Published : 15 Jun 2022 03:10 PM
Last Updated : 15 Jun 2022 03:10 PM

ஆங்கிலத்தில் 35, கணிதத்தில் 36: வைரலாகும் ஐஏஎஸ் அதிகாரியின் 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்

"புத்திக்கூர்மையையும், நற்பண்பையும் சேர்த்தே நல்குவதுதான் கல்வியின் உண்மையான இலக்கு" என்று கூறியவர் மார்டின் லூதர் கிங் ஜூனியர். ஆனால், நம் கல்வி முறை அப்படியான இலக்கைக் கொண்டிருக்கிறதா? பள்ளியில் தொடங்கும் மதிப்பெண்ணுக்கான ஓட்டம் கல்லூரியிலும் நீடிக்கிறது. மதிப்பெண் மட்டும்தான் ஒருவரின் கல்வித்திறனின் உண்மையான அளவீடு என்று நாம் புரிந்து வைத்திருக்கிறோம்.

அதனாலேயே 90%-க்கும் கீழ் உள்ள எந்தவொரு மதிப்பெண்ணும் நமக்கு மதிப்பில்லா பொருளாகிவிடுகிறது. மதிப்பெண் சான்றிதழில் இடம்பெறக்கூடிய பெரிய கூட்டுத்தொகை மட்டும்தானா கல்வி?

இல்லை என்று நிரூபிப்பதற்காக வைரலாகிக் கொண்டிருக்கிறது குஜராத் ஐஏஎஸ் அதிகாரியின் 10-ம் வகுப்புச் சான்றிதழ்.

அவனீஷ் சரண் என்ற அந்த ஐஏஎஸ் அதிகாரி தனது நண்பரும் பரூச் மாவட்ட ஆட்சியருமான துஷார் சுமேராவின் புகைப்படத்தையும் அவரது 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

அந்தப் புகைப்படங்களுக்குக் கீழ், "பரூச் ஆட்சியர் துஷார் சுமேரா 10-ம் வகுப்பில் ஆங்கிலத்தில் 35, கணிதத்தில் 36, அறிவியல் பாடத்தில் 38 மட்டுமே வாங்கியிருந்தார். அவரது கிராமத்தில் மட்டுமல்ல, பள்ளியில் உள்ளவர்களும் கூட துஷார் சுமேரா எதற்கும் லாயக்கற்றவர் என்றே நினைத்தனர். ஆனால், துஷார் சுமேரா இன்று மாவட்ட ஆட்சியர்" என்று எழுதியிருந்தார்.

அந்த மதிப்பெண் சான்றிதழுக்கு கீழ் நிறைய உத்வேகம் தரும் பின்னூட்டங்களும் பகிரப்பட்டுள்ளன. அதில் ஒருவர் "எப்போதுமே உங்களுடைய மதிப்பெண் உங்களுக்கான மதிப்பீடு அல்ல. மதிப்பெண் என்னவாக இருந்தாலும் எதிர்காலத்தை நீங்கள் தீர்மானிக்கலாம்" என்று எழுதப்பட்டுள்ளது.

உண்மைதான்!

தமிழக மாணவர்கள் அடுத்த வாரம் ப்ளஸ் 2 ரிசல்ட்டுக்காக காத்திருக்கிறார்கள். இந்தச் சூழலில் இந்த வைரல் சான்றிதழும் அதற்கான பின்னூட்டங்களும் அவர்களுக்கு நிச்சயமாக உத்வேகம் தரலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x