Last Updated : 11 May, 2022 11:29 AM

 

Published : 11 May 2022 11:29 AM
Last Updated : 11 May 2022 11:29 AM

எந்தப் பிரச்சினையும் இல்லை... ஆனாலும், மனச்சோர்வு ஏன்? - ஒரு தெளிவுப் பார்வை

புறக்காரணிகளால் எந்தப் பிரச்சினையும் இல்லாதவர்களுக்குக் கூட மனச்சோர்வு நோய் (Depressive disorder) பாதிப்பு ஏற்படுவதற்கான காரணங்களையும், இத்தகையை பாதிப்புகளின் அறிகுறிகளைக் கண்டறிந்து தீர்வு காண்பதற்கான ஆலோசனைகளையும் வழங்குகிறார் மனநல மருத்துவர் யாமினி கண்ணப்பன்.

"நம் மனம் எங்கே இருக்கிறது? - இந்தக் கேள்வியை முன்வைக்கும்போது நம்மில் பலரும் நெஞ்சத்தைதான் சுட்டிக் காட்டுகிறோம். ஆனால், மனம் என்பது மூளையைக் குறிக்கக் கூடியது. மூளையின் அந்த உணர்வுப் பகுதியை ‘லிம்பிக் சிஸ்டம்’ (Limbic system) என்று சொல்வோம். நம் உணர்வுகளுக்கும் சிந்தனைகளுக்கும் மூளையில் பிரத்யேக இடங்கள் உள்ளன.

மூளையை எடுத்துக்கொண்டால், அதில் பல விதமான நியூரான்கள், நரம்பு செல்கள், ரசாயனங்கள் நிறைந்துள்ளன. மூளையின் இயக்கத்தில் பங்கு வகிக்கும் இவற்றில் ஏதேனும் ஒன்றில் குறைபாடுகள் ஏற்படும்போது, அது மனநல பாதிப்பாக, மனநோயாக வெளிப்படலாம். இதன் அடிப்படையே பயாலஜிக்கல் என்பதை தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

பொதுவாக, இன்றைய காலகட்டத்தில் டிப்ரஷன் (மன அழுத்தம்) என்ற பதத்தை மக்கள் அதிகம் பயன்படுத்துவதைப் பார்க்கலாம். இப்படி எதற்கெடுத்தாலும் பொத்தாம் பொதுவாக மன அழுத்தம் என்று சொல்வதால், மருத்துவர்களால் முழுமையாகத் தீர்வுகாண முடியாமல் போய்விடுகிறது. மன அழுத்தம், மனச்சோர்வு முதலான சொற்களைப் பயன்படுத்துவதற்கு முன்பு தெளிவு முக்கியம்.

டாக்டர் யாமினி கண்ணப்பன்

இதைக் கொஞ்சம் சிம்பிளாகவே பார்ப்போம். மனிதர்களுக்கு அழுகையும் சிரிப்பும் மாறி மாறி வருவது இயல்பு. நமக்கு சோகம் வந்தாலே மருத்துவரை நாட வேண்டுமா என்று கேட்டால், நிச்சயமாக இல்லை. நம் இயல்பான மனநிலைகள் என்பது மனநல பாதிப்புகள் அல்ல. சோகமான நேரங்களில் அழுவதும், குதூகலமான நேரங்களில் சிரிப்பதும் இயல்பான மனநிலை.

அப்படியெனில், எது மனச்சோர்வு? அறிகுறிகள்தான் என்னென்ன?

மனதளவில் எப்போதுமே ஒருவிதமான தேக்க நிலையை உணர்தல், எப்போதுமே ஒருவித சோகத்தில் மூழ்கி இருப்பது போன்ற மனநிலை நீடித்தல், Pervasive sadness என்று சொல்லக் கூடிய எப்போதுமே கவலையுடன் இருத்தல், இதற்கு முன்பு ஆர்வத்துடன் ஈடுபட்டு வந்த செயல்களில் முற்றிலும் ஆர்வம் மங்கிவிடுதல், உடல் நலனில் எந்தப் பிரச்சினையும் இல்லாதபோதும் எப்போதுமே உடல் சோர்வுடன் இருப்பதாக உணர்தல், உடலில் எந்த சக்தியும் இல்லாததுபோல் உத்வேகமின்றி காணப்படுதல், விளையாட்டிலும் பொழுதுபோக்கிலும் கூட ஆர்வமின்றி இருத்தல்...

இவைதான் Cardinal symptoms of depression என்ற மனச்சோர்வின் முக்கிய அறிகுறிகள். இவற்றுடன் தூக்கமின்மை, பசியின்மை, சிந்தனைகளில் மாற்றங்கள், எதிர்காலத்தை பற்றிய நம்பிக்கையின்மை, தற்கொலை எண்ணங்கள் போன்றவை இரண்டு வாரங்களுக்கு மேல் ஒருவரிடம் நீடித்தால், அது மனச்சோர்வு நோயாக இருக்கலாம்.

மனச்சோர்வு நோய் ஏற்படும் அளவிற்கு பாதிக்கப்பட்டவரின் சொந்த வாழ்க்கையில் எந்தவிதமான பிரச்சினையும் இல்லை என்று அவருக்கோ, அவர் உடன் இருப்பவர்களோ கருதலாம். இங்கேதான் புறக்காரணிகளுக்கு பதிலாக பயாலஜிக்கல் காரணிகள் கவனம் பெறுகின்றன. சம்பந்தப்பட்டவரின் மூளையில் ஏற்படக்கூடிய ரசாயன மாற்றங்களாலும் மனச்சோர்வு நோய் வரக்கூடும்.

இதேபோல், புறக்காரணிகளான நமது மனதை பாதிக்கக்கூடிய சூழ்நிலைகள், ஏமாற்றங்கள், இழப்புகள், தோல்விகள் முதலானவையும் மனச்சோர்வு நோய்க்கு காரணமாக இருக்கலாம். ஆக, மனநல பாதிப்பு நம் உடல், உளவியல், சமூகவியல் காரணிகளை உள்ளடக்கியது என்பதை உணர வேண்டும். அவ்வாறு மனச் சோர்வோ அல்லது வேறு வித மனநல பாதிப்புகளோ ஏற்பட்டால், உரிய மனநல மருத்துவர்களிடம் ஆலோசனைப் பெற்று, அவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகள், சிகிச்சை முறைகளைப் பின்பற்ற வேண்டும்.

குறிப்பாக, மூளையில் பயாலஜிக்கல் கோளாறுகள் மூலம் ஏற்படுகின்ற மனநலப் பிரச்சினைகளுக்கு மருந்துகள், சிச்சைகள் மூலம்தான் தீர்வு காண முடியும். இதற்கு மனநல மருத்துவரை நாடுவதுதான் சரி" என்கிறார் மனநல மருத்துவர் யாமினி கண்ணப்பன்.

> இது, 'இந்து தமிழ் திசை' ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்

> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க - டிஜிட்டல் சந்தா திட்டங்கள்

மனநல மருத்துவர் யாமினி கண்ணப்பன் நேர்காணல் வீடியோ:

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x