Published : 28 Apr 2022 09:55 PM
Last Updated : 28 Apr 2022 09:55 PM
புதுடெல்லி: கரோனா தொற்றால் உயிரிழப்புகள் மட்டுமின்றி பொருளாதார ரீதியதாகவும், மன ரீதியாகவும் பல பாதிப்புகள் ஏற்பட்டது. இந்த பாதிப்பு தற்போது சரியாகி வரும் நிலையில் உடல் ரீதியான பாதிப்புகளின் தாக்கம் தற்போது தான் வெளிவரத் தொடங்கியுள்ளது. இதை உறுதி செய்யும் விதமாக கரோனா காலத்தில், இந்தியாவில் 85,000 பேர் எச்ஐவி நோயால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
கரோனா தொற்று முதல் அலையில் நாடு முழுவதும் கடுமையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வரும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். இதனால் பொதுமக்கள் வீடுகளுக்கு உள்ளே முடங்கி கிடக்கும் நிலை உருவானது. இதன் காரணமாக அதிக அளவு உடல் ரீதியான பாதிப்பு ஏற்படலாம் என்று ஏற்கெனவே மருத்துவர்கள் எச்சரித்து இருந்தனர். இந்த பாதிப்புகளால் தொற்றா நோய்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்து வந்தனர்.
இதை உறுதி செய்யும் பல ஆய்வு அறிக்கைகள் வெளியாகி வருகிறன. ஆனால், இந்த முறை அறிக்கையாக இல்லாமல் ஆர்டிஐ மூலம் அதிர்ச்சி அளிக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ஆர்டிஐ கேள்வி ஒன்றிற்கு இந்திய தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனம் அளித்துள்ள பதிலில், 'கரோனா ஊரடங்கு காலத்தில் பாதுகாப்பற்ற பாலியல் செயல்பாடு இந்தியா முழுவதும் 85,000 பேர் எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்டனர்' என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த 2020 முதல் 2021 வரையிலான ஊரடங்கு காலத்தில் 85,268 பேர் புதிதாக HIV தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 10,498 பேரும், ஆந்திராவில் 9,521 பேரும், கர்நாடகத்தில் 8947 பேரும் ஊரடங்கு காலத்தில் இந்தத் தொற்றுக்கு ஆளாகியதாக இந்தப் பதிலில் கூறப்பட்டுள்ளது.
2011-ம் ஆண்டு முதல் எச்ஐவி தொற்றுகளின் எண்ணிகை சரிவடைந்து வருகிறது. கடந்த 2011-12 ல் 2.4 லட்சம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 2019-20 ல் 1.44 லட்சம் பேர் மட்டுமே தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில ஆண்டுகளை காட்டிலும் 2020-21 ம் ஆண்டில் குறைவான எண்ணிக்கையில் எச்ஐவி தொற்று பாதித்தோர் கண்டறியபட்டாலும் ஊரடங்கு காலத்தில் எச்ஐவி பாதிப்பு அதிகமாக கண்டறியபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முதல் ஊரடங்கு காலத்தில் ஏற்பட்ட பாதிப்பு மட்டுமே கண்டறியப்பட்டுள்ளதாகவும், இதற்கு அடுத்த வந்த நாட்கள் மற்றும் 2-வது ஊரடங்கு காலத்திலும் பாதுகாப்பற்ற பாலுறவு அதிகரித்து இருந்தால், இது வரும் காலங்களில் எச்ஐவி தொற்றுகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
2011-2021 வரை 17,08,777 பேர் இந்தியாவில் எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஆந்திராவில் 3,18,814 பேர், மகாராஷ்டிராவில் 2,84,577, கர்நாடகவில் 2,12,982 பேர், தமிழகத்தில் 1,16,536 பேர், உத்தரப் பிரதேசத்தில் 1,10,911 பேர் எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எச்ஐவி தொற்று இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாத காரணத்தால், பாதுகாப்பான முறையில் பாலுறவு கொள்வதும், மக்களிடையே தொடர்ந்து அது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் தான் இதைத் தடுக்க ஒரே வழி என்ற மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT