Last Updated : 06 Jun, 2022 04:07 PM

 

Published : 06 Jun 2022 04:07 PM
Last Updated : 06 Jun 2022 04:07 PM

சென்னையில் 2 ரூபாய்க்கு ஐஸ் கிரீம்

ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 100 ரூபாயை எப்போதோ தாண்டிவிட்டது. 750 மில்லி பாட்டில் பெப்சி விலை 40 ரூபாயை நெருங்கிவிட்ட்து. ஒரு கிளாஸ் கரும்புச்சாறின் விலை 15 ரூபாய் என உயர்ந்துவிட்டது. இந்த நிலையில், மாம்பலத்தில் உள்ள வினுவின் இக்லூ எனும் ஐஸ்கிரீம் கடை 2 ரூபாய்க்கு ஐஸ்கிரீமை விற்பனை செய்து நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.

இந்த ஐஸ்கிரீம் கடை மேற்கு மாம்பலத்தின் தம்பையா தெருவில் உள்ளது. வெறும் சில்லறை என இன்று ஒதுக்கப்படும் 2 ரூபாயில் இங்கே நீங்கள் வித விதமான சுவைகளில் ஐஸ்கிரீம் வாங்கிச் சுவைக்க முடியும். வெண்ணிலா, ஸ்ட்ராபெர்ரி, மாம்பழம், பிஸ்தா உள்ளிட்ட அனைத்து வகையான சுவைகளிலும் ஐஸ்கிரீம் கிடைக்கிறது. இங்கே ஐஸ்கிரீமுடன் ரசகுல்லாவும் பால்கோவாவும் விற்கப்படுகின்றன.

பின்னணியில் ஒலிக்கும் தமிழ்ப் பாடல்களை மிஞ்சும் அளவுக்கு அங்கே அதிக எண்ணிக்கையில் குவியும் மக்களின் ஆராவாரம் உள்ளது. கடையில் நிற்க இடமில்லாத அளவுக்கு எப்போதும் கூட்டம் அலைமோதுகிறது.

அலைமோதும் கூட்டம்

இந்தக் கடை 1995 இல் தொடங்கப்பட்டது. வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக அப்போது 1 ரூபாய்க்கு ஐஸ்கிரீம் விற்கப்பட்டது. அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. விரைவில் கடையும் பிரபலமானது. சில ஆண்டுகளில் 2 ரூபாயாக விலை உயர்த்தப்பட்டது. அதன் பின்னர் தொடர்ந்து 12 ஆண்டுகளுக்கு அதே விலையில் ஐஸ்கிரீம் விற்கப்பட்டு வந்தது. இதன் காரணமாக, மேற்கு மாம்பலம் மட்டுமல்லாமல்; சென்னை முழுவதும் இது பிரபலமானது.

2008இல் வணீகரீதியிலான சிக்கல்கள் காரணமாக இந்தக் கடை மூடப்பட்டது. அதன் பின்னர், கோடைக்காலம் வரும்போது எல்லாம் இந்தக் கடை மீண்டும் எப்போது திறக்கப்படும் என்கிற எதிர்பார்ப்பில் அந்தப் பகுதி மக்கள் கடந்து செல்வது வாடிக்கையாகிப் போனது.

மீண்டும் 2 ரூபாய்

இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் நீண்டகால எதிர்பார்ப்பை நிறைவேற்றும் விதமாகத் தற்போது மீண்டும் இந்தக் கடை திறக்கப்பட்டுள்ளது. முக்கியமாக, அதே 2 ரூபாய்க்கு ஐஸ்கிரீம் அங்கே விற்பனை செய்யப்படுகிறது.

பொதுமக்கள் மீண்டும் தங்களது குடும்பத்துடன் இந்தக் கடைக்குச் செல்லத் தொடங்கி உள்ளனர். கடையில் எப்போதும் கூட்டம் நிரம்பி வழிகிறது. வாடிக்கையாளர்களின் கட்டுக்கடங்காத கூட்டத்தைச் சமாளிக்கும் விதமாக, வங்கிகளில் உள்ளதைப் போல, அங்கே டோக்கன் சிஸ்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

விலை குறைவு என்றாலும் அவர்கள் ஐஸ்கிரீம் தரத்தில் எவ்விதச் சமரசமும் செய்யவில்லை. . ஐஸ்கிரீம் தயாரிப்பதற்குச் சுத்தமான பாலை மட்டும் பயன்படுத்தி வருவதாக அந்தக் கடையின் உரிமையாளர் வினோத் பெருமிதத்துடன் தெரிவிக்கிறார்.

கோடைக்காலத்தை இதமாக்க எவ்வளவோ குளிர்பானங்கள் இருந்தாலும், ஐஸ்கிரீமுக்கு எப்போதும் தனி மவுசு உண்டு. அதுவும் 2 ரூபாய்க்கு ஐஸ்கிரீம் கிடைத்தால், கேட்கவா வேண்டும்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x