Published : 02 Nov 2025 11:57 AM
Last Updated : 02 Nov 2025 11:57 AM

நாள்பட்ட சிறுநீரக நோயாளிகளுக்கு ஒருங்கிணைந்த யோகா, இயற்கை மருத்துவத்தால் 28 நாளில் தீர்வு: ஆய்வுத் தகவல்

நாள்பட்ட சிறுநீரக செயலிழப்புக்கு உள்ளான நோயாளிகளுக்கு ஒருங்கிணைந்த யோகா, இயற்கை மருத்துவ சிகிச்சையால் 28 நாட்களில் தீர்வு கிடைத்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

நாள்பட்ட சிறுநீரக செயலிழப்புக்கு உள்ளான நோயாளிகளுக்கு ஒருங்கிணைந்த யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சையால் தீர்வு கிடைக்கிறதா என்பது குறித்து சென்னை அரும்பாக்கம் அரசு யோகா, இயற்கை மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் ஒய்.தீபா, ஏ.விஜய், ஏ.பிரசாந்த், பிரகாஷ் ராஜ், என்.மணவாளன், எட்மின் கிறிஸ்டா, ஏ.மூவேந்தன் ஆகியோர் ஆராய்ச்சி மேற்கொண்டனர். ‘பப் மெட்’ என்ற ஆய்விதழில் இந்த ஆராய்ச்சிக் கட்டுரை வெளியாகியுள்ளது.

அதில் கூறியிருப்பதாவது: மனித உடலில் ரத்தத்தில் உள்ள நச்சுகள், உப்புகளை சுத்திகரித்து, அந்த கழிவுகளை சிறுநீர் வழியே சிறுநீரகங்கள் தான் வெளியேற்றுகின்றன. சிறுநீரகத்தில் உள்ள நெப்ரான் எனப்படும் ரத்த நுண் சுத்திகரிப்பான்கள் பாதிக்கப்படும்போது, ரத்தத்திலேயே அந்த கழிவுகள் கலந்து விடுகின்றன. இந்த பாதிப்பு தொடர்ந்து இருப்பதே நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு ஆகும்.

ஆரோக்கியமான நபர்களின் ரத்தத்தில் 35-40 மி.கி/டி.எல். என்ற அளவுக்குள்தான் யூரியா கழிவு இருக்க வேண்டும். கிரியாட்டினின் கழிவின் அளவு 0.6- 1.2 மி.கி/டி.எல். இருக்கும். ஒருவேளை அது 6 மி.கி/டி.எல். என்ற நிலைக்கு போகும்போது சிறுநீரகம் செயலிழந்து விட்டதாக கருதப்பட்டு, டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்படும். இல்லாவிட்டால், சிறுநீரக மாற்று சிகிச்சை பெற வேண்டும்.

ஆய்வுக்கு உட்படுத்துதல்: யோகா, இயற்கை மருத்துவ முறையில் இதற்கான சிகிச்சையை உறுதி செய்வதற்கான ஆராய்ச்சி மேற்கொள்ளப் பட்டது. நாள்பட்ட சிறுநீரக செயலிழப்புக்கு உள்ளான 39 ஆண்கள், 11 பெண்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இதுகுறித்த அனைத்து விவரங்களும் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. இந்த ஆய்வுக்கு மருத்துவ நெறிசார் குழுவின் அனுமதியும் முன்கூட்டியே பெறப்பட்டது.

50 நோயாளிகளுக்கும் தினமும் 2 முறை தலா 1 மணி நேரம் யோகா சிகிச்சை வழங்கப்பட்டது. அதில், பவனமுக்தாசனம், வஜ்ராசனம் உள்ளிட்ட ஆசனங்களும், பிராணாயாம சிகிச்சைகளும் 28 நாட்களுக்கு வழங்கப்பட்டன. காய்கறிச் சாறு, பழங்கள், வேகவைக்கப்பட்ட உணவுகளும் வழங்கப்பட்டன. இதுதவிர நீர் சிகிச்சை, அக்குபிரஷர், மண் குளியல், மசாஜ் சிகிச்சை, சூரிய ஒளி சிகிச்சை, காந்த சிகிச்சை உட்பட பல்வேறு வகையான இயற்கை மருத்துவ சிகிச்சைகளும் அளிக்கப்பட்டன.

இதன் பயனாக அவர்களுக்கு யூரியா, கிரியாட்டினின் அளவு குறைந்தது. அதேபோல, சோடியம், பொட்டாசியம், கால்சியம் உள்ளிட்ட நுண்ணூட்டங்களின் விகிதம் அதிகரித்தது. இன்னும் அதிகமானவர்களுக்கு இந்த முறையில் சிகிச்சை அளித்து ஆய்வு செய்தால் மேலும் துல்லியமான முடிவுகளை அறிய முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x