Published : 27 Jun 2022 04:07 PM
Last Updated : 27 Jun 2022 04:07 PM

”செல்போன்களால் ஏற்படும் உளவியல் சிக்கலால் உடலில் எதிர்ப்பாற்றல் குறைந்துவிடும்” - சித்த மருத்துவர் கு.சிவராமன்  

தருமபுரி: பெரும் நோய்கள் உடலை நெருங்காத வகையில் வாழ்வியல் மற்றும் உணவு முறைகளை பின்பற்றுவோம் என தருமபுரி புத்தகத் திருவிழாவில் சித்த மருத்துவர் கு.சிவராமன் அறிவுறுத்தினார்.

தருமபுரி மாவட்ட நிர்வாகம் மற்றும் தகடூர் புத்தகப் பேரவை, பாரதி புத்தகாலயம் சார்பில் தருமபுரி அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் தினசரி மாலையில் பிரபலங்கள் பங்கேற்கும் கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் இரவு, ‘ஒரே பூமி, ஒரே வாழ்வு, ஒற்றை நலம்’ என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. இதில், சித்த மருத்துவர் கு.சிவராமன் பேசியதாவது:

நமக்குக் கிடைத்திருப்பது ஒரே வாழ்வு என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும். பெரும் நோய்கள் உடலை நெருங்காத வகையில் வாழ்வியல் மற்றும் உணவு முறைகளைப் பின்பற்றுவோம். நோய் வந்தவர்கள் அவற்றை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வோம். எதிர்ப்பாற்றல் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மருத்துவம் போன்ற படிப்புகளுக்கு பிள்ளைகளை அனுப்ப நினைப்பதை விட அவர்களுக்கு ஆரோக்கியமும், வலிமையும் முக்கியம் என்பதை உணர்வோம். காபி, டீ போன்ற பானங்களில் உடலுக்கு நன்மை தரும் சத்துக்கள் இருந்தபோதும், பாலையும், வெள்ளை சர்க்கரையையும் கலந்து இப்பானங்களை தீமை தரக் கூடியவையாக மாற்றிவிடுகிறோம். ஆவாரை தேநீர் நமது பாரம்பரியம், அது உடலுக்கு பல நன்மைகளை தருகிறது.

சித்தர்கள், ‘தேகராஜன்’ என்று குறிப்பிடும் மூலிகையான கரிசலாங்கண்ணியையும் விட்டுவைக் காமல் களைக்கொல்லி மருந்துகள் கொல்கிறது. ஆபத்தான களைக்கொல்லி மருந்துகளால் மனிதர் களுக்கு புற்றுநோய் வரை பல பாதிப்புகள் ஏற்படுகிறது.

நம் முன்னோர் மாலை 6 மணிக்கு முன்னர் உணவை முடித்துவிட்டு உறங்கச் செல்லும் வழக்கம் கொண்டிருந்தனர். இன்று நாம் நடு இரவிலும் உண்ணுகிறோம். இதுபோன்ற உணவுப் பழக்கம் பல நோய்களை ஏற்படுத்தி உடலின் எதிர்ப்பாற்றலையும் அழித்துவிடும்.

செல்போனை இதர நாட்டினர் அளவுடன் பயன்படுத்துகின்றனர். நாம் மட்டுமே அதை மிக மோசமாக கையாளுகிறோம். செல்போன்களால் மனநலம் பாதிக்கிறது. உளவியல் சிக்கல் கொண்ட மனிதனின் உடலில் எதிர்ப்பாற்றல் இயல்பாகவே குறைந்து விடும். மனிதர்கள் நலமாக வாழ வேண்டுமெனில் மண்ணில் மரங்களும், மண்ணுக்கு கீழே மண் புழுக்களும் வளமாக வாழ வேண்டும். நமக்கு கிடைத்த ஒரே பூமியை காத்து, நமது ஒரே வாழ்வை நலமுடையதாக வாழ அக்கறையுடன் நடந்து கொள்வோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

புத்தகக் கண்காட்சியில் இன்று (27-ம் தேதி) மாலை எழுத்தாளர் ச.தமிழ்செல்வன் பங்கேற்கும் கருத்தரங்கு நடக்கவுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x