Published : 31 May 2022 03:44 PM
Last Updated : 31 May 2022 03:44 PM
உலக புகையிலை எதிர்ப்பு தினம் என்பது ஒரு நபரின் ஆரோக்கியத்திற்கு அழிவை ஏற்படுத்தக்கூடிய புகையிலையை மெல்லும் அல்லது புகைபிடிக்கும் கெட்ட பழக்கத்தை நாம் திரும்பிப் பார்க்கும் நாளாகும். புகையிலையை மெல்லுதல் அல்லது புகைப்பதால் ஏற்படும் அபாயகரமான விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இது கவனிக்கப்படுகிறது.
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, புற்றுநோய், நுரையீரல் நோய், இருதய நோய் மற்றும் பக்கவாதம் உள்ளிட்ட பல நாள்பட்ட நோய்களுக்கான முக்கிய ஆபத்து காரணிகளில் புகையிலையும் ஒன்றாகும். WHO தரவுகளின்படி, இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் புகையிலையால் 10 லட்சத்து 35 ஆயிரம் இறப்புகள் ஏற்படுகின்றன. திருநெல்வேலி
ஷீபா மருத்துவமனை மற்றும் இ.எஸ்.ஐ.சி மருத்துவமனையில் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணராக பணிபுரியும் மருத்துவர் முகம்மது இப்ராஹிம் புகையிலைப் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகளை விளக்குகிறார்.
“உலக புகையிலை எதிர்ப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 31 அன்று புகையிலை பயன்பாட்டினால் ஏற்படும் உடல்நலம் மற்றும் பிற அபாயங்களை முன்னிலைப்படுத்தவும், உலகளவில் புகையிலை நுகர்வைக் குறைக்க பயனுள்ள கொள்கைகளை பரிந்துரைக்கவும் ஏற்பாடு செய்யப்படுகிறது. WNTD (World No-Tobacco Day) ஆனது 1987-இல் உலக சுகாதார நிறுவனத்தால் (WHO) உருவாக்கப்பட்டது. இது புகையிலை தொற்றுநோய்களுக்கு உலகளாவிய கவனத்தை ஈர்க்கிறது.
இந்த நாளில், மில்லியன் கணக்கான புகையிலை பயன்படுத்துபவர்கள் உறுதிமொழி எடுத்து புகையிலையை விட்டு வெளியேறுமாறு WHO அழைப்பு விடுக்கிறது.
உலகளவில் தோராயமாக 39% ஆண்களும் 9% பெண்களும் புகையிலையைப் பயன்படுத்துகின்றனர். தற்போது ஐரோப்பாவில் 26% அதிகமாக புகைபிடிக்கும் விகிதங்கள் காணப்படுகின்றன. அரசாங்கம் அவசர நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் 2025-க்குள் இன்னும் அதிகரிக்கும் என்று கணிப்புகள் காட்டுகின்றன.
தீம்:
WHO உறுப்பு நாடுகள் 1987-ஆம் ஆண்டு மே 31 ஆம் தேதி உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை கடைபிடிக்க ஒப்புக்கொண்டன. அதன் பின்னர், இந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் பொருத்தமான கருப்பொருளுடன் குறிக்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான கருப்பொருள் "சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம்" என்பதாகும். WHO-இன் கூற்றுப்படி, "சுற்றுச்சூழலில் புகையிலைத் தொழிலின் தீங்கு விளைவிக்கும் தாக்கம் மிகப்பெரிய அளவில் வளர்ந்து வருகிறது. நமது கிரகத்தின் ஏற்கெனவே பற்றாக்குறையாக உள்ள இயற்கை வளங்கள் மற்றும் பலவீனமான சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு தேவையற்ற அழுத்தத்தைச் சேர்க்கிறது."
ஒவ்வொரு ஆண்டும் உலக சுகாதார நிறுவனம் புகையிலை பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் மற்றும் பங்களிப்புகளுக்காக அரசாங்கங்கள், நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களை கௌரவிக்கிறது. இந்த ஆண்டு, உலகப் புகையிலை எதிர்ப்பு தினம் (WNTD) விருது-2022 க்கு WHO ஜார்க்கண்டைத் தேர்ந்தெடுத்துள்ளது. புகையிலை உட்கொள்வதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்து மக்களுக்கு கல்வி கற்பிப்பதற்காக இந்தியா தேசிய புகையிலை கட்டுப்பாட்டு திட்டத்தை செயல்படுத்துகிறது.
பாசிவ் ஸ்மோக்கிங்:
பாசிவ் ஸ்மோக்கிங் மூலம் தற்போது நிறைய பேர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். பாசிவ் ஸ்மோக்கிங் என்றால் ஒருவர் வீட்டிலோ அல்லது பொது இடங்களிலோ புகைப்பிடித்துக் கொண்டிருப்பார். அப்போது அவரைச் சுற்றி இருக்கும் நபர்கள் அந்தப் புகையினால் பாதிக்கப்படுவது ஆகும். இதனால்தான் தற்போது அதிகம் பேர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
புகையிலை புற்றுநோய் மட்டுமல்லாது இதயம் மற்றும் நுரையீரல் சார்ந்த நோய்களை ஏற்படுத்துகிறது. மேலும் நீரிழிவு நோய் உள்ள ஒருவர் தொடர்ந்து புகைப்பிடித்து வந்தால் அவருக்கு கை, கால்களுக்குச் செல்லும் ரத்த நாளங்களில் ரத்த ஓட்டம் தடைப்படும். அதன்பிறகு அறுவை சிகிச்சைக்கு வெகுவாக வழி வைத்துவிடும். இதனால் அவர்கள் மிகுந்த கவனத்துடன் புகைப்பிடித்தலைக் கைவிட வேண்டும்.
தற்போது இளைய தலைமுறையினரிடம் புகைப்பிடிக்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது. அவர்களை அதில் ஈடுபடாமல் பாதுகாத்துக் கொண்டு வரவேண்டும். அவர்களிடம் இப்போது இருந்தே விழிப்புணர்வை ஏற்படுத்த தீமைகளை எடுத்துக்கூற தயங்கக் கூடாது.
புகைபிடித்தல் பழக்கத்தில் இருந்து விடுபட வழி:
எல்லோருமே புகைப் பிடிப்பதை நிறுத்த உரிய வழியைத் தேட வேண்டும் என்று நினைக்கிறேன். ஹெராயின், கொக்கைனை விட நிகோடின் அதிகமாகப் போதைக்கு அடிமையாக்கும் என்று சொல்கிறார்கள். எளிதில் கிடைக்கக்கூடியதும் கூட. எனவே இதை நிறுத்தவது அவ்வளவு சுலபமல்ல. அது உங்களைத் தொடர்ந்து கொண்டே இருக்கும். அதனால் அவரும் பாதிப்புகள் என்ன, அதிலிருந்து நாம் எப்படி மீள வேண்டும் என்பதையெல்லாம் நாம் தான் தெரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வழி இருக்கும்.
மேலும், புகையிலைத் தொடர்பான அனைத்து பொருட்களுக்கும் அரசு தடை விதிக்க வேண்டும்.
அனைவரையும் நன்றாக கல்வி கற்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும், புகையிலை இல்லாத தலைமுறையை உருவாக்கவும் ஊக்குவிக்க வேண்டும்.
தென்மாவட்டங்களில் புகையிலைச் சார்ந்த பீடி சுற்றும் தொழில்கள் தாரளமாக நடக்கிறது. இதில் அரசு தலையிட்டு அந்த ஏழைத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு வேறு விதமான தொழில்கள் ஏற்பாடு செய்துகொடுத்து அந்த தொழிலை தடை செய்ய வேண்டும். ஏனென்றால் பீடி உற்பத்தியை குறைக்காமல் நாம் புகையிலை பயன்பாடு மற்றும் விற்பனையைத் தடுக்க முடியாது.
பொதுவாக இந்தியாவில் புற்றுநோயினால் வருடத்துக்கு 6 லட்சம் பேர் இறந்துபோகின்றனர். அதில் 2.5 லட்சம் பேர் புகையிலையினால் ஏற்படக்கூடிய புற்றுநோயினால் இறந்துபோவதாக ஒரு ஆய்வு சொல்கிறது. இந்த 2.5 லட்சம் பேர் என்பது அவர்கள் சார்ந்திருக்கும் குடும்பத்தினரின் மனநிலையோடு யோசித்து பார்த்தால், சமூகத்தில் புகையிலையின் தாக்கம் எந்த அளவுக்கு வீரியம் பெற்றிருக்கிறது என்பது தெரியும்.
இதில் முக்கியமான விஷயம் என்னெவென்றால், மற்ற நோய்களின் பாதிப்பு நமக்கு ஏற்பட்டால், அதன் அறிகுறிகள் ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும். நாம் உஷாராகி விடுவோம். உதாரணமாக, கரோனா நோயாளி ஒருவர் தெரிந்தோ தெரியாமலோ நம் அருகில் வந்து தும்மியோ இருமியோ விட்டால், அதன்மூலம் அருகில் உள்ளவர்களுக்கு பரவும். அதனையடுத்து அதன் அறிகுறிகள் 2,3 நாட்களில் தெரிந்துவிடும்.
ஆனால், புகைபிடித்தல் விஷயத்தில் அப்படியில்லை. புகைப் பழக்கத்தினைப் பல வருடங்களாக தொடர்ந்து வருபவர்களுக்குக் கூட ஒரு சிம்டம்ஸ் ஏற்படாததால், மக்களிடம் பயம் இல்லை. அவர்களிடம் விழிப்புணர்வு கருதி பேசுபவர்களிடம் நான் கடந்த 10 வருடங்களாக புகைபிடித்து வருகிறேன். எனக்கும் ஒன்றும் செய்யவில்லை. நன்றாகத்தானே இருக்கிறேன் என்று நம்மிடமே திருப்பி கூறுவார்கள். ஆனால், இந்த புகைப் பிடித்தலின் பாதிப்பு என்பதே மொத்தமாக கபளீகரம் செய்வது போல் தான். 20 வருடங்களுக்குப் பிறகுகூட அதன் பாதிப்புத் தெரிய வரலாம். அப்போது அதிலிருந்து விலகினாலும், புகைப் பழக்கத்தை விட்டுவிடுகிறேன் என்று கூறினாலும் கூட புற்றுநோய் ரூபத்தில் அது நம்மளை விடாது... மொத்தமாக கபளீகரம் செய்துவிடும்” என்று எச்சரிக்கிறார் மருத்துவர் முகம்மது இப்ராஹிம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT