Last Updated : 11 Aug, 2017 12:09 PM

 

Published : 11 Aug 2017 12:09 PM
Last Updated : 11 Aug 2017 12:09 PM

இளமை நெட்: யாரெல்லாம் டிஜிட்டல் தலைமுறை?

டி

ஜிட்டல் உலகிலும் மண்ணின் மைந்தர்கள் உண்டு. இவர்கள் ‘டிஜிட்டல் பூர்வகுடிகள்’. பொதுவாக 1980-களுக்குப் பிறகு பிறந்த தற்காலத் தலைமுறையினர் அனைவரும் இந்தப் பிரிவின் கீழ் வருகின்றனர். அதற்கு முந்தைய தலைமுறையினர் எல்லோரும் ‘டிஜிட்டல் குடியேறிகள்’ எனக் கருதப்படுகின்றனர். இதைப் பாகுபாடு எனக் கொள்வதா, வகைப்படுத்தல் எனக் கொள்வதா?

இணையத் தொழில்நுட்பங்களையும் டிஜிட்டல் கருவிகளையும் சேவைகளையும் வெகு இயல்பாகப் பயன்படுத்தும் திறன் அடிப்படையில் இப்படி வகைப்படுத்துகிறார்கள். இப்போது பிறக்கும் குழந்தைகள் ஐபேட் சாதனத்துடனும் ஸ்மார்ட் போனுடனும் பிறப்பதாக வியக்கிறோம் அல்லவா? இப்படி வியக்கவைக்கும் பிள்ளைகள்தான் டிஜிட்டல் பூர்வகுடிகள். டிஜிட்டல் உலகம் அவர்களின் தாய் வீடுபோல. எனவே, அவர்களால் கம்ப்யூட்டரையும் ஸ்மார்ட் போனையும் பேஸ்புக்கையும் வாட்ஸ் அப்பையும் தானாகவே பழகிக்கொள்ள முடியும். டிஜிட்டல் சங்கதி என்று வரும்போது அவர்கள் பெற்றோர்களுக்கு மட்டுமல்ல, ஆசிரியர்களுக்கே பாடம் நடத்தக்கூடியவர்களாகவும் இருப்பார்கள்.

டிஜிட்டல் குடியேறிகள்

இப்படி கம்ப்யூட்டரும் இணையமும் அவர்கள் உடன்பிறந்த நுட்பங்களாக இருப்பதால் கம்ப்யூட்டர் யுகத்தில் பிறந்தவர்கள் எல்லாமே டிஜிட்டல் மைந்தர்கள். முந்தைய தலைமுறையினர் இணையப் பயன்பாட்டில் என்னதான் கில்லாடிகளாக இருந்தாலும், அவர்கள் டிஜிட்டல் நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு புதிய யுகத்துக்கு ஏற்ப மாறியவர்களாகக் கருதப்படுவதால், டிஜிட்டல் உலகில் குடியேறிகள் எனச் சொல்லலாம். அதாவது டிஜிட்டல் இமிகிரண்ட்ஸ்!

இக்காலத் தலைமுறை டிஜிட்டல் தலைமுறையாகவே கருதப்படுகிறது. இக்கால இளம் பெண்களும் இளைஞர்களும் கையில் போனை வைத்துக்கொண்டு குறுஞ்செய்தி தட்டச்சு செய்யும் வேகத்தையும் காதில் இயர்போனை மாட்டிக்கொண்டு தன்னை மறந்தவர்களாக உலவுவதையும் பார்க்கும்போது, இவர்கள் வேற்றுக் கிரகத்திலிருந்து வந்தவர்கள் போலத்தான் தோன்றுகிறது. இந்த அளவுக்குத் தொழில்நுட்ப உலகில் மூழ்கிவிடுவது நமக்கெல்லாம் சாத்தியம் இல்லை என முந்தைய தலைமுறையினர் எண்ணலாம்.

எல்லாம் மாயை

ஆனால், விஷயம் என்னவெனில் இதெல்லாம் வெற்று மாயை என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர் என்பதுதான். அதாவது முந்தைய தலைமுறையோ இந்த தலைமுறையோ தொழில்நுட்ப பயன்பாடு என்று வரும்போது, யாருக்கும் தனித்திறன் எல்லாம் கிடையாது எனத் தெரிவித்துள்ளனர். டிஜிட்டல் பூர்வகுடிகள் எனும் கருத்தாக்க பலூனை ஊசியால் குத்தி காற்றுப்போக வைத்திருக்கும் இந்த ஆய்வை பற்றிப் பார்ப்பதற்கு முன், அமெரிக்க கல்வியாளரான மார்க் பிரென்ஸ்கைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்துகொள்வது நல்லது. ஏனெனில் இவர்தான், டிஜிட்டல் பூர்வகுடிகள் எனும் கருத்தாக்கத்தைத் தொடங்கிவைத்தவர்.

2001-ம் ஆண்டு அவர் எழுதிய கட்டுரை ஒன்றில்தான் டிஜிட்டல் பூர்வகுடிகள், டிஜிட்டல் குடியேறிகள் எனும் கருத்தாக்கத்தை முன்வைத்தார். அமெரிக்கக் கல்வித் தரத்தில் ஏற்பட்டுள்ளதாகச் சொல்லப்படும் வீழ்ச்சி பற்றிய விவாதத்துடன் தொடங்கிய இந்தக் கட்டுரையில், ‘இதற்கான மூல காரணம் நம்முடைய மாணவர்கள் எல்லாம் மிகவும் மாறிவிட்டனர், இன்றைய மாணவர்கள் நம்முடைய கல்வி அமைப்பைக் கற்றுத்தரக்கூடியவர்களாக இல்லை’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

இணையத்தில் வேகம்

கல்வி அமைப்பில் தேவையான மாற்றத்தைத் தொடர்ந்து வலியுறுத்திய அவர், ‘இன்றைய மாணவர்கள் புதிய மாணவர்களாக இருக்கின்றனர். அவர்கள் கம்ப்யூட்டர், வீடியோகேம், இணையத்தின் மொழியை இயல்பாகப் பேசும் டிஜிட்டல் பூர்வகுடிகளாக இருக்கின்றனர்’ என்றும் குறிப்பிட்டிருந்தார். மற்றவர்கள் எல்லாம், ‘டிஜிட்டல் உலகில் பிறக்காமல் புதிய தொழில்நுட்பத்தின் அம்சங்களால் ஈர்க்கப்பட்டு அவற்றைக் கற்றுக்கொண்டவர்களாகவே இருப்பதால் அவர்களை டிஜிட்டல் குடியேறிகள்’ என்றும் குறிப்பிட்டிருந்தார். கல்வியாளர்களும், வர்த்தக நிறுவனங்களும் பழைய வழிகளைத் தூக்கியெறிந்துவிட்டு, டிஜிட்டல் தலைமுறைக்கு ஏற்ற புதிய வழிகளைக் கடைபிடிக்க வேண்டும் என்றும் இந்தக் கட்டுரையில் வாதிட்டிருந்தார்.

இதன் பிறகு டிஜிட்டல் பூர்வகுடிகள் எனும் கருத்தாக்கம் மெல்ல வலுப்பெற்றுப் பரவலாகிவிட்டது. கம்ப்யூட்டர் சார்ந்த தொழில்நுட்பங்கள் நிறைந்த யுகத்தில் பிறந்து வளரும் தலைமுறை, டிஜிட்டல் நுட்பங்களைத் தாய்மொழிபோல் கற்றுக்கொண்டு விடுவதாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்தக் கருத்தாக்கம் அறிவியல் சார்ந்தது அல்ல என்பது மட்டுமல்ல, இடைப்பட்ட காலத்தில் பல ஆய்வுகள் இந்தக் கருத்தாக்கத்தைக் கேள்விக்குள்ளாக்கி இருக்கின்றன.

ஆய்வு சொல்லும் முடிவு

இந்த வரிசையில்தான் சமீபத்தில், நெதர்லாந்து ஆய்வாளர் பால் கிறிச்னர், அவருடைய சகா பெட்ரோ டி புருக்கரேவுடன் இணைந்து நடத்திய ஆய்வு அமைந்துள்ளது. ‘டீச்சிங் அண்ட் டீச்சர் எஜுகேஷன்’ எனும் இதழில் வெளியாகியுள்ள இந்த ஆய்வு, டிஜிட்டல் பூர்வகுடிகள் என இக்கால தலைமுறையினரை கருதுவதே ஒரு மாயை எனத் தெரிவிக்கிறது. இளம் தலைமுறையைச் சேர்ந்த பலரும், முந்தைய தலைமுறையினர்போல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதாகவும் அந்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

‘மக்களை வழக்கமான முறையில் கற்றுக்கொள்ளக்கூடியவர்களாகப் பார்க்க வேண்டுமே தவிர, ஒரு குறிப்பிட்ட பிரிவினரை விஷேச திறன் கொண்டவர்களாகப் பார்க்க முடியாது’ என்று ஆய்வை நடத்திய பால் கிறிச்னர் கூறியுள்ளார். அதுமட்டுமல்ல; இணைய தலைமுறை ஒரே நேரத்தில் பல வேலை பார்க்கக்கூடியவர்களாக இருப்பதாகக் கூறப்படுவதையும் இந்த ஆய்வு மறுத்துள்ளது. ‘வகுப்பில் பாடம் கேட்டுக்கொண்டே, போனில் செய்தி அனுப்புவது, ஒரே நேரத்தில் பலவற்றைச் செய்யும் மல்டிடாஸ்கிங் ஆற்றல் அல்ல, பாடத்தில் கவனம் செல்லாமல் இருப்பதே’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் யுகம் தொடர்பான பிரதான மாயையைத் தகர்க்கும் வகையிலான இந்த ஆய்வு பலவிதங்களில் முக்கியமானது. ஏனெனில், டிஜிட்டல் பூர்வகுடிகள் என்று யாருமே கிடையாது என இந்த ஆய்வு தெரிவிக்கிறது. இந்த மாயை கலைவது நல்லதுதான்.

இந்த இடத்தில், டிஜிட்டல் பூர்வகுடிகள் கருத்தாக்கத்தை முதலில் தெரிவித்த மார்க் பெர்ன்ஸ்கையை மீண்டும் நினைவில்கொள்ள வேண்டும். இந்தக் கருத்தாக்கத்துக்கு ஏற்கெனவே அவர் விளக்கம் அளித்துள்ளார். ‘டிஜிட்டல் பூர்வகுடி’ எனும் பதத்தைப் பலரும் தவறாகப் புரிந்துகொண்டுள்ளனர், நம்மைச் சுற்றி நடக்கும் மாற்றத்தைக் குறிப்பதற்கான உருவகமே இந்தப் பதம். குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு பிறந்தவர்களுக்கு எல்லாம் தொழில்நுட்பம் பற்றி எல்லாம் தெரியும் எனும் அர்த்தத்தில் இந்தப் பதம் அமையவில்லை’ என்றும் அவர் விளக்கம் அளித்திருந்தார். இந்தப் பதம் உண்மையில், தொழில்நுட்பம் தொடர்பான அணுகுமுறையை மட்டுமே குறிப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

அதுமட்டுமல்ல; இந்தப் பதத்துக்குப் பதிலாக டிஜிட்டல் ஞானம் எனும் புதிய பதத்தை அவர் பயன்படுத்திவருகிறார்: http://marcprensky.com/digital-native/

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x