Published : 28 Jul 2017 10:36 AM
Last Updated : 28 Jul 2017 10:36 AM
சென்னையில் கடற்கரை, தியேட்டர், பூங்கா, மைதானம் என இளைஞர்களும் யுவதிகளும் கூடும் இடங்கள் எல்லாம் இன்று மலையேறிவிட்டன. சந்திக்க வேண்டும் என்று திட்டமிட்டாலே இளைஞர்கள் ஒன்றுகூடும் இடத்தில் மால்கள் முதலிடத்துக்கு வந்துவிட்டன. இளைஞர்களை ஈர்க்கக்கூடிய விஷயங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் கிடைப்பது இதற்கு ஒரு காரணம். அதற்கேற்ப மால்களும் புதிது புதிதாக இளைஞர்களை ஈர்க்கும் உத்திகளை அறிமுகப்படுத்திக்கொண்டே இருக்கின்றன.
அந்தக் கால மால்
மெட்ரோ நகரங்களில் வானுயர்ந்த மால்களை இன்று அதிகம் காண முடிகிறது. அந்த அளவுக்கு நாகரிக வளர்ச்சியின் நீட்சியாக மால்கள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. பெரு நகரங்களில் முப்பது, நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே மால்கள் வரத் தொடங்கிவிட்டாலும், சிறிய அளவிலேயே அவை இருந்தன. அந்த மால்களில் பெரும்பாலும் வர்த்தக நிறுவனங்களும் கடைகளும் மட்டுமே இயங்கிவந்தன. இன்று இருப்பதுபோல அன்றைய மால்களில் நவீன வசதிகள்கூடச் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை.
சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு சிறிய அளவில் உருவாக்கப்பட்ட ஸ்பென்சர் பிளாசா சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக விளங்கியது. தெற்காசியாவில் மிகப் பெரிய மால்களில் ஒன்றாகவும் அது விளங்கியது.
இந்த மாலில் அனைத்துப் பொருட்களும் கிடைத்ததால் மக்களிடையே பெரிய வரவேற்பை அந்தக் காலத்திலேயே பெற்றது. ஸ்பென்சர் பிளாசா 1985-ம் ஆண்டுக்குப் பிறகுதான் இன்றைய வடிவில் மாற்றியமைப்பட்டது. நகரும் படிக்கட்டுகள், வாகனங்கள் நிறுத்த தனி இடம் எனக் குளிரூட்டப்பட்ட வசதி கொண்ட மாலாக ஸ்பென்சர் மாறியது. அந்தக் காலகட்டத்தில் இளைஞர்கள் கூடும் இடங்களில் ஸ்பென்சர் பிளாசா முக்கிய இடத்தையும் பிடித்திருந்தது.
வளர்ச்சி
பிறகு 90-களுக்குப் பிறகு சென்னையில் மால்களின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கத் தொடங்கின. பிரின்ஸ் பிளாஸா, அல்சாமால் என சிறிய அளவிலான மால்கள் எழும்பூரில் உதயமாயின. இந்த மால்கள் இளைஞர்களின் வேடந்தாங்கலாக அன்று விளங்கின. 90-களில் சென்னையின் கல்லூரி மாணவ, மாணவிகள் இங்கே வராமல் நிச்சயம் இருந்திருக்க மாட்டார்கள்.
சில ஆண்டுகள் கழித்து அதே பகுதியில் உருவாக்கப்பட்ட ஃபவுண்டன் பிளாசாவும் இளைஞர்களின் சொர்க்கபுரியாக விளங்கியது. ஆடை, அணிகலன்கள், அழகுசாதனப் பொருட்கள், வாசனைத் திரவியங்கள் என இளைஞர்களை ஈர்க்கும் விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுத்ததால் பெரியவர்களும்கூட இங்கே படையெடுத்தனர்.
இதே காலகட்டத்தில் அண்ணா சாலையில் பார்ஸன் காம்ப்ளக்ஸ், நுங்கம்பாக்கத்தில் இஸ்பானி சென்டர், சேத்துப்பட்டில் ஷாப்பர்ஸ் ஸ்டாப், புரசைவாக்கத்தில் அபிராமி மால், வடபழனியில் ராஹத் பிளாஸா என மேலும் பல மால்கள் சென்னை நகரை அலங்கரிக்கத் தொடங்கின. இவை மட்டுமல்லாமல், தி. நகரின் பல பகுதிகளில் சிறியதும் பெரியதுமான பல மால்கள் அணிவகுக்கத் தொடங்கின.
சென்னை நகரில் மால்களின் எண்ணிக்கை அதிகரித்த வேளையில் மயிலாப்பூரில் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்ட சிட்டி செண்டர் பிரமிப்பை ஊட்டியது. அதிநவீனத் திரையரங்குகள், சர்வதேசத் தரத்திலான உணவகங்கள், சூப்பர் மார்க்கெட்டுகள், குறிப்பிட்ட நிறுவனங்களின் வர்த்தக மையங்கள் என மால்களின் வளர்ச்சி அடுத்த கட்டத்தை எட்டியது. இவை புதுமையாக இருந்ததால் இளைஞர்களின் இதயப் பகுதியாக இவை மாறின.
நவீன மால்கள்
இந்த மால்களில் பொழுதுபோக்கு அம்சங்களோடு ஸ்நூக்கர், ஸ்னோ பால் விளையாட்டுகளும், இளைஞர்களுக்கான ஜிம்களும், குழந்தைகளுக்கான விளையாட்டு அம்சங்களும்கூட அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
காலையில் உள்ளே நுழைந்தால் இரவுவரை மால்களில் நேரத்தைப் போக்கலாம். எதுவும் ஷாப்பிங் செய்யாவிட்டாலும் ஓசியிலேயே ஏ.சி.யில் சுற்றி வரவும் செய்யலாம். மால்களில் நண்பர்களைச் சந்தித்து மணிக்கணக்கில் அரட்டை அடிக்கலாம். இப்படிப் பல அம்சங்கள் இருப்பதால் இளைஞர்கள் விரும்பும் இடமாக மால்கள் மாறிவிட்டன. ஆனால், சென்னையில் பிரம்மாண்ட மால்களின் வரவால் ஒரு காலத்தில் இளைஞர்களை ஈர்த்த சிறு மால்கள் இன்று வெறிச்சோடும் நிலைக்கு வந்துவிட்டன.
ரசனைகளும் நவீன வசதிகளும் மாறிக்கொண்டே இருப்பதால் மால்களின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் காலத்திற்கேற்ப ஒன்றையொன்று விழுங்கிக்கொண்டேயிருக்கின்றன.
இது காலச்சக்கரம் சொல்லும் பாடமும்கூட.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT