Published : 02 Apr 2022 10:15 AM
Last Updated : 02 Apr 2022 10:15 AM

ஆட்டிசம்: 15 அடிப்படைக் கேள்விகளும் தெளிவான பதில்களும் | World Autism Awareness Day

டாக்டர் பி.சிவராமன்

ஏப்ரல் 2... இன்று உலக ஆட்டிச விழிப்புணர்வு தினம். 'ஆட்டிசம் என்றால் என்ன?' என்பது தொடங்கி பெற்றோரின் அணுகுமுறை வரை நம்மில் எழும் 15 அடிப்படைக் கேள்விகளையும், அவற்றுக்கு தெளிவு தரும் பதில்களையும் பார்ப்போம்.

1. ஆட்டிசம் என்றால் என்ன? - ஆட்டிசம் என்பது மூளை வளர்ச்சியைப் பாதிக்கும் ஒரு சிக்கலான நோய். இதனால், சமூக இணக்கம், பேச்சு, நடத்தை, மனநலம், கூடி விளையாடுதல் போன்றவற்றில் குறைபாடுகள் ஏற்படுகின்றன. குறிப்பிட்ட சில செயல்களை மட்டும் மீண்டும் மீண்டும் செய்துகொண்டே இருப்பது இதன் முக்கிய அம்சம். ஒரு வயது முதல் மூன்று வயதிற்குள் பெரும்பாலும் கண்டறியப்படுகிறது.

2. ஆட்டிசத்தின் காரணங்கள் என்னென்ன?

மரபணு, சாதகமற்ற சுற்றுச்சூழல் காரணிகள் போன்றவை காரணங்களாகக் கூறப்பட்டாலும், சரியான காரணங்கள் இன்னும் அறியப்படவில்லை.

3. தடுப்பூசியினால் ஆட்டிசம் வருமா?

தடுப்பூசியால் ஆட்டிசம் வருவதற்குச் சாத்தியமில்லை என்று பல ஆராய்ச்சிகள் தெள்ளத் தெளிவாக உணர்த்துகின்றன.

4. ஆட்டிசம் - கண்டறிவது எப்படி?

ஆய்வகப் பரிசோதனைகள் மூலம் கண்டறிய முடியாது. குழந்தையின் வளர்ச்சிப்படிநிலைகள், நடத்தைகளைச் சார்ந்தே இந்நோய் கண்டறியப்படுகிறது.

5. எவ்வளவு குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்?

அமெரிக்கா: 59 குழந்தைகளில் 1 குழந்தை
இந்தியா: 100 குழந்தைகளில் 1 குழந்தை
ஆண் குழந்தைகள் (4:1) அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர்.

6. வளர்ச்சியில் வேறு ஏதேனும் தாமதம் இருக்குமா ?

பல குழந்தைகள் அறிவாற்றல் குறைவானவராகவும், சிலர் சராசரியை விட அதிக அறிவாற்றல் உடையவராகவும் காணப்படுகின்றனர்.

7. பெற்றோரின் பங்கு என்ன?

ஆட்டிசத்தின் பாதிப்பு கண்டறியப்பட்ட நாளிலிருந்தே பெற்றோரின் பங்கு முற்றிலும் அவசியம். அதிலும் தாயின் பங்கு மிக மிக அதிகம். மருத்துவரின் ஆலோசனைப்படி குழந்தையின் ஒவ்வொரு செயல்களிலும் (நினைவாற்றல், கவனம், காட்சிப்படுத்துதல், மொழியியல், சிக்கல் தீர்க்கும் திறன்கள்) நாம் மிகுந்த அக்கறையோடும் அன்போடும் செயல்பட வேண்டும்.

8. முற்றிலும் குணப்படுத்த முடியுமா?

சற்று கடினமே. இருப்பினும், மருத்துவரின் வழிகாட்டுதல், தொடர் சிகிச்சை மூலம் பெரிய முன்னேற்றம் காணலாம்.

9. எச்சரிக்கை அறிகுறிகள் என்னென்ன?

6 மாதம்:

உடனிருப்பவரோடு புன்னகை/ மகிழ்ச்சியான வெளிப்பாடு இல்லாமை ,
கண்ணோடு கண் பார்க்காமல் இருத்தல்

9 மாதம்:

முன் பின் ஒலிக்கும் சத்தங்களை உணராமை, முக பாவனைகளை உணராமை

ஒரு வயது :

பா, மா, பாபா, மாமா போன்ற உளறல் இல்லாமை,
விரல் நீட்டிக் காட்டுதல், டாட்டா சொல்லாமை,
பெயர் சொல்லி அழைத்தாலும் அறியாமை

16 மாதங்கள் :

மிகச்சில சொற்கள் பேசுதல் / எதுவும் பேசாமல் இருத்தல்.

2 வயது :

இரு சொற்களை இணைத்துப் பேச இயலாமை.

எந்த வயதிலும் :

* ஏற்கெனவே இருந்த சமூக வளர்ச்சிப்படிநிலை திறன்களை இழத்தல்

* கண்ணோடு கண் பார்ப்பதைத் தவிர்த்தல்

* தனியாக இருக்கவே விருப்பம்

* பிறர் உணர்வுகளை உணர இயலாமை

* பேசுவதில் தாமதம்/ சிக்கல்

* சொற்களைத் திரும்பத் திரும்பப் பேசுதல்

* குறிப்பிட்ட சில பொருள்கள் மீது மட்டும் ஆர்வம்

* ஒரே செயலை மீண்டும் மீண்டும் செய்தல்

* சத்தம், வாசனை, சுவை,தொடு உணர்வு - இவற்றிற்கு வழக்கத்திற்கு மாறான எதிர்வினை

18 மாதங்கள் முதல் 24 மாதங்கள் வரை, மருத்துவமனை வரும் அனைத்துக் குழந்தைகளையும் இது குறித்துக் கவனமாக, ஆரம்பநிலை அறிகுறிகள் உள்ளனவா என்று கண்காணிக்க வேண்டும். பேசுவதில் தாமதம் என்று வரும் குழந்தைகளிடம் ஆட்டிசம் அறிகுறிகள் உள்ளனவா என்று அதிக கவனமாகப் பார்க்க வேண்டும்.

பொதுவான அறிகுறிகள் :

* விரும்பும் பொருளை விரல் நீட்டி, சுட்டிக்காட்ட இயலாமை

* பிறர் ஒரு பொருளைச் சுட்டிக்காட்டினாலும், பார்க்க மாட்டார்கள்

* பிறரைக் கண்டுகொள்ளாமை

* தழுவி அரவணைப்பதை விரும்பாமை

* பிறர் பேச்சை உணராமல், சத்தத்திற்கு மட்டும் எதிர்வினை செய்தல்

* மக்கள் மீது நாட்டமின்றி, பொருள்கள் மீதே நாட்டம்

* தன் தேவைகளை வெளிப்படுத்த முடியாமை

* வழக்கத்திலிருந்து மாறுவதில் சிக்கல்

* நடித்துக் காட்டி விளையாடத் தெரியாது

10. அடுத்த குழந்தைக்கும் இது வருமா?

முதல் குழந்தை தீவிரமாகப் பாதிக்கப்பட்டு இருந்தால், பெற்றோரின் வயது மிக அதிகமாக இருந்தால் வாய்ப்புகள் அதிகமாகும்.

11. தொடக்கத்திலேயே கண்டறிதல் மிகவும் அவசியமா?

ஆம். சிறு வயதில் முறையான பயிற்சிகள் சிகிச்சைகள் மூலம் முன்னேற்றம் பெற, ஆரம்பத்திலேயே கண்டறிதல் மிக மிக அவசியம்.

12. என் குழந்தையின் பாதிப்பைப் பிறருக்குத் தெரிவிக்கலாமா?

ஆசிரியர், பயிற்சியாளர், மருத்துவரிடம் தெரிவிப்பதன் மூலம் திட்டமிட்டுச் செயலாற்ற முடியும்.

13. மருந்து தேவைப்படுமா ?

ஆட்டிசத்தின் அடிப்படைப் பிரச்னைகளுக்கு உண்மையான மருந்து எதுவென்றால், தாய், குழந்தையின் நோயைப் புரிந்து கொண்டு, நம்பிக்கையோடு பயிற்சி அளிப்பதே ஆகும். வேறு மருந்துகளால் பயன் இல்லை. ஆட்டிசத்தோடு வரும் தூக்கப்பிரச்னைகள், வலிப்பு, பதட்டம் போன்ற துணைநோய்களுக்கு வேண்டுமானால், மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை மட்டும் பயன்படுத்தலாம்.

14. செல்போன், டிவியால்தான் ஆட்டிசம் வருகிறதா?

செல்போன், டிவியால் ஆட்டிசம் வருவதில்லை. ஆனால் அவை குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சியைப் பாதிக்கின்றன.

15. மன அழுத்தம், வேதனையில் இருந்து மீள்வது எப்படி?

சற்று சிக்கலான விசயமாக இருந்தாலும் நாம் மீண்டு வந்து நம் குழந்தையைப் பராமரிப்பது அவசியம். எப்படி வளர்ப்பது, நமக்குப் பிறகு குழந்தையின் நிலை, பிறரின் கிண்டல் கேலி சாபம் இவற்றிலிருந்து மீண்டு வர மருத்துவர், பயிற்சியாளரின் ஆலோசனை உதவும். நேர்மறை எண்ணம் உடையவர்களிடம் பழக வேண்டும். இறுதியாக, இறை வழிபாட்டுடன் கூடிய தியானம், நம்மை அன்றாட மன அழுத்தத்தில் இருந்து காக்கும். ஆரம்ப அறிகுறிகளையும், மருத்துவரின் அறிவுறுத்தலையும் அலட்சியம் செய்து, நோயை ஏற்க மறுப்பதும், காலம் தாழ்த்துவதும், காத்துக்கொண்டே இருப்பதும், குழந்தையின் மூளை வளர்ச்சிக்குத் தடைகளாக மாறும். எனவே, ஆரம்பத்திலேயே கண்டறிவோம்; பயிற்சியும் முயற்சியும் கொண்டு ஆட்டிசத்தையும் வெல்வோம்.

- டாக்டர் பி.சிவராமன்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x