Published : 09 Oct 2025 01:59 PM
Last Updated : 09 Oct 2025 01:59 PM

திருவாடானை: 17-ம் நூற்றாண்டை சேர்ந்த திருமலை சேதுபதி கால கல்வெட்டு கண்டெடுப்பு

ராமேசுவரம்: ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே கட்டுகுடியில் 368 ஆண்டுகள் பழமையான 17-ம் நூற்றாண்டை சேர்ந்த திருமலை சேதுபதி கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கட்டுகுடியில் ஒரு கல்வெட்டு இருப்பதாக திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, முதல்வர், பழனியப்பன் கொடுத்த தகவலின் பேரில், அவ்வூர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சசிக்குமார் உதவியுடன், கைக்கோளர் ஊரணியின் வடமேற்கில் இரண்டாக உடைந்த ஒரு கல் தூணில் இருந்த கல்வெட்டை ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ராஜகுரு, படியெடுத்துப் படித்து ஆய்வு செய்தார்.

இதுகுறித்து பேசிய ராஜகுரு விளக்கி கூறியதாவது, "66 இஞ்ச் நீளமும், 14 இஞ்ச் அகலமும் கொண்ட கல் தூணின் மேற்பகுதியில் திரிசூலமும், அதன் கீழே 24 வரிகள் கொண்ட கல்வெட்டதாக உள்ளன.

இதில், சக ஆண்டு 1579, தமிழ் ஆண்டு யேவிளம்பி, சித்திரை மாதத்தில் சுக்கிரவாரமும், புணர்பூசமும், சுக்லபட்சத்து சத்தமியும் பெற்ற புண்ணிய காலத்தில், ரெகுநாதத் திருமலைச் சேதுபதி காத்த தேவருக்குப் புண்ணியமாக, திருவாடானை, ஆடானை நாயகர் கோயில் திருநந்தவனத்துக் காக, கட்டுகுடியில் விரைப்பாடாக 50 கலம் மன்னரால் கொடுக்கப்பட்டுள்ளது.

திருமலை சேதுபதி கல்வெட்டு

குறிப்பிட்ட அளவு தானியங்களை விதைப்பதற்குத் தேவைப்படும் நில அளவை விரைப்பாடு என்பர். இதில் 50 கலம் தானியங்களை விதைப் பதற்குத் தேவைப்படும் நில அளவு நந்தவனத்துக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது.

தானத்தை சந்திர சூரியன் இருக்கும் வரைக்கும் அனுபவித்துக் கொள்ள மன்னர் கட்டளையிட்டுள்ளார். இந்தப் புண்ணியத்துக்கு அழிவு பண்ணியவன் கெங்கைக் கரையிலே, காராம் பசுவைக் கொன்ன பாவத்திலே போவானாகவும் என கல்வெட்டு எச்சரிக்கிறது.

திருமலை சேதுபதி கல்வெட்டை படியெடுக்கும் வே.ராஜகுரு

இதில் கலம் என்பது ‘ள’ என்ற குறியீடாக உள்ளது. 50 கலம் முதலில் தமிழ் எண் மற்றும் குறியீடாகவும், பின்னர் எழுத்தாலும் எழுதப்பட்டுள்ளது. இதன் தற்போதைய ஆங்கில ஆண்டு கி.பி.1657 ஆகும். கல்லில் சில இடங்களில் எழுத்துகள் தேய்ந்து அழிந்துள்ளன” என்று தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ராஜ குரு கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x