Last Updated : 21 Jul, 2017 09:15 AM

 

Published : 21 Jul 2017 09:15 AM
Last Updated : 21 Jul 2017 09:15 AM

ஒரே கவிதை ஓஹோ புகழ்!

கல்லூரிகள், பள்ளிகள் என எங்கு திரும்பினாலும் திரைப்படப் பாடல்களே ஒலித்துவரும் இன்றைய காலகட்டத்தில் கேரளத்தில் ஒரு கல்லூரி ஆண்டு மலரில் வெளிவந்த கவிதை மாநிலம் முழுவதும் பிரசித்தமாகியிருக்கிறது. இளைஞர்கள் நூற்றுக்கணக்கானோர் இந்தக் கவிதையைப் பாடலாகப் பாடி யூடியூப், முகநூல் உள்ளிட்ட பல சமூக ஊடகங்களில் பதிவேற்றிவருகிறார்கள். கேரளத்தின் முன்னணிப் பதிப்பகமான டிசி புக்ஸ் இந்தக் கவிதையை வீடியோ ஆல்பமாகத் தயாரித்து வெளியிட்டுள்ளது.

திலிப் கைது, செவிலியரின் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் எனப் பல உள்ளூர்ப் பிரச்சினைகளுக்கு இடையில் இந்தக் கவிதையும் மாநில அளவில் முக்கியச் செய்தியாகியுள்ளது. செய்தி நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு இந்தக் கவிதையை எழுதிய இளைஞனின் நேர்காணலை வெளியிட்டுவருகின்றன. கேரளத்தின் முக்கியமான இதழாளரான ஜான் பிரிட்டோவும் இந்தப் போட்டியில் சேர்ந்துள்ளார் என்பது இந்த இளைஞனின் மீது கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது. கோட்டயம் சி.எம்.எஸ். கல்லூரியின் மாணவரான சாம் மேத்யூதான் இந்தச் சாதனைகளுக்குச் சொந்தக்காரர். 2012-ல் அவர் எழுதிய ‘சகாவு’ (தோழர்) என்னும் கவிதைதான் இவ்வளவு புகழை அவருக்குத் தேடிக் கொடுத்துள்ளது.

சி.எம்.எஸ். கல்லூரியில் செயல்பட்ட மாணவர் அரசியல் இயக்கமான எஸ்.எஃப்.ஐ.யின் உறுப்பினராக இருந்த ஒரு மாணவரைக் குறித்து எழுதப்பட்டது இந்தக் கவிதை. இந்தியாவின் பழமையான கல்லூரிகளுள் ஒன்றான இந்தக் கல்லூரியில் அடர்ந்த மரங்கள் அதிகம் உள்ளன. மஞ்சள் பூக்களை உதிர்க்கும் இந்த மரங்கள் ஒவ்வொன்றிலும் தனது அரசியல் போராட்டங்களுக்கான முழக்கங்களை எழுதி ஒட்டுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் அந்த மாணவர். போராட்டத்தில் கைது செய்யப்பட்ட அவர், பிறகு கல்லூரிக்குத் திரும்பவே இல்லை. அவருக்காகக் காத்திருந்து நம்பிக்கை இழந்த மஞ்சள் பூக்களை உதிர்க்கும் மரமொன்று, ஒரு காதலியைப்போல உருகிப் பாடும் கவிதையாக இதை சாம் படைத்திருக்கிறார்.

நாளை இந்த மஞ்சள் பூக்கள் அவிழ்ந்திடும்

பாதையில் உன்னைத் தேடி இறங்கும்

ஆண்டுத் தேர்வும் வரப்போகிறது தோழனே

ஆண்டு முழுவதும் ஜெயிலில்தானா?

சங்கு தெறிக்கும் உன் முத்திரை முழக்கங்கள் இல்லாத மண்ணில்

நின்று ஓய்ந்துவிட்டேன் நான்...

எனத் தொடர்ந்து செல்லும் இந்தப் பாடல்தான் இந்த வாரம் கேளரத்தில் அதிகம் கேட்கப்பட்ட பாடலாக இருக்கும். இந்தப் பாடலை எழுதியதுடன், மகாகவி பாரதியைப் போல் அதற்கு சாமே மெட்டும் அமைத்திருக்கிறார்.

அப்படி மெட்டமைத்த பாடலை அவரே பாடி ஸ்மார்ட் போனில் பதிவுசெய்து வாட்ஸ் அப்பின் வழியே நண்பர்களுக்கு அனுப்பியிருக்கிறார். ஆர்யா தயாள் என்னும் மாணவி அதைக் கேட்டிருக்கிறார். அவர் அந்தப் பாடலை, பின்னணி இசையுடன் தானே பாடி, முகநூலில் பதிவேற்றினார். ஆனால், அடுத்த சில நாட்களில் அந்தப் பதிவேற்றத்தை லட்சம் பேர் பகிர்ந்திருந்தார்கள்.

கல்லூரிகளில் ‘கேம்பஸ் பாட’லானது. சாம் மாத்யூ 2012-ல் எழுதிய கவிதை நான்கு வருடங்களுக்குப் பிறகு இப்படித்தான் புகழ்பெறத் தொடங்கியது. சாம் மாத்யூ எழுதிய அளவுக்கு அந்தப் பாடலுக்குத் தன் குரலால் உயிர் கொடுத்தார் ஆர்யா. டிசி புக்ஸ் வெளியிட்ட ஆல்பத்திலும் ஆர்யாதான் பாடியிருக்கிறார்.

இந்தக் கவிதை பிரபலமாகத் தொடங்கும்போதே இதற்கு இன்னொரு பிரச்சினையும் வந்தது. இந்தக் கவிதையைச் சொந்தம் கொண்டாடிக்கொண்டு நான்கு பேர் சர்ச்சையைக் கிளப்பினர். கவிதையைவிடவும் இந்தச் சர்ச்சை சில நாட்கள் களேபரமானது. சாம் மாத்யூ, தனது பிரசுர ஆதாரத்தை வெளியிட்டும் சர்ச்சை ஓய்ந்தபாடில்லை.

இப்போது பிரதிக்‌ஷா என்னும் 12-ம் வகுப்பு மாணவி இப்போது இதற்குச் சொந்தம் கொண்டாடியுள்ளார். இந்தச் சர்ச்சைகள் ஒருபுறம் இருக்க சாம், சகாவு கவிதையின் அதே நடையை ஒத்த மற்ற தனது கவிதைகளையும் பாடி யூடியுபில் பதிவேற்றியுள்ளார். அவையும் பிரபலமாகியுள்ளன. ஒரே ஒரு கவிதையில் காட்டக்கடை முருகன், பாலச்சந்திரம் இஞ்சக்காடு போன்ற மலையாளக் கவிகளின் வரிசையில் ஒருவராகிவிட்டார் சாம் மாத்யூ.

யூடியூபில் பாடலைக் கேட்க: https://www.youtube.com/watch?v=oCx-IAuntdo

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x