Published : 14 Jun 2022 01:03 PM
Last Updated : 14 Jun 2022 01:03 PM
கோவை: ஒருவரிடம் இருந்து பெறப்படும் ரத்தத்தை பயன்படுத்தி மூன்று பேர் உயிரைக் காப்பாற்ற முடியும் என்று கோவை மாவட்டம் குருதி பரிமாற்று அலுவலர் கூறியுள்ளார்.
உலக ரத்த கொடையாளர் தினம் இன்று (ஜூன் 14) கடைபிடிக்கப்படுகிறது. சாலை விபத்துகளால் பாதிக்கப்படுபவர்கள், பிரசவ காலம், தலசீமியா நோய் பாதித்த குழந்தைகள், இருதய அறுவைசிகிச்சை, சிறுநீரகம் செயலிழந்தவர்களுக்கான டயாலிசிஸ் என பல வகைகளில் சிகிச்சை அளிக்க ரத்தம் அவசியமாகிறது.
கோவை மாவட்டத்தில் கோவை அரசு மருத்துவமனை, சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ மருத்துவமனை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைகள் என 4 இடங்களில் அரசின் ரத்த வங்கிகள் உள்ளன. இதுதவிர, 18 தனியார் ரத்த வங்கிகள் உள்ளன.
கோவை அரசு மருத்துவமனை ரத்த வங்கி மூலம் மட்டும் சராசரியாக மாதந்தோறும் 1500 யூனிட் ரத்தத்தை சேகரித்து, தேவைப்படும் நோயாளிகளுக்கு அளித்து வருகின்றனர். இதுதொடர்பாக மாவட்ட குருதி பரிமாற்று அலுவலர் மங்கையர்கரசி கூறியது:
தானமாக பெறப்படும் ரத்தத்தை ஒருமாதம் வரையே இருப்பு வைக்க முடியும். மொத்தமாக சேகரித்து வைத்துக்கொள்ள இயலாது. தானம் அளிக்கும் ஒவ்வொருவரிடம் இருந்து தலா 350 மி.லி முதல் 450 மி.லி வரை ரத்தம் சேகரிக்கப்படுகிறது. ஒரு யூனிட் ரத்தத்தை மூன்று பகுதியாக பிரித்து, ரத்த சிவப்பணுக்கள், பிளாஸ்மா, பிளேட்லெட் என பயன்படுத்த முடியும். இதனால் மூன்று பேர் உயிரை ஒருவரால் காப்பாற்ற முடியும்.
எங்கு தானம் அளிக்கலாம்?
ரத்ததானம் அளிக்க விரும்புவோர் விடுமுறை நாட்கள் தவிர்த்து, மற்ற நாட்களில் அரசின் 4 ரத்த வங்கிகளில் ரத்த தானம் அளிக்கலாம். அவ்வாறு ரத்த தானம் அளிப்போருக்கு சான்று வழங்கப்படும். தானமாக பெறப்படும் ரத்த மாதிரியை பரிசோதித்து ஹெபடைடிஸ் பி, சி, எச்ஐவி, மலேரியா போன்ற பாதிப்புகள் இல்லை என உறுதி செய்தபிறகே அந்த ரத்தம் நோயாளிக்கு செலுத்தப்படும்.
18 வயதுக்கு மேற்பட்டவர்கள் ரத்ததானம் அளிக்கலாம். எடைகுறைவாக உள்ளவர்கள், அண்மையில் அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள், நோய்வாய்பட்டவர்கள், ஹீமோகுளோபின் அளவு 12.5-க்கு கீழ் உள்ளவர்கள் ரத்ததானம் அளிக்க முடியாது. 3 மாதங்களுக்கு ஒருமுறை ஒருவர் ரத்த தானம் அளிக்கலாம்.
ரத்தம் அளித்தால் ஆற்றல் குறைந்துவிடும், ரத்தசோகை ஏற்படும் என்பவையெல்லாம் தவறான கருத்துகள். ரத்தம் அளிப்பதால் ரத்தம் ஊறுமே தவிர, குறையாது. மேலும், தானம் அளிக்க பதிவு செய்து, கவுன்சிலிங் முடிந்தபிறகு, 5 நிமிடங்களில் ரத்ததானம் அளித்துவிடலாம்" என்று மங்கையர்கரசி கூறினார்.
பெற்றோருக்கு தேவை விழிப்புணர்வு
கடந்த 8 ஆண்டுகளாக கோவையில் ரத்ததானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்திவரும் 'அன்னை கரங்கள்' சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் உதிரம் கோபி கூறும்போது: "ரத்தம் தேவைப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகமாக உள்ளது. அதற்கேற்ப தானம் வழங்குவோரின் எண்ணிக்கை இல்லை. கரோனா பாதிப்புக்கு பிறகு பலர் தானம் அளிக்க முன்வருவதில்லை. இளைஞர்கள் முன்வந்தாலும் அவர்களின் பெற்றோர் அனுமதிப்பதில்லை.
தங்களுக்கு ஒரு பிரச்சினை என்று வரும்போதுதான், ரத்த தானத்தின் அவசியத்தை பலர் உணர்கின்றனர். எனவே, பெற்றோருக்கு ரத்ததானம் குறித்த புரிதல் அவசியம். இதுவரை, ரத்ததானம் அளித்த யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்பட்டதில்லை. அவர்களால் பல உயிர்கள் காப்பாற்றப் பட்டுள்ளன. எனவே, இளைஞர்கள் ரத்ததானம் அளிக்க முன்வர வேண்டும்" என்று கோபி கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT