Published : 13 May 2022 04:14 PM
Last Updated : 13 May 2022 04:14 PM
என்னதான் ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை கொண்டிருந்தாலும், அவரவருக்கான தேவை என்று வருகிறபோது விசுவாசம், நம்பிக்கை இவற்றுக்கெல்லாம் அர்த்தமில்லாமல் போய்விடுகிறது. சமீபத்தில் சென்னை மயிலாப்பூரில் ஆடிட்டர், அவருடைய மனைவி ஆகியோரின் கொடூர கொலை நிகழ்வு இதை மீண்டும் நமக்கு அழுத்தமாக உணர்த்தியுள்ளது. தற்போது மக்களின் பேசுபொருளாகி, பெருத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் இந்தச் கொலை நிகழ்வு நம் பாதுகாப்பையும் கேள்விக்கு உள்ளாக்கி இருக்கிறது.
என்ன நடந்தது?
நேபாளத்தைச் சேர்ந்த கிருஷ்ணா ஆடிட்டர் வீட்டில் ஓட்டுநராக வேலை செய்துவந்தார். மகனை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என்கிற ஆசையே தன்னைக் கொலைக்காரராக மாற்றிருப்பதாக அவர் கூறுகிறார். அவர் மீதும் அவரின் குடும்பத்தின் மீதும் ஆடிட்டர் தம்பதி வைத்திருந்த ஒட்டுமொத்த நம்பிக்கையையும் கூடவே சேர்த்துக் கொன்றிருக்கிறார்.
தேவையை அடையும் முறை
பணம் எல்லோருக்கும் தேவைதான். ஆனால், அதை அடைவதற்கு நாம் செய்யும் முயற்சிகள்தான் நம்முடைய வாழ்வைத் தீர்மானிக்கின்றன. இந்தக் கொலை, வெளிமாநிலங்களிலிருந்து வந்து இங்கு வேலை செய்துகொண்டிருக்கும் குறிப்பிட்ட மக்கள் மீது ஒட்டுமொத்தமாக ஒரு அவநம்பிக்கையை மற்றவர்களுக்கு ஏற்படுத்தக்கூடும்.
அவநம்பிக்கை வேண்டாம்
'சொந்த மக்கள் மீது நம்பிக்கை கொள்ளாமல் வடநாட்டிலிருந்து பிழைப்பைத் தேடி வருகிறவர்கள்மீது நம்பிக்கை வைத்தால் இப்படித்தான் ஆகும்' என்று சமூக வலைத்தளங்களில் பல நூறு எதிர்வினைகள் உலா வருகின்றன. தவறு செய்வது மனித இயல்பு. அது சிறிய பிழையாகவும் இருக்கலாம் அல்லது கொலை செய்யும் அளவுக்குப் பெருங்குற்றமாகவும் இருக்கலாம். கொலைசெய்தாவது தான் நினைத்ததை அடைந்துவிட வேண்டும் என்ற எண்ணத்திலிருப்பவர்கள் எல்லா இடத்திலும் இருக்கத்தான் செய்கிறார்கள். இதில் உள்ளூர்வாசி, வெளிமாநிலத்தவர் என்ற பேதம் பார்க்கத் தேவையில்லை.
என்னதான் சொந்தபந்தமென்றாலும் சொத்து என்று வரும்போது உறவுகளே ஒருவரையொருவர் அடித்துக் கொல்லும் இந்தக் காலத்தில், நம் குடும்பத்தைச் சாராத நபர்களுக்கு முன் எல்லாவற்றையும் வெளிப்படையாகச் சொல்வது, செய்வது எப்போதுமே நல்லதல்ல. அதற்கு இந்தக் கொலை நிகழ்வை ஒரு சான்றாகச் சொல்லாம்.
என்ன செய்ய வேண்டும்?
எல்லாவற்றுக்கும் மேலாக நம் உயிரும் நம் குடும்பத்தினரின் பாதுகாப்பும் முக்கியம். எல்லோரிடத்திலும் நம்பிக்கை வைக்கும் அதே நேரத்தில் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டியது உடனடி தேவை!
- ரா. மனோஜ்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT