Published : 01 Oct 2019 03:03 PM
Last Updated : 01 Oct 2019 03:03 PM
சென்னை
மருத்துவர் அறிவுரையின்றி சுயமாக மருந்து உட்கொண்டால் கல்லீரல் பாதிப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படும் என மருத்துவர் ரூபா எச்சரித்துள்ளார்.
தங்களது உடல் பாதிப்புகளுக்கு மருத்துவர்களின் அறிவுரையின்றி, தங்களுக்குத் தெரிந்த அல்லது மற்றவர்கள் பரிந்துரைத்த மருந்துகளை மருந்துக் கடைகளில் வாங்கி ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இதுபோன்று, சுயமாக மருந்துகள் உட்கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நுங்கம்பாக்கத்தில் உள்ள மகளிர் கிறிஸ்தவக் கல்லூரியில் நேற்று (செப்.30) நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், மருத்துவரும் பேராசிரியருமான ரூபா, பின்னணி பாடகர் விஜய் ஏசுதாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சுய மருத்துவத்தின் தீங்குகள் குறித்து எடுத்துரைத்தனர்.
நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவர் ரூபா, "பாரசிட்டமால் உள்ளிட்ட மாத்திரைகளை அளவுக்கதிகமாக எடுத்தால் கல்லீரல் பிரச்சினைகள் ஏற்படும். வலிநீக்கி மருந்துகளை அதிகமாக உட்கொண்டால் அல்சர் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படும்.
கல்லூரிப் பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் வயிற்று வலி ஏற்படும். உதிரப்போக்கு அதிகமாக இருக்கலாம். அதற்கு குரோசின் போன்ற வலிநீக்கிகளை உட்கொண்டால் வயிற்று வலி தீராது. உதிரப்போக்கு அதிகமாக இருந்தால் அதற்கு ஒருவித மாத்திரையும், வயிற்றுவலி அதிகமாக இருந்தால் அதற்கொரு மாத்திரை என தனித்தனியே கொடுக்க வேண்டும். தங்கள் விருப்பத்திற்கு ஏற்ற மாத்திரைகளை போடக்கூடாது" எனத் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று, சுய மருந்துகளின் பாதிப்புகள் குறித்துப் பேசிய பின்னணி பாடகர் விஜய் ஏசுதாஸ், மாணவிகளின் கோரிக்கையை ஏற்று தான் பாடிய பாடல்களை மேடையில் பாடினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT