Last Updated : 20 Nov, 2018 10:17 AM

 

Published : 20 Nov 2018 10:17 AM
Last Updated : 20 Nov 2018 10:17 AM

சின்ன மாற்றம் பெரிய தீர்வு 08: கேள்வியில் உள்ளது விடை

‘‘கல்யாணம் போன்ற பொது நிகழ்ச்சிகளுக்குப் போனால் உறவினர்கள் என்னிடம் கொஞ்சம்தான் பேசுறாங்க.  ஆனா, என் தங்கையிடம் மிக அதிகமாகப் பேசுறாங்க.  அது ஏன்னு எனக்குத் தெரியலே” என்று ஆதங்கப்பட்டாள் எனக்குத் தெரிந்த பெண் ஒருவர்.  அவளது குடும்பம் எனக்கு அறிமுகமானதுதான் என்பதால், உறவினர்களின் ‘பாரபட்ச’ நடவடிக்கைக்கான காரணத்தை என்னால் ஊகிக்க முடிந்தது. அதை அவளிடம் பகிர்ந்துகொண்டேன்.

அதை உங்களிடமும் பகிர்ந்துகொள்வ​தற்கு வசதியாக,  இதேபோன்ற நிகழ்வு ஏற்பட்ட வேறொரு பெண்ணை​ உதாரணமாகச் சொல்கிறேன். 

பத்திரிகையாளராக   வேண்டும்   என்ற   தீராத கனவு அந்த இளம் பெ​ண்ணுக்கு இருந்தது. ஒரு வார இதழில் அவளிடம் ஒரு பொறுப்பை ஒப்படைத்தார்கள். ஒரு குறிப்பிட்ட கேள்வியை முன்வைத்துப் பொதுமக்களில் சிலரது கருத்தைக் கேட்டுவரச் சொன்னார்கள்.

ஆனால், சில நாட்களுக்குப் பிறகு சந்தித்தபோது அந்தப் பெண்ணின் முகம் வாட்டத்துடன் இருந்தது. “யாருமே விளக்கமா, சுவாரசியமா கருத்து சொல்ல மாட்டேங்கிறாங்க” என்றாள்.

அவள் கேட்ட கேள்விகளையும் கிடைத்த பதில்களையும் அப்படியே கூறச் சொன்னேன். அவள் கூறியது இதுதான். “டாக்டர்கள் கிராமத்துக்குப் போய் சேவை செய்யணுமா?”. “ஆமாம் நிச்சயம் சேவை செய்யணும்”.

“கிராம சேவையைக் கட்டாயமாக்கணுமா?”. “ஆமாம். அப்படிச் செய்தால்தான் போவாங்க”.

இந்த வகையில் அந்த உரையாடல் அமைந்திருந்ததாம். இவற்றையெல்லாம் ஆங்கிலத்தில் ‘Closed ended questions’ என்பார்கள்.  அதாவது, ஆமாம் அல்லது இல்லை என்று பதில் சொன்னால் போதுமானது எனும்படியான கேள்விகள்.

“டாக்டர்கள் கிராமங்களிலே போய் சேவை செய்யணும்னு எதனாலே சொல்றீங்க?”, “உங்க​ நெருங்கிய உறவினர் டாக்டரா இருந்தா, அவரை எப்படி ‘கன்வின்ஸ்’ செய்வீங்க?”, “டாக்டர்களுக்கு என்னவிதமான வசதிகள் கிராமங்களிலே செய்து தரணும்னு எதிர்பார்ப்பீங்க?”.

இதுபோன்ற ‘Open ended questions’-க்கு விளக்கமான பதிலை எதிர்பார்க்கலாம். அவற்றில் சுவையான கோணங்கள் பிடிபடும்.

வாழ்வில் பிறரை நம்முடன் பேச வைக்கவும் நெருங்கிய  தொடர்பை உருவாக்கிக் கொள்ளவும்கூட இந்த வகைக் கேள்விகளை (Open ended questions) அதிகமாகப் பயன்படுத்த வேண்டும்.  உள்ளங்கள் வெளிப்படும், உறவுகள் வலுப்படும்.

-அருண் .சரண்யா
(மாற்றம் வரும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x