Published : 20 Nov 2015 11:51 AM
Last Updated : 20 Nov 2015 11:51 AM

‘நிதிக்கு கிடைக்குமா நீதி?

பட்டப் படிப்பு ப‌டிக்கும் மாணவர்கள் மேற்படிப்பைத் தொடரவும், ஆராய்ச்சிப் பணியில் ஈடுபடவும் பல்வேறு வழிகளில் உதவிக்கரம் நீட்டுகிறது யு.ஜி.சி. எனப்படும் பல்கலைக்கழக மானியக்குழு. இதற்காகப் பல கல்வி உதவித்தொகைகளையும், ஃபெல்லோஷிப்புகளையும் அது வழங்குகிறது.

குறிப்பாக‌ கலை, அறிவியல், சமூகவியல் மாணவர்களுக்கான ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோஷிப் (JRF), சீனியர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்பும் (SRF) இவற்றில் முக்கியமானவை. கலை அறிவியல் பாடங்களில் முனைவர் பட்ட ஆராய்ச்சியில் (பி.ஹெச்டி) ஈடுபடுவதற்காக 5 ஆண்டுகளுக்கு ஜெ.ஆர்.எஃப், எஸ்.ஆர்.எஃப். ஃபெல்லோஷிப்புகள் வழங்கப்படுகிறது.

ஜெ.ஆர்.எஃப் ஃபெல்லோஷிப் பெறுவதற்கு யு.ஜி.சி தற்போது சிபிஎஸ்இ நடத்துகின்ற 'நெட்' (National Eligibility Test-NET) தேர்வெழுத வேண்டும். அதில் நல்ல மதிப்பெண் பெறுவோருக்கு ஃபெல்லோஷிப் கிடைக்கும். ஆண்டுதோறும் ஏறத்தாழ 9 ஆயிரம் பேருக்கு இந்த ஃபெல்லோஷிப் வழங்கப்படுகிறது. இதில் தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை ஐந்தாண்டுகளுக்கு நிதி உதவி கிடைக்கும் என்பதோடு வீட்டு வாடகைப் படிகளும் கிடைக்கும்.

நெட் ஜெ.ஆர்.எஃப் போன்று நெட் அல்லாத ஜெ.ஆர்.எஃப் (non-NET JRF) என்ற திட்டத்தின் கீழும் மாணவர்களுக்கு யு.ஜி.சி. கல்வி உதவித்தொகை வழங்குகிறது. 2006-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்தின்படி எம்.ஃபில். படிப்பதற்கு ஜெ.ஆர்.எஃப் பெலோஷிப்பாக மாதம் ரூ.5 ஆயிரமும், பி.ஹெச்டி. படிப்பதற்கு மாதம் ரூ.8 ஆயிரமும் வழங்கப்படுகிறது. நெட் ஜெ.ஆர்.எஃப் பெறாத மாணவர்கள் இதற்கு தகுதியுடையவர்களாக ஆவார்கள்.

ஆண்டுதோறும் 35 ஆயிரம் பேர் இந்தச் சிறப்பு ஃபெல்லோஷிப்புக்குத் தேர்வுசெய்யப் படுகிறார்கள். மத்திய பல்கலைக்கழகங்கள், உயர்சிறப்பு கல்வி நிறுவனங்கள் (Institutions with Potential for Excellence) உள்ளிட்ட குறிப்பிட்ட 50 கல்வி நிறுவனங்கள் தகுதியான மாணவர்களைத் தேர்வுசெய்யும்.

சரி, இனி விஷயத்துக்கு வருவோம். கடந்த அக்டோபர் மாதம் 7-ந் தேதி நடைபெற்ற யு.ஜி.சி.யின் 510-வது கூட்டத்தில் ஒரு முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. நெட் அல்லாத ஜெ.ஆர்.எஃப் உதவித்தொகை திட்டத்தை நிறுத்துவது என்பதுதான் அந்த அதிர்ச்சியான முடிவு.

யு.ஜி.சி-யின் இந்த அறிவிப்பைக் கேட்டதும் துடிதுடித்துப் போனார்கள் மாணவர்கள். இந்த முடிவுக்கு மாணவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. யு.ஜி.சி.யைக் கண்டித்துப் போராட்டத்திலும் இறங்கினார்கள். திடீர் முடிவுக்கு யு.ஜி.சி. தரப்பில் முன்வைக்கப்படும் காரணம், ஜெ.ஆர்.எஃப், எஸ்.ஆர்.எஃப் உதவித்தொகை கடந்த ஆண்டிலிருந்து உயர்த்தப்பட்டதால் ஏற்பட்ட நிதிநெருக்கடி என்பதுதான்.

யு.ஜி.சி.க்கு எதிராக மாணவர்களின் போராட்டம் தீவிரம் அடையவே அந்த‌ முடிவை ரத்துசெய்தது மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம். அத்துடன் இந்த விவகாரம் குறித்து விசாரிக்க 5 நபர்கள் அடங்கிய சிறப்புக் குழுவையும் அமைத்திருக்கிறது. இந்தக் குழு டிசம்பருக்குள் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.

பல இளைஞர்கள், இந்த ஃபெல்லோஷிப்புகளின் உதவியோடு தங்களின் படிப்பைக் கவனித்துக்கொள்வது மட்டுமல்லாது குடும்பத்தையும் கவனித்துக்கொள்கின்றனர். இப்போது இந்தத் திட்டம் நிறுத்தப்பட்டால் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் வாழ்க்கை இருளில் மூழ்கும்.

ஏற்கெனவே வழங்கப்பட்டுவரும் உதவித்தொகையை உயர்த்த வேண்டும் என்று நீண்ட காலமாக போராடிவரும் நிலையில், திடுதிப்பென்று உதவித்தொகையையே நிறுத்த யு.ஜி.சி. முடிவெடுத்திருப்பதால் மாணவர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x