Published : 26 Mar 2019 10:53 AM
Last Updated : 26 Mar 2019 10:53 AM
சமூக ஊடகங்களை அனைவரும் பயன்படுத்தும் காலம் இது. சமூக ஊடகங்கள் வரமா, சாபமா என்ற விவாதம் பல தளங்களில் இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. ஆனால், அவை நம் வாழ்க்கையின் மீது செலுத்தும் தாக்கம் அதிகம் என்பதைப் பல தரப்பினரும் ஒப்புக்கொள்கிறார்கள். அடிமைப்படுத்துவது, நேரத்தைச் சாப்பிடுவது, ஊக்கப்படுத்துவது எனப் பலவிதமான தன்மைகளையும் கொண்டவை அவை.
ஆனால், சமூக ஊடக உலகத்துக்குள் சென்றுவிட்டால், அதிலிருந்து வெளியே வருவது அவ்வளவு எளிதான காரியமல்ல. அதிலும் சமூக ஊடகங்கள் காதல் உறவில் ஏற்படுத்தும் எதிர்மறை விளைவுகள் அதிகம்.
> சமூக ஊடகங்களில், நாம் பலரின் வாழ்க்கையைப் பின்தொடர்கிறோம். அதனால், சில காதலர்கள் தங்கள் காதல் வாழ்க்கையை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்துக் குழப்பிக்கொள்வார்கள். இந்த ஒப்பீடு அவசியமற்றது. அனைவருடைய வாழ்க்கையிலும் சமூக ஊடகங்களில் சொல்லாத கதை ஒன்று நிச்சயம் இருக்கும். தேவையில்லாத ஒப்பீடுகள் அதிகப்படியான எதிர்பார்ப்புகளை உருவாக்கும். சமூக ஊடகத்தில் நீங்கள் பின்தொடரும் யாரோ ஒருவர்போல், உங்கள் காதலர் இருக்க வேண்டுமென்று எதிர்பார்க்கத் தொடங்கினால், அது உங்கள் காதல் உறவில் விரிசலையே ஏற்படுத்தும்.
> காதலருடன் நீங்கள் எடுத்துக்கொள்ளும் ஒளிப்படங்களைச் சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை.
உங்கள் காதல் உறவு எப்படி இருக்கிறது என்பதை மற்றவர்களுக்குத் தெரிவிக்க வேண்டிய தேவையில்லை.
> சமூக ஊடகத்தை அதிகமாகப் பயன்படுத்தும்போது, ஒரு கட்டத்தில் உங்களுக்கு அருகில் உங்கள் காதலர் இருக்கிறார் என்பதையே நீங்கள் மறந்துவிடுவீர்கள். இப்படிச் சமூக ஊடகங்களில் அதிக நேரம் செலவிடுவது காதலர்களிடையே இடைவெளியை ஏற்படுத்திவிடும்.
> சமூக ஊடகங்களில், நீங்கள் மற்ற நண்பர்களுடன் இருக்கும் ஒளிப்படங்களை அதிகமாகப் பகிர்ந்துவிட்டு, உங்கள் காதலருடன் இருக்கும் ஒளிப்படங்களைப் பகிரவில்லையென்றால், அது தேவையற்ற பாதுகாப்பின்மையை உங்கள் காதலருக்கு ஏற்படுத்தும். அத்துடன், இந்தச் செயல் உங்கள் காதலருக்குக் கோபத்தையும் பொறாமையும் ஏற்படுத்தலாம்.
சமூக ஊடகங்களில் நீங்கள் தவறவிடும் இதுபோன்ற சிறிய விஷயங்கள்கூட உங்கள் காதல் உறவில் பெரிய சிக்கலை ஏற்படுத்தலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT