Published : 19 Oct 2025 01:06 PM
Last Updated : 19 Oct 2025 01:06 PM

3 மாதங்களில் 10,000 கி.மீ. பயணம் - சைக்கிளில் உலகம் சுற்றும் பிரான்ஸ் இளைஞர் புதுச்சேரி வருகை

சைக்கிளில் உலகம் சுற்றும் பிரான்ஸ் இளைஞர் புதுச்சேரி வந்துள்ளார். அவர் 3 மாதங்களில் 10 ஆயிரம் கி.மீ தொலைவு பயணிக்கிறார்.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் இனோ சூரன். இவர், பாரிஸ் நகரில் இருந்து சைக்கிளில் புதுவைக்கு வந்துள்ளார். தனது பெற்றோரின் ஊரான இலங்கையின் யாழ்ப்பாணத்துக்கு இவர் சைக்கிளில் செல்லும் பயணத்தை தொடங்கினார். 3 மாதங்களாக 10 ஆயிரம் கி.மீ தொலைவு கடந்து வந்துள்ளார்.

அவர் தனது பயணம் குறித்து விவரித்ததாவது: ஒவ்வொரு நாட்டிலும் மக்களைப் பார்க்க வேண்டும். அங்கு பின்பற்றும் கலாச்சாரத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்பது எனது ஆசை. அதற்கு வேகம் ஒத்து வராது. மெதுவாக சைக்கிளில் சென்றால்தான் முடியும். இதற்காக சைக்கிள் பயணத்தை தேர்ந்தெடுத்தேன். நாள் ஒன்றுக்கு 50 முதல் 100 கி.மீ. தொலைவு வரை பயணம் செய்தேன். ஆங்காங்கே மக்கள் அன்புடன் பேசினர். தங்கள் வீடுகளில் தங்க வைத்து உபசரித்து அனுப்பினர். தனி ஆளாக செல்வது ஆபத்து என பலர் கூறினாலும் மக்களோடு மக்களாய் பழகி பயணம் செய்கிறேன்.

இந்தியாவுடன் சேர்த்து இதுவரையில் 13 நாடுகளை கடந்து வந்துள்ளேன். இலங்கையில் மக்கள் நல்ல நிலைக்கு வரத் தொடங்கி விட்டனர். இதனால் என் தாய் நாட்டையும் பெற்றோரையும் பார்க்கும் ஆர்வத்தில் இலங்கைக்கு செல்ல உள்ளேன். இளைஞர்கள் பலரும் சைக்கிளில் பயணத்தை மேற்கொண்டு, மக்களோடு பழகி உலக கலாச்சாரத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே எனது விருப்பம் என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x