீரிடா காலோ பிறந்த தினம்..
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT