Last Updated : 02 Jan, 2020 06:46 PM

 

Published : 02 Jan 2020 06:46 PM
Last Updated : 02 Jan 2020 06:46 PM

வீடு திரும்பும் உத்தரகாண்ட் கிராமவாசிகள்; நகரங்களுக்குச் சென்றவர்களின் தலைகீழ் மாற்றம்

எல்லையோர உத்தரகாண்ட் மலைக் கிராமம்.

பித்தோராகர் (உத்தரகாண்ட்)

பல ஆண்டுகளுக்கு முன்னர் இந்தோ-சீனா எல்லையில் தங்கள் குக்கிராமங்களை விட்டு நகரங்களை நோக்கி வெளியேறிய கிராமவாசிகள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பத் தொடங்கியுள்ளனர்.

உத்தரகாண்டில் தொலைதூரக் கிராமங்களுக்கும் சாலை இணைப்பு செய்யப்பட்ட நிலையில், நகரத்திற்குச் சென்றவர்கள் தங்கள் சொந்த கிராமங்களில் மீள்குடியேற்றத்திற்குத் தயாராகி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜோஹர், வியாஸ், தர்மா மற்றும் சவுத்தாஸ் பள்ளத்தாக்குகளைச் சேர்ந்த 1,000 குடும்பங்கள் தங்களின் மூதாதையர் வீடுகளைப் பழுதுபார்க்கத் தொடங்கியுள்ளனர். இதனால் அவர்கள் அங்கு மீள்குடியேற முடியும் என்று தர்ச்சுலா மற்றும் முன்சியாரி துணைப் பிரிவு ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.

1962 க்கு முன்னர் 14 ஜோஹர் பள்ளத்தாக்கு கிராமங்களில் உள்ள 600 குடும்பங்களில் சுமார் 40 சதவீதம் பேர் முன்சியாரி, பித்தோராகர், ஹல்ட்வானி, டெஹ்ராடூன், அல்மோரா மற்றும் புதுடெல்லி ஆகிய இடங்களில் குடியேற வெளியேறினர்.

அதேபோல, பித்தோராகர் மாவட்டத்தில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த 41,669 குடும்பங்கள் கடந்த 20 ஆண்டுகளில் மாவட்டத் தலைமையகத்திற்கு அல்லது பிற மாவட்டங்களுக்குக் குடிபெயர்ந்துள்ளதாக மாநில இடம்பெயர்வு ஆணையம் தனது சமீபத்திய அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஆனால் இப்போது வேகவேகமாக அவர்கள் தங்கள் சொந்த கிராமங்களை நோக்கி திரும்பி வந்துகொண்டிருப்பதாக எல்லையோர அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

சில வல்லுநர்கள் தலைகீழ் இடம்பெயர்வுக்கான அறிகுறிகளைக் காண்கிறார்கள். சமீபத்திய ஆண்டுகளில் இப்பகுதியில் சாலைகள் மற்றும் பிற வசதிகளைக் கட்டியெழுப்புவதன் மூலமும், அவர்களின் தனித்துவமான கலாச்சார அடையாளத்தைப் பற்றிய புதுப்பிக்கப்பட்ட விழிப்புணர்வு மக்களிடம் தூண்டப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்த ஓய்வு பெற்ற ஆசிரியரும் பழங்குடி பொருளாதாரத்தில் நிபுணருமான லலித் பந்த் கூறுகையில், "பல பத்தாண்டுகளுக்கு முன்னர் வாழ்வாதாரத்தைத் தேடி தங்கள் மூதாதையர் வீடுகளை அப்படி அப்படியே விட்டுவிட்டுச் சென்ற கிராமவாசிகள் இப்போது தங்கள் வேர்களுக்குத் திரும்பத் தொடங்கியுள்ளனர். இது தேசிய பாதுகாப்புக்கு நல்லது. ஏனெனில், இது எல்லை கிராமங்களுக்கு உயிர் கொடுக்கும்'' என்றார்.

தர்ச்சுலாவில் உள்ள ரங் பழங்குடியினரின் கலாச்சாரத்தைப் பாதுகாக்க பணியாற்றும் அசோக் நபியால் இதுகுறித்து தெரிவித்தபோது, ''எல்லையின் கடைசி முகாம்கள் வரை மோட்டார் சாலைகள் அமைக்கப்பட்டதால் இந்த மாற்றம் சாத்தியமானது. இந்தத் துறையில் சீனாவின் எல்லையில் அமைந்துள்ள ஜோஹர், தர்மா, வியாஸ் மற்றும் சவுண்டாஸ் பள்ளத்தாக்குகளில் உள்ள கடைசி கிராமங்களை வரை சாலைகள் போடப்பட்டுள்ளன'' என்றார்.

சுற்றுலாப் பயணிகளுக்கான தங்குமிடங்களை ஊக்குவிப்பதற்கான மாநில அரசாங்கத்தின் முயற்சிகள் மற்றும் சில கலாச்சார அமைப்புகளின் பணிகள் மக்களை வீடு திரும்ப ஊக்குவித்திருக்கலாம் எனவும் பழங்குடி மக்களிடையே கலாச்சார விழிப்புணர்வைப் பரப்புவதில் தர்மா பள்ளத்தாக்கிலுள்ள ரங் கல்யாண் சன்ஸ்தா மற்றும் ஜோஹர் பள்ளத்தாக்கிலுள்ள மல்லா ஜோஹர் விகாஸ் சமிதி ஆகியோரின் பணிகளும் இத்தகைய போக்குக்குக் காரணம் என்றும் லலித் பந்த் கூறுகிறார்.

மல்லா ஜோஹர் விகாஸ் சமிதியின் தலைவரும் மிலம் கிராமத்தில் நிரந்தரமாக வசித்து வருபவருமான, ஸ்ரீராம் சிங் தர்மசக்தி, ''கிராமத்தில் உள்ள எனது நிலத்தை இன்னும் போய் பார்க்கவில்லை. எனினும் விரைவில் அதனைச் சென்று பார்த்து, வரும் கோடைகாலத்தில் அங்கு வாழ விரும்புகிறேன்'' என்றார்.

ஓய்வுபெற்ற எல்லை பாதுகாப்புப் படைத் தளபதி தர்மசாகு கூறுகையில், ''மிலாமில் உள்ள எனது மூதாதையர் வீட்டைப் பழுதுபார்த்து, அங்கேயே குடியேறுவேன்'' என்று தெரிவித்தார்.

ஓய்வுபெற்ற உணவுக் கழக அதிகாரியும் மிலாமில் வசிப்பவருமான திக்விஜய் சிங் ராவத், ஓய்வு பெற்ற பின்னர் அந்த கிராமத்தில் ஒரு புதிய வீட்டைக் கட்டியுள்ளார். ''ஹல்த்வானியில் எனக்கு ஒரு வீடு இருந்தாலும், எனது மூதாதையர் இல்லமான மிலாம் கிராமத்தில் நான் வசிப்பேன்” என்கிறார் ராவத்.

தர்ச்சுலா துணைப்பிரிவின் தர்மா பள்ளத்தாக்கில், பல தசாப்தங்களுக்கு முன்னர் தங்கள் கிராமங்களை விட்டு வெளியேறுவதற்காக வெளியேறிய பல குடியிருப்பாளர்கள் தங்கள் மூதாதையர் கிராமங்களுக்குத் திரும்பி வருகின்றனர்.

''தர்மா பள்ளத்தாக்கின் கடைசி கிராமத்திற்கும் சாலை இணைப்பு செய்யப்பட்டுவிட்டது. இதனால், பள்ளத்தாக்கின் பல கிராமங்களில் ஆப்பிள் தோட்டத்தை அமைக்கத் தொடங்கினோம்'' என்று ஓய்வுபெற்ற ரயில்வே அதிகாரி ராம் சிங் சோனல் கூறுகிறார். இப்போது தர்மா பள்ளத்தாக்கிலுள்ள தனது மூதாதையர் கிராமமான சோனிற்கு மீண்டும் திரும்பிவிட்டார். அங்கு தனது பள்ளத்தாக்கை ஆப்பிள் பழத்தோட்டமாக மாற்றத் தொடங்கியுள்ளார்.

அதேபோல, மலையேறுதல் துறையில் தனது பங்களிப்புக்காக பத்மஸ்ரீ விருது பெற்றவர், எவரெஸ்ட் ஏறுபவர் மோகன் சிங் குன்ஜால். ஐபிபிபியில் (India Post Payments Bank) இருந்து ஓய்வு பெற்ற பின்னர் தனது சொந்த கிராமமான குஞ்சியில் கோடைகாலத்தின் பெரும்பகுதியைக் கழித்து வருகிறார்.

2020 ஆம் ஆண்டில் கட்டுமானத்தில் உள்ள கட்டியாபகர் முதல் லிபுலேக் சாலைப் பணிகள் முழுமையடைந்த பிறகு வியாஸ் பள்ளத்தாக்கு கிராமங்கள் முழுமையாக புத்துயிர் பெறும் என்கிறார் மோகன் சிங் குன்ஜால்.

மோகன் சிங் குன்ஜால் மேலும் கூறுகையில், ''இந்த எல்லை பள்ளத்தாக்குகளில் உள்ள மக்கள், சுமார் 140 குடும்பங்கள் ஆடுகளை வளர்ப்பது மற்றும் கோடை மாதங்களில் தங்கள் கிராமங்களுக்கு வந்து தங்கள் நிலங்களைப் பயிரிடுவது வழக்கம். அவர்களுக்கு மருத்துவப் பராமரிப்பு, தகவல் தொடர்பு மற்றும் போக்குவரத்து வழங்கினால், அனைத்து கிராமங்களும் மீண்டும் பழைய மக்கள்தொகைக்கு மாறும்.

இந்த கிராமவாசிகளில் குறைந்தபட்சம் ஓய்வுபெற்ற மக்களும், ரங் பழங்குடியினரின் வேலையற்ற இளைஞர்களும் சுற்றுலாவினருக்கு தங்குமிடம் ஏற்பாடு செய்வதன் மூலமும், காய்கறித் தோட்டங்களை அமைப்பதன் மூலமாகவும் சம்பாதிக்கத தொடங்கியுள்ளனர்.'' என்றார்.

சாமோலி மாவட்டத்தில் ஒரு எல்லை கிராமத்தில் நிரந்தரமாக வசிக்கும் முன்சியாரி துணை மாவட்ட ஆட்சியர் பகத் சிங் ஃபோனியா கூறுகையில், ''கடைசி எல்லை முகாம்களுக்கும் சாலைகள் அமைக்கத் தொடங்கிய பின்னர் கடந்த ஐந்து ஆண்டுகளில் கிராமங்களுக்குத் திரும்புவதற்கான போக்கு காணப்பட்டது. எல்லைப் பிராந்தியத்தில் போக்குவரத்து தொடர்பு மற்றும் மின்சாரம் அதிகரித்தால், கிராமவாசிகள், குறைந்தபட்சம் ஓய்வு பெற்றவர்கள் தங்கள் மூதாதையர் கிராமங்களில் தங்கத் தொடங்குவார்கள். நானும் ஓய்வுக்குப் பிறகு எனது கிராமத்திற்குச் சென்று குடியேறுவேன்'' என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x