Published : 02 Jan 2019 03:08 PM
Last Updated : 02 Jan 2019 03:08 PM
நிஜத்தை விட பல மடங்கு வலிமையான ஆட்களாக ஹீரோக்கள் மாறுவதை திரையில் பார்த்திருக்கிறோம். அதே ஹீரோக்கள் 3.0 குட்டி ரஜினி அளவுக்கு குட்டி பொம்மைகளாக மாறுவதைப் பார்த்திருக்கிறீர்களா?
ஐகிக்ஸ் மை 3டி என்ற நிறுவனம் இப்படி யோசித்ததன் விளைவுதான், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் சேதுபதி, அனிருத், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என எண்ணற்ற பிரபலங்களின் மினியேச்சர் பொம்மைகள் உருவாகக் காரணம்.
ஐகிக்ஸ் இந்தியா நிறுவனம் 3டி கட்டிடக்கலை மாதிரிகளை வடிவமைக்கும் வியாபரத்தில் பத்து வருடங்களுக்கும் மேலாக இயங்கி வருகிறது. இதன் துணை நிறுவனமான ஐகிக்ஸ் மை 3டி கடந்த ஏப்ரல் மாதம் ஆரம்பிக்கப்பட்டது. இதன் நோக்கம், தங்கள் வாடிக்கையாளர்கள் விரும்பும் பிரபல நட்சத்திரங்களின் மினியேச்சர் 3டி பொம்மைகளை உருவாக்குவதுதான்.
ஐகிக்ஸ் மை 3டி நிறுவனத்தின் லொகேஷன் தலைவர் பிரவீன் டேனியல் பேசுகையில், "கட்டிடக்கலை மாதிரிகளை வடிவமைப்பதில் எங்களுக்கு அனுபவம் இருக்கிறது என்பதால் 3டி மனித மினியேச்சர்களை உருவாக்க எண்ணினோம். இது ஏற்கெனவே அமெரிக்காவில் மிகப் பிரபலம். இப்படித்தான் எங்கள் பயணம் தொடங்கியது" என்கிறார்.
மாயா போன்ற 3டி வடிவமைப்பு மென்பொருளில் பயிற்சி பெற்றிருக்கும் டிஜிட்டல் சிற்பிகளை இந்த நிறுவனம் வேலைக்கு எடுத்துள்ளது. தமிழகத்தில் திரை நட்சத்திரங்களைப் போற்றும் கலாச்சாரம் இருப்பதால், அப்படிப்பட்ட நட்சத்திரங்களின் மினியேச்சர்கள் பெரும் வரவேற்பைப் பெற்றிருப்பதில் ஆச்சரியமில்லை. ஐகிக்ஸ் நிறுவனத்தின் தனித்துவமே, வாடிக்கையாளர் விரும்பும் விதத்தில், அளவில், மினியேச்சர்களை உருவாக்குவதுதான்.
வாடிக்கையாளர்கள் தங்கள் புகைப்படத்தை அனுப்பி, தங்களையே கூட 3டி மினியேச்சர் பொம்மைகளாக வடிவமைக்கச் சொல்லி வாங்கிக் கொள்ளலாம். ஒரு 3டி மினியேச்சர் பொம்மையை உருவாக்க கிட்டத்தட்ட ஒரு வாரம் வரை ஆகும். டிசம்பர் மாதம் சாண்டா கிளாஸ் உருவத்தை உருவாக்கச் சொல்லி இவர்களுக்கு எக்கச்சக்கமான ஆர்டர்கள் வந்துள்ளன. இதில் சில சாண்டா கிளாஸ் பொம்மைகளில் வாடிக்கையாளரின் முகமும் பொறிக்கப்பட்டுள்ளது.
பார்க்க அழகாக இருக்கும் இந்த பொம்மைகளை உருவாக்க ரூ. 2000 முதல் ரூ.9000 வரை ஆகிறது. இது பொம்மையின் அளவு, அதற்கு தேவைப்படும் வடிவமைப்பு ஆகியவற்றைப் பொறுத்து மாறும். மலிவான விலையில் பிளாஸ்டிக்கில் பொம்மைகளை உருவாக்க முடியுமென்றாலும் இயற்கையான, துல்லியமான வடிவமைப்புக்கு செராமிக்கையே இவர்கள் பயன்படுத்துகின்றனர்.
2010-ஆம் ஆண்டு எந்திரன் வெளியான போதே, அதில் இருக்கும் சிட்டி கேரக்டரை 3டி குட்டி பொம்மையாக உருவாக்கலாமா என பிரவீன் யோசித்திருக்கிறார். தற்போது, '2.0' வெளியீட்டுக்குப் பிறகு, படத்தில் வரும் குட்டி ரஜினியைப் போன்ற 3.0 குட்டி மினியேச்சர் பொம்மைகளை இந்நிறுவனம் உருவாக்கியுள்ளது. இவை ரூ. 2000 முதல் ரூ.3000 வரை விற்கப்படுகிறது.
படத்தின் 100-வது நாள் கொண்டாட்டத்தின் போது, '2.0' குழுவுக்கு இந்த 3டி மாடல்களைப் பரிசளிக்கத் திட்டமிட்டுள்ளார் பிரவீன். ஏற்கெனவே மலேசியாவிலிருந்து, ரஜினி சிலையை செய்ய பெரிய ஆர்டர் ஒன்று இவர்களுக்கு வந்திருக்கிறது.
மேலும் தகவல்களுக்கு - https://www.my3d.in
- ஸ்ரீவட்சன் (தி இந்து ஆங்கிலம்), தமிழில் கார்த்திக் கிருஷ்ணா
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT