Published : 07 Oct 2025 05:19 PM
Last Updated : 07 Oct 2025 05:19 PM
கோவை: இருமல் சிரப் உட்கொண்ட குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில், குழந்தைகள் இருமல் தொந்தரவுக்கு பாதுகாப்பான சிகிச்சை வழிமுறைகள் குறித்து இந்திய குழந்தைகள் மருத்துவ அகாடமி மாநிலக் குழு தலைவர் டாக்டர் ராஜேந்திரன் ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: ”இருமல் என்பது குழந்தைகளில் அடிக்கடி காணப்படும் ஒரு அறிகுறியாகும். குறிப்பாக குளிர் காலங்களில் அதிகம் தோன்றும். பெரும்பாலான இருமல்கள் சுயமாக குணமடையும். சில இருமல், வைரஸ் காய்ச்சல்கள், அலர்ஜி, ஆஸ்துமா காரணங்களால் ஏற்படுகின்றன. அவ்வாறாக அலர்ஜி அல்லது ஆஸ்துமா காரணமாக இருமல் இருந்தால், ‘ஆன்டிஹிஸ்டமின்’ மருந்துகள் அல்லது சுவாசக் கருவி மூலம் சிகிச்சை வழங்கலாம்.
‘லெவோசெட்ரிசின்’ மற்றும் செட்ரிசின் போன்ற ஆன்டிஹிஸ்டமின்கள், 6 மாதங்கள் கடந்த குழந்தைகளில் அலர்ஜி இருமலுக்கு பாதுகாப்பானதாக கருதப்படுகின்றன. ஆனால், 2 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு, குறிப்பாக ஆன்டிஹிஸ்டமின் மற்றும் டிகன்ஜெஸ்டன்ட் உதாரணமாக ஃபெனிலெஃப்ரின் ஆகியவற்றின் சேர்க்கை கொண்ட இருமல் மருந்துகளை வழங்குவது பரிந்துரைக்கப்படவில்லை.
இந்த சேர்க்கைகள் இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டாளர் (டிசிஜிஐ) மூலம் அனுமதி பெற்றவையாக இருந்தாலும், தற்போது ஏற்பட்ட சம்பவம் மருந்தின் மூலக்கூறுகளால் ஏற்பட்டது அல்ல. மாறாக மாசுபட்ட தயாரிப்புகளால் ஏற்பட்டவையாகும். இந்திய குழந்தைகள் மருத்துவ அகாடமி தமிழ்நாடு மாநிலக் குழு பாதுகாப்பான சிகிச்சை வழிமுறைகளுக்கு பின்வரும் பரிந்துரைகளை வெளியிடுகிறது.
> இரண்டு வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு, குறிப்பாக ஆன்டிஹிஸ்டமின் மற்றும் டிகன்ஜெஸ்ஸ்டன்ட் சேர்க்கைகள் கொண்ட இருமல் சிரப்புகளை தவிர்க்க வேண்டும்.
> ஆன்டிஹிஸ்டமின்கள் மற்றும் ப்ரொன்கோ டைலேட்டர்கள் போன்ற மருந்துகள், மிகவும் அவசியமான சூழ்நிலைகளில் மட்டுமே கவனத்துடன் பயன்படுத்தப்பட வேண்டும்.
> ஒரு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு, தேன் ஒரு பாதுகாப்பான மற்றும் பயனுள்ள இயற்கை மருந்தாக பரிந்துரைக்கப்படுகிறது. இதற்கான அறிவியல் ஆதாரங்கள் உள்ளன.
> குழந்தைகளின் இருமல் அடிப்படை காரணத்தை கண்டறிந்து, அதற்கேற்ப சிகிச்சை அளிக்க வேண்டும். அதிகப்படியான மருந்து பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும். பெற்றோர்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.
முக்கியமாக குழந்தைகளுக்கு உடல் நலன் பாதிப்பு ஏற்பட்டால் பெற்றோர்கள் சுயமாக மருந்துக் கடைகளில் சென்று மருந்துகளை வாங்குவதை தவிர்த்து மருத்துவரிடம் சென்று பரிசோதித்து உரிய சிகிச்சை பெற வேண்டும்” என்று டாக்டர்.ராஜேந்திரன் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT