Published : 04 Aug 2017 11:10 AM
Last Updated : 04 Aug 2017 11:10 AM
கா
தல் நல்லது. காதலிப்பது நல்லது. ஆனால், அது ஆரோக்கியமான காதலா என்பதில்தான் எல்லாமே அடங்கியிருக்கிறது. ஒருவரையொருவர் காதலிப்பது உறுதியான பிறகு, இனி எந்தப் பிரச்சினையும் இல்லை என்றுதான் பெரும்பாலான காதலர்கள் நினைக்கிறார்கள். ஆனால், உண்மையில் காதலிக்கத் தொடங்கிய பிறகுதான், நிறைய சவால்களைக் காதலர்கள் சந்திக்க வேண்டியிருக்கும்.
காதல் உறவில் இருக்கும் அந்தச் சவால்களை ஏற்றுக்கொண்டு, அதை எதிர்கொள்ளும் காதல்தான் இறுதியில் வெற்றிபெறும். ஏனென்றால், பிரச்சினைகளே இல்லாத காதல் உறவு என்று ஒன்று இருக்கவே முடியாது. ஆனால், அந்தக் காதல் ஆரோக்கியமானதாக இருக்கும்போது அதில் ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்ப்பது சுலபம். உங்களுடைய காதல் ஆரோக்கியமானது என்றால், அதில் இந்த அம்சங்கள் அனைத்தும் இடம்பெற்றிருக்கும்:
சந்திப்புகள்
நீங்கள் இருவருமே எப்போதும் உங்களுடைய சந்திப்புகளை எதிர்நோக்கிக் காத்திருப்பீர்கள். உங்கள் காதலன்/காதலியுடன் இருக்கும்போது தெம்பாகவும் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் உணர்வீர்கள். ஒருவேளை, உங்கள் காதலர்/காதலியின் வற்புறுத்தலின் காரணமாகத்தான் எப்போதும் சந்திக்கிறீர்கள் என்றால் உங்களுடைய காதலில் ஏதோ சிக்கல் இருக்கிறது என்று அர்த்தம். ஆரோக்கியமான காதலில் சந்திப்புகள் இயல்பாக இருக்கும். வற்புறுத்தல்களுக்கு அங்கே இடமில்லை.
பிரச்சினைகள்
நீங்கள் இருவரும் எப்போதும் உங்களுடைய வாழ்க்கையின் பிரச்சினைகளைப் பரஸ்பரம் பகிர்ந்துகொள்வீர்கள். ஒருவர் பிரச்சினையால் பாதிக்கப்படும்போது, இன்னொருவரிடமும் அந்தப் பாதிப்பு தெரியும். இருவரும் ஒரே குழுவாக இருந்து வாழ்க்கையின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முயல்வீர்கள். அப்படியில்லாமல், உங்கள் காதலனோ/காதலியோ உங்களுடைய பிரச்சினைகளை எப்போதும் பொருட்படுத்தவே மாட்டார்கள் என்றால், அது ஆரோக்கியமான காதலாக இருக்க முடியாது.
சிறந்த மனிதர்
காதல், உங்களைச் சிறந்த மனிதராக மாற்றியிருக்கும். உங்களுடைய இந்த மாற்றத்தை நீங்கள் மனதார விரும்புவீர்கள். வாழ்க்கையைச் சிறந்த கண்ணோட்டத்துடன் அணுகத் தொடங்கியிருப்பீர்கள். நேர்மறையாகவும் தன்னம்பிக்கையுடனும் சிந்திக்கத் தொடங்கியிருப்பீர்கள். உங்கள் காதலன்/காதலி உடன் இருப்பதால், அன்றாட வாழ்க்கையில் சவால்களை எதிர்கொள்வதற்குத் தயங்க மாட்டீர்கள். ஒருவேளை, காதல் உங்களைச் சிறந்த மனிதராக மாற்றுவதற்குப் பதிலாக, வாழ்க்கையில் முன்னேறவிடாமல் தடுக்கிறது என்றால், அதை ஆரோக்கியமான காதலாகக் கருத முடியாது.
நட்பு வட்டம்
காதல் உறவு மட்டுமே உங்கள் இருவரின் அடையாளமாக இருக்க முடியாது. அதனால், காதலைத் தாண்டி யோசிப்பதற்குத் தயங்கக் கூடாது. உங்கள் இருவரின் நட்பு வட்டம், பணி வாழ்க்கை, மற்ற ஆர்வங்கள் போன்ற அம்சங்களுக்கு எப்போதும்போல முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். வாழ்க்கையின் எல்லா அம்சங்களையும் உள்ளடக்கியதாகத்தான் காதல் இருக்க வேண்டும். அப்படியில்லாமல், நண்பர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது என்று சொல்லும் காதலை ஆரோக்கியமான காதலில் சேர்க்க முடியாது.
வெறுப்புகளுக்கு இடமில்லை
உங்கள் காதலன்/காதலியுடன் பிரச்சினை ஏற்படும்போது அதைப் பேசித் தீர்த்துக்கொள்வீர்கள். உங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கான சுதந்திரம் எப்போதும் இருக்கும். உங்கள் இருவருக்குமிடையே தீர்க்க முடியாத பிரச்சினைகள் என எவையும் இருக்காது. உங்கள் இருவருக்கும் பரஸ்பரம் எந்த வெறுப்பும் இருக்காது. நீங்கள் இருவரும் எப்போதும் பரஸ்பர மரியாதையுடன் அணுகிக்கொள்வீர்கள். ஒருவரையொருவர் எப்போதும் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துக்கொள்ள மாட்டீர்கள். இருவருமே பரஸ்பரம் மற்றவரின் உணர்வுகளைக் காயப்படுத்தாமல் நடந்துகொள்வீர்கள். ஒருவேளை, உங்கள் காதலனோ/காதலியோ எப்போதும் வெறுப்பை மட்டுமே வெளிப்படுத்திக்கொண்டிருந்தால், அதுவும் நிச்சயமாக ஆரோக்கியமான காதல் இல்லை.
முன்னுரிமைகள்
உங்கள் இருவரிடமும் பரஸ்பரம் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இருக்கும். தனிப்பட்ட தேவைகளுக்கு எப்போது முன்னுரிமை கொடுக்க வேண்டும், உங்களுடைய உறவுக்கு எப்போது முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கும். உங்களுடைய காதலின் இணக்கம் பாதிக்கப்படாமல், தனிப்பட்ட தேவைகளைப் பின்னுக்குத் தள்ளுவதற்கும் தயங்க மாட்டீர்கள். அப்படியில்லாமல், எப்போதும் உங்களுடைய தனிப்பட்ட தேவைகளுக்கு மட்டும் முன்னுரிமை கொடுத்தால், அது எப்படி ஆரோக்கியமான காதலாக இருக்கும்?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT