Published : 07 Jul 2017 11:50 AM
Last Updated : 07 Jul 2017 11:50 AM
‘ஸ்டாண்ட் அப் காமெடி’ என்றதும் சேனலுக்குச் சேனல் மூச்சுவிடாமல் வளவளவெனப் பேசித் தீர்க்கும் சில முகங்கள் கண் முன்னே வந்துபோகின்றனவா? அதிலும் நகைச்சுவை துணுக்குகளைச் சொல்பவர் ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் சரி ‘கணவன்-மனைவி சண்டை சச்சரவு, ‘வாத்தியார்-மாணவர் கிண்டல்’ தலைப்பை எடுத்துக்கொண்டு மொக்கை ஜோக்குகளை சொல்லியே கொல்வார்கள்! அவர்களையெல்லாம் மறக்கடிக்க வைக்கும் அளவுக்கு நிஜமாகவே ஸ்டாண்ட் அப் காமெடி செய்யும் இளைஞர்கள் சிலர் புறப்பட்டுவிட்டார்கள்.
ஆனால் இவர்கள் காமெடி செய்வதோ ஆங்கிலத்தில். இருந்தாலும் ஏதோ தமிழிலேயே பேசுவதுபோல ஆங்கிலத்தை உச்சரித்து, ஆங்காங்கே ‘டா’, ‘மச்சான்’ வார்த்தைகளைத் தூவிப் புதிய பாணியில் கலக்குகிறார்கள். இப்படி ஸ்டாண்ட் அப் காமெடி செய்யும் இளைஞர்களில் ஒருவர் அரவிந்த் எஸ்.ஏ.
வரிக்கு வரி கலாய்!
இந்தச் சென்னை பையன் சென்னை, பெங்களூரு, மும்பையில் மட்டுமல்ல அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் ஸ்டாண்ட் அப் காமெடி சரவெடிகளைக் கொளுத்திப் போட்டிருக்கிறார். இவருடைய நகைச்சுவை மூட்டைகளில் மேடையிலும் யூடியூபிலும் சக்கைப்போடுபோட்டது ‘மத்ராஸி டா’ (‘Madrasi Da’). கடந்த ஆறு ஆண்டுகளாக ஸ்டாண்ட் அப் செய்துவரும் இவர் கடந்த சில வாரங்களாக இணையத்தில் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறார். எல்லாம் அவருடைய ‘ஒய் தமிழ்ஸ் டோண்ட் ஸ்பீக் இந்தி’ (‘Why Tamils Don’t Speak Hindi’) காமெடி செய்த வேலை. அதில் ‘லுங்கி டான்ஸ்’ பாடலை வரிக்கு வரி கலாய்த்தார் அரவிந்த்.
தமிழர்களைக் காட்சிப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு அந்தப் பாடல் எவ்வளவு சொதப்பலாக எழுதப்பட்டிருக்கிறது என்பதை சொல்லிக் கேலி செய்தார். வட இந்தியர்களுக்கு எதிரான கருத்தைச் சொன்னதாக அவரை ‘இனவெறிப் பிடித்தவர்’, தேசத் துரோகி என கமெண்ட் பகுதியில் வசைபாடித் தீர்த்தார்கள் பலர். ஆனால், இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் ஸ்டாண்ட் அப் காமெடியில் கவனம் செலுத்தி வருகிறார் இவர். அவரைச் சந்தித்து ஸ்டாண்ட் அப் காமெடி மற்றும் சர்ச்சைகள் பற்றி கேட்டேன்:
“மத்ராஸி டா என்பது ஒரு பேக்கேஜ். அதில் ஒரு பகுதி இந்த லுங்கி டான்ஸ் பாடல் பற்றிய கேலி. இதை நான் பல முறை பல மேடைகளில் நிகழ்த்தி இருக்கிறேன். ஆனால் ஒரு முறைகூட இது போன்ற எதிர்வினைகள் வந்தது இல்லை. மேடையில் நிகழ்ச்சியை நேரடியாகப் பார்க்கும் அனுபவம் வேறு, நிகழ்ச்சியின் ஒரு பகுதியை மட்டும் யூடியூபில் பார்த்துவிட்டுக் கமெண்ட் சொல்வது வேறு. ஆனால், பிரச்சினை ஏற்படுத்துவதற்காகவே ஒரு பகுதியை மட்டும் பிரித்தெடுத்துச் சர்ச்சைக்கு உள்ளாக்குகிறார்கள்” என்றார் அரவிந்த்.
இதே நகைச்சுவையை வட இந்திய மேடைகளில் சொல்ல முடியுமா என்று கேட்டால், “மும்பையில்கூட இதே பாடலைக் கலாய்த்துப் பேசி கைதட்டலும் வாங்கியிருக்கிறேன். நகைச்சுவையின் அடிப்படையே ஒருவர் தன்னைத் தானே கேலிக்குள்ளாக்குவதும், இதுவரை பேசத் தயங்கியவற்றைப் பற்றி கேலியாகத் துணிந்து பேசுவதும்தான். என்னைச் சுற்றி நிகழும் சம்பவங்களைச் சமூக அறிவோடும் புத்திசாலித்தனத்தோடும் கேலிக்கு உள்ளாக்குகிறேன். அந்த வகையில், இந்தி-தமிழ் விவகாரம் மட்டுமல்ல ஆண்-பெண் உறவுக் குறித்தும் வெளிப்படையாக நகைச்சுவையோடு என்னுடையக் கருத்தைப் பதிவுசெய்துவருகிறேன். யாரையும் புண்படுத்த நான் பேசவில்லை. ஒவ்வொரு நிகழ்ச்சி முடிந்ததும் தவறாமல் ஃபீட்பேக் வாங்குவது என்னுடைய வழக்கம். ஒரு வேளை நான் சொல்வதில் தவறு இருந்து, அதை மற்றவர்கள் சுட்டிக்காட்டினால் ஏற்றுக்கொள்வேன்” என்கிறார்.
மானசீக குரு கவுண்டமணி
சென்னை எல்.வி. பிரசாத் ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் திரைப்பட இயக்கத்துக்கான பட்டயப் படிப்பை முடித்துவிட்டு ‘ஆரம்பம்’ உள்ளிட்ட சில தமிழ் திரைப்படங்களில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர் இவர். ஒரு கட்டத்தில் தன்னுடைய பலம் நகைச்சுவைப் பேச்சுதான் எனக் கண்டறிந்து மேடை ஏறினார்.
“எனக்குக் கூச்ச சுபாவம் அதிகம். கல்லூரி கலை நிகழ்ச்சிகளில்கூட மரமாக வேடம்போட்டுக்கொண்டு மறைவாக நின்றுவிடுவேன். அந்தக் கூச்சத்திலிருந்து என்னை வெளியே கொண்டுவந்ததில் முக்கியப் பங்கு நண்பரும் வழிகாட்டியுமான பார்கவுக்கு உண்டு. இன்றுவரை என் அச்சத்தை மூலதனமாக வைத்தே என்னுடைய காமெடி ஸ்கிரிப்ட்டை உருவாக்குகிறேன்” என்கிறார்.
மேற்கத்திய நாடுகளில், ‘ஓப்பன் மைக்’ என்கிற கான்செப்ட் மிகவும் பிரபலம். அதில் ஸ்டாண்ட் அப் காமெடி செய்ய எல்லோருக்கும் வாய்ப்பு வழங்கப்படும். தொடர்ந்து தன்னுடைய நகைச்சுவைத் திறனை நிரூபிப்பவர்களுக்கு மேடை நிகழ்ச்சிகள் நடத்த வாய்ப்பு வழங்கப்படும். இந்தப் பாணியை நம்முடைய ஊருக்கு இறக்குமதி செய்தவர்களில் அரவிந்தும் ஒருவர்.
அதனால்தான் ஆங்கிலத்திலேயே பேசுகிறீர்களா என்றால், “இல்லை. என்னுடைய நக்கலுக்கும் நையாண்டிக்கும் மானசீக குரு கவுண்டமணிதான். சொல்லப்போனால் என்னுடைய ஆங்கிலம் கிட்டத்தட்டத் தமிழ் போலவே ஒலிக்கும். ஏனென்றால் தமிழில் யோசித்துத்தான் ஆங்கிலத்தில் ஸ்கிரிப்ட் எழுதுவேன்” என்கிறார் அரவிந்த்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT