Published : 24 Mar 2022 08:04 AM
Last Updated : 24 Mar 2022 08:04 AM
1935-ஆம் ஆண்டு காசநோய்க்கான (டி.பி) மருந்துகள் ஏதும் கண்டுபிடிக்கப்படாத காலம். உத்தராகண்ட் மாநிலம் நைனித்தால் மாவட்டத்தில் அமைந்திருந்த கிங் ஜார்ஜ் எட்வர்ட் காசநோய் சானிடோரியத்தில் ஓர் இளம்பெண் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு எல்.எஸ்.ஒயிட் என்ற ஆங்கில மருத்துவர் சிகிச்சை அளித்து வந்தார். அப்போது சிகிச்சை என்பது பெரும்பாலும் தூய காற்றும் புரதச்சத்து மிக்க உணவுமே ஆகும்.
அல்மோர சிறையில் அடைக்கப்பட்டிருந்த அந்தப் பெண்ணின் கணவர், சிறை நிர்வாகத்திடம் அனுமதி பெற்று மனைவியைக் காண வருகிறார். அப்பெண்ணின் உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டவுடன் அவரை மேல் சிகிச்சைக்காக சுவிட்சர்லாந்து அழைத்துச் செல்கிறார். ஆனால், சிகிச்சை பலனின்றி கணவர் கண் முன்பே அந்தப் பெண் இறந்து போகிறார். அந்தப் பெண் இறந்து சரியாக 11 ஆண்டுகள் கழித்து அவரது கணவர் இந்தியாவின் பிரதமர் ஆகிறார். ஆம், இறந்தது இந்தியாவில் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் மனைவி கமலா நேரு ஆவார். மருந்து, மாத்திரைகள் இன்றி இந்தியாவில் முதல் பிரதமரின் குடும்பத்தில் காசம் ஒருவரின் சுவாசத்தை நிறுத்திவிட்டிருந்தது.
ஏப்ரல் 1947 - மும்பையைச் சார்ந்த டாக்டர் ஜல் ரத்தன்ஜீ பட்டேல் என்ற மருத்துவர் தன்னுடைய தொழில்முறை தர்மத்தைக் காப்பாற்றக் காசநோயால் பாதிக்கப்பட்டு அவரால் சிகிச்சையளிக்கபட்டு வந்த நோயாளியின் மருத்துவக் கோப்புகளை மிக ரகசியமாகப் பாதுகாத்து வந்தார். சிகிச்சை பெற்று வந்த நபர் சாதாரண மனிதர் அல்ல. உலக வரைபடத்தில் மேலும் சில கோடுகளை வரையக் காரணமாய் இருந்தவர். இந்தியாவில் கவர்னர் ஜெனரலாக இருந்த மவுண்ட்பேட்டன் பிரபுவுடன் தன் கொள்கைப் பிடிப்பில் நின்று அதிகமாக விவாதம் செய்தவர்.
டாக்டர் பட்டேலால் பாதுகாக்கப்பட்ட அந்த மருத்துவ ரிப்போர்டை 1970-களில் மவுண்ட்பேட்டன் அறிந்தபோது அவர் அதிர்ச்சியில் உறைந்துவிட்டார். அவரால் நம்ப முடியவில்லை. எனக்கு மட்டும் இந்த உண்மை முன்னமே தெரிந்திருந்தால் இந்திய வரலாற்றின் பாதையே வேறுமாதிரி இருந்திருக்கும் என்று கூறியதாக 'நள்ளிரவில் சுதந்திரம்' என்கிற நூலை எழுதிய லாரி கோலின்ஸ், டாமினிக் ஆகியோர் இவ்வாறு குறிப்பிடுகின்றனர். மவுண்ட்பேட்டன் பிரபுவின் அதிர்ச்சிக்குக் காரணம், காசநோயால் பாதிக்கப்பட்டிருந்த அந்த நபர் பாகிஸ்தானின் முதல் அதிபர் முகமது அலி ஜின்னா. நோய் முற்றிய நிலையில் 1948-ஆம் ஆண்டின் கடைசியில் அப்போதுதான் காசநோய்க்காக கண்டுபிடிக்கப்பட்ட ஒரே மருந்து ஸ்டெப்டோமைசின் தனி விமானம் மூலம் அமெரிக்காவிலிருந்து கொண்டுவரப்பட்டும் ஜின்னாவை காப்பாற்ற முடியவில்லை.
இப்படி இரு நாட்டு தலைவர்களின் வாழ்க்கையிலும் கோரதாண்டவம் ஆடிய காசநோய் இன்றளவும் தன் ஆட்டத்தை முடித்தபாடில்லை. எல்லைகளை நாம் பிரித்தாலும் காசநோய் எல்லைகளைத் தாண்டி, மதங்களைத் தாண்டி மனிதனை மட்டும் குறி வைத்து பயங்கரவாதத்தை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது. இந்த இரு நாடுகளும் உலகின் அதிக எண்ணிக்கையிலான காசநோயாளிகளைக் கொண்டுள்ளது என்பது கசப்பான உண்மை.
அமெரிக்காவிலிருந்து வந்த மருந்து மட்டுமல்லாமல் காசநோயை முற்றிலுமாக குணப்படுத்தும் கூட்டு மருந்துகள் இன்று இந்தியாவில் கடைக்கோடி கிராமத்தின் அரசு மருத்துவமனைகளிலும் இலவசமாகக் கிடைக்கின்றன. ஆறு மாத சிகிச்சை நோயை முற்றிலும் குணப்படுத்திவிடுகிறது.
காசநோயை ஏற்படுத்தும் பாக்டீரியா, மற்ற நுண்கிருமிகளைப் போல உடனே நோய் ஏற்படுத்திவிடுவதில்லை. மனித உடலுக்குள் சென்று நோய் ஏற்படுத்துவதற்கான காலநிலை வரும் வரை காத்திருக்கும். மனித உடலில் நோய் எதிர்ப்பாற்றல் குறைந்துவிட்டால் தூங்கிக் கொண்டிருந்த பாக்டீரியா விழித்துக் கொண்டு நோயை ஏற்படுத்தும். எனவேதான் சர்க்கரை நோயாளிகள், எச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டவர்கள், சிறுநீரக கோளாறு உள்ளவர்கள் அதிகமாகக் காசநோயால் பாதிக்கப்படுகிறார்கள். மனஅழுத்தம் உள்ளவர்களையும் இந்நோய் எளிதாகத் தாக்குகிறது.
இரண்டு வாரத்திற்குமேல் இருமல், மாலைநேரக் காய்ச்சல், சளியில் ரத்தம், பசியின்மை, உடல் மெலிதல் போன்ற காசநோய் அறிகுறியுள்ளவர்களுக்கு இலவசமாகச் சளி பரிசோதனையும், x-ray பரிசோதனையும் செய்துக்கொள்ள வேண்டும். காசநோயாளிகளுக்குச் சிகிச்சை காலத்தில் மாதம்தோறும் ரூ.500 அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
உடலின் எந்த பாகத்தையும் பாதிக்கும் இந்த நோயை தற்பொழுது ஓரளவு ஒழித்துவிட்டோம். 2025-ல் காசநோய் இல்லா இந்தியா என்கிற இலக்குடன் இந்திய அரசு பல்வேறு உத்திகளைக் கையாண்டு காசநோய் ஒழிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரைக் காசநோய் ஒழிப்பில் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது. எந்த மாநிலத்திலும் இல்லாதவாறு இங்கே நுரையீரல் சிகிச்சை நிபுணர்கள் காசநோய் துறை துணை இயக்குநர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
மார்ச்-24... உலக காசநோய் தினமான இன்று டெல்லியில் நடக்கும் உச்சி மாநாட்டில் கன்னியாகுமரி, நீலகிரி உள்ளிட்ட ஏழு தமிழக மாவட்டங்களுக்குக் காசநோய் ஒழிப்பிற்கான பதக்கங்கள் வழங்கப்படுகின்றன.
- கட்டுரையாளர், துணை இயக்குநர், மருத்துவ பணிகள், தொடர்புக்கு: drpdorai@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT