Published : 24 Oct 2025 10:38 PM
Last Updated : 24 Oct 2025 10:38 PM
ராய்பூர்: ‘சின்னச் சின்ன அன்பில் தானே ஜீவன் இருக்கு’ என பாடலாசிரியர் வாலி தனது திரை பாடல் ஒன்றில் சொல்லி இருப்பார். அவர் சொன்னது போல அந்த அன்பில் தான் வாழ்க்கை எனும் ஜீவன் உள்ளது.
அன்பானவர்களுக்கு பரிசு அளித்து மகிழ்தல் என்பது மகிழ்ச்சி தரும் செயல். உலக அளவில் தங்களது உறவுகள், நட்புகள் என எல்லோரும் பரிசு அளிப்பது உண்டு. அது அன்பின் வெளிப்பாடு என்றும் சொல்லலாம். அந்த வகையில் தனது மகளுக்கு அன்பு பரிசு ஒன்றை வழங்கிய சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த தந்தையின் செயல் பேசு பொருளாகி உள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் ஜஸ்பூரை சேர்ந்தவர் பஜ்ரங் ராம் பகத். இவர் அங்குள்ள கேசராபாத் கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் தனது மகள் சம்பாவுக்கு ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரை அண்மையில் வாங்கிக் கொடுத்துள்ளார். அதற்காக தான் சிறுக சிறுக சேமித்த பணத்தை அவர் பயன்படுத்தி உள்ளார். அந்த ஸ்கூட்டரின் விலை ரூ.98,700. அதில் ரூ.40,000 ஆயிரம் பணத்தை 10 ரூபாய் சில்லறை நாணயங்களாக வாகனத்தை விற்பனை செய்த விற்பனையாளரிடம் செலுத்தி உள்ளார்.
ஸ்கூட்டர் கடன் பெறாமல் சேமிப்பு மூலம் மகள் விரும்பிய ஸ்கூட்டரை வாங்கி தர விரும்பியதால் இப்படி செய்ததாக பஜ்ரங் ராம் பகத் தெரிவித்துள்ளார். இதற்காக சுமார் 7 மாத காலம் அவர் பணம் சேமித்து வந்துள்ளார். தற்போது அவர் வாங்கி கொடுத்த ஸ்கூட்டரை தங்களது குடும்பத்தின் அன்றாட தேவைக்கு அவரது மகள் பயன்படுத்துகிறார்.
பஜ்ரங் ராம் பகத் வழங்கிய சில்லறை நாணயங்களை கணக்கிட்டு எண்ணி முடிக்க சுமார் மூன்று மணி நேரமானதாக வாகனத்தை விற்பனை செய்த ஆனந்த் குப்தா தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT