Published : 11 Nov 2025 10:18 AM
Last Updated : 11 Nov 2025 10:18 AM
திருவனந்தபுரம்: கேரளாவின் கண்ணூர் மாவட்டம், மாதமங்கலத்தை சேர்ந்தவர் சரோஜினி (72). அதே பகுதியைச் சேர்ந்தவர் பத்மாவதி (72). இருவரும் சிறுவயது முதலே நெருங்கிய தோழிகள் ஆவர். திருமணத்துக்கு பிறகு பத்மாவதி அதே ஊரில் இருந்தார். சரோஜினி வெளியூர் சென்றார்.
கந்த 1987-ம் ஆண்டில் சரோஜினியின் கணவர் உயிரிழந்தார். இதன் பிறகு சொந்த ஊரில் அவர் குடியேறினார். மிக நீண்ட காலத்துக்கு பிறகு தோழிகள் ஒன்றிணைந்தனர்.
கடைசி காலத்தில் வீட்டில் முடங்கியிருக்காமல் உலகை சுற்றிப் பார்க்க சரோஜினியும் பத்மாவதியும் முடிவு செய்தனர். முதல்கட்டமாக சபரிமலை, குருவாயூர், பழனி, மதுரை, ராமேசுவரம், தனுஷ்கோடி உள்ளிட்ட புனித தலங்களுக்கு சென்றனர். இந்த இடங்களில் சுவாமியை வழிபட்டதோடு சில நாட்கள் தங்கியிருந்து சுற்றுவட்டார பகுதிகளையும் பார்வையிட்டனர்.
இதைத் தொடர்ந்து குஜராத், ராஜஸ்தான், காசி, பத்ரிநாத், கேதர்நாத் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள், புனிதத் தலங்களுக்கு சரோஜினியும் பத்மாவதியும் சென்றனர்.
இதுதொடர்பாக பத்மாவதி கூறும்போது, ‘‘எங்கள் காலத்தில் மொபைல்போன் கிடையாது. இதனால் அடிக்கடி பேசிக் கொள்ள முடியாது. சொந்த ஊரில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளின்போது மட்டும் சந்தித்துப் பேசுவோம்.
எனது கணவர் கருணாகரன் நம்பியார் 9 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். சரோஜினியின் கணவர் நாராயணனும் உயிரிழந்துவிட்டார். தற்போது நாங்கள் இருவரும் மாதமங்கலத்தில் வசிக்கிறோம். இருவருக்கும் பிள்ளைகள் உள்ளனர். அவர்கள் பணி நிமித்தமாக பல்வேறு ஊர்களில் வசிக்கின்றனர்.
கடைசி காலத்தில் ஒன்றாக சேர்ந்து உலகை சுற்றிப் பார்க்க முடிவு செய்தோம். இந்தியாவின் பல்வேறு பகுதிகளை சுற்றிப் பார்த்தோம். முதல் வெளிநாட்டு பயணமாக அண்மையில் மலேசியாவுக்கு சென்றோம். எங்களுக்கு ஓய்வூதியத் தொகை கிடைக்கிறது. அந்த தொகையில் சுற்றுலா செல்கிறோம்’’ என்றார்.
சரோஜினி கூறும்போது, ‘‘அடுத்தகட்டமாக இந்தோனேசியாவின் பாலிக்கு செல்ல திட்டமிட்டு இருந்தோம். ஆனால் பத்மாவதி ஏற்கெனவே பாலிக்கு சுற்றுலா சென்றிருக்கிறார். எனவே பாலி பயண திட்டத்தை ரத்து செய்துவிட்டோம். விரைவில் கொல்கத்தாவுக்கு செல்ல திட்டமிட்டு இருக்கிறோம்.
ஒவ்வொரு பயணத்தையும் டிஜிட்டலில் பதிவு செய்து பிள்ளைகளுக்கும் உறவினர்களுக்கும் அனுப்பி வருகிறோம். வயதான காலத்தில் வீட்டில் முடங்கி கிடக்காமல் சுற்றுலா செல்வது புதுவித அனுபவமாக இருக்கிறது. இதன்மூலம் மனதுக்கும் உடலுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கிறது’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT