Last Updated : 23 Apr, 2022 06:42 AM

 

Published : 23 Apr 2022 06:42 AM
Last Updated : 23 Apr 2022 06:42 AM

வாசிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்த பழங்கள் வாங்கினால் புத்தகம் இலவசமாக வழங்கும் பழ வியாபாரி

தஞ்சாவூரில் பழங்கள் வாங்குபவருக்கு புத்தகங்களை வழங்கும் பழ வியாபாரி காஜாமொய்தீன். படம்: ஆர்.வெங்கடேஷ்

தஞ்சாவூர்: புத்தகம் வாசிப்பது நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வரும் இக்காலகட்டத்தில், வளரும் தலைமுறையினரிடம் வாசிப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் விதமாக கடந்த 9 ஆண்டுகளாக தனது கடையில் பழங்கள் வாங்கும் அனைவருக்கும் ஏதோ ஒரு புத்தகத்தை இலவசமாக வழங்கி வருகிறார் தஞ்சாவூரைச் சேர்ந்த பழ வியாபாரி.

தஞ்சாவூர் பூக்கார தெருவில் சுப்பிரமணியர் கோயில் எதிரே வசித்து வருபவர் என்.காஜாமொய்தீன்(63). இவர், தன்னுடைய வீட்டின் முன்பக்கத்தில் பழக்கடை நடத்தி வருகிறார். கம்யூனிஸ்ட் கொள்கையில் ஈர்க்கப்பட்டவர் என்பதால், எல்லோரும் இவரை தோழர் எனவும், இவரது கடையை தோழர் பழக்கடை எனவும் அழைத்து வருகின்றனர்.

இவர், புத்தகம் வாசிப்பின் அவசியத்தை உணர்த்தும் வகையில், தன்னுடைய கடையில் பழங்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு, தலைவர்களின் வாழ்க்கை வரலாறு, சிறுவர் கதைகள், தமிழ்- ஆங்கில அகராதி போன்ற ஏதாவது ஒரு சிறிய புத்தகத்தை இலவசமாக வழங்கி வருகிறார்.

இதுகுறித்து காஜாமொய்தீன் கூறியது: நான் 9-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தேன். என்னுடைய குடும்ப சூழ்நிலையால் என்னால் மேற்கொண்டு படிக்க முடியவில்லை. ஆனாலும், தினமும் புத்தகங்கள் வாசித்து வருகிறேன். தற்போதைய சூழலில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் அதிகமாக இருப்பதால், இன்றைய இளம் தலைமுறையினரிடம் புத்தகம் வாசிப்பது குறைந்து வருகிறது. இதனால், கடந்த 9 ஆண்டுகளாக எனது கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு, என்னால் முடிந்த அளவு இலவசமாக ஏதாவது ஒரு புத்தகம் வழங்கி வாசிப்பதை ஊக்கப்படுத்தி வருகிறேன்.

வருங்கால தலைமுறையினர் புத்தகங்களை அதிகம் வாசிக்க வேண்டும். அப்போது தான் அவர்கள் சவால்கள் நிறைந்த இந்த உலகத்தில் பிரகாசிக்க முடியும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x