Published : 06 Oct 2025 12:08 AM
Last Updated : 06 Oct 2025 12:08 AM
அபுதாபி: ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த பெண் மருத்துவர் மரியம் மதார், 50 வயதிலும் 28 வயது பெண்ணைப் போன்ற வசீகரத்தோற்றத்துடன் காணப்படுகிறார். நீண்ட ஆயுள், சிறந்த ஆரோக்கியம், உணவு கட்டுப்பாடு ஆகியவற்றில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
துபாய் நகரில் கடந்த 1975-ல் பிறந்தார் மரியம் மதார். அவரது பாட்டி இயற்கை வைத்தியத்தில் கைதேர்ந்தவர். இதனால், சிறு வயது முதலே மரியத்துக்கு மருத்துவத் துறை மீது அதிக ஆர்வம் ஏற்பட்டது. அமீரகத்தில் மருத்துவம் படித்த அவர், ஐப்பானில் மரபணுவியல் துறையில் பிஎச்டி பட்டம் பெற்றார். அமீரகத்தில் மரபணு ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். தற்போது அவருக்கு 50 வயது. ஆனால், மிகவும் இளமையுடன் காட்சியளிக்கிறார்.
ஷார்ஜாவில் சமீபத்தில் நடைபெற்ற மாநாட்டில் டாக்டர் மரியம் மதார் பேசியதாவது: ஜப்பானில் பிஎச்டி படிக்கும்போது, எனது ஆசிரியையின் இளமை, உடல் வலிமையை பார்த்து வியந்தேன். வயதான காலத்திலும் அதிகாலையிலேயே எழுந்து இளம்பெண்போல மலையேற்றம் மேற்கொள்வார். 85 வயதில் காலமானார். அப்போதுகூட 50, 60 வயது பெண்போல இருந்தார். அவரை பின்பற்றி எனது வாழ்க்கை நடைமுறைகளை மாற்றினேன்.
மரபணு ஆராய்ச்சிகளில் அதிக ஆர்வம் காட்டினேன். குறிப்பாக ஸ்டெம் செல் சிகிச்சை, சேதமடையும் திசுக்கள், புதிய திசுக்களின் வளர்ச்சி குறித்து ஆராய்ச்சி செய்தேன். எனது ஆராய்ச்சி முடிவுகளை எனது தனிப்பட்ட வாழ்விலும் சோதனை செய்து பார்த்தேன். தற்போது எனக்கு 50 வயது. ஆனால் 28 வயது பெண்ணுக்கான இளமையுடன் இருக்கிறேன். எனது சிறுநீரகம், கல்லீரல், இதயம் ஆகிய உள்உறுப்புகள் 16 வயது பெண்ணுக்கு இணையாக சீராக இயங்குகின்றன.
பெண்களுக்கு இயற்கையாகவே 2 எக்ஸ் குரோமோசோம்கள் உள்ளன. இதனால், ஆண்களைவிட பெண்களுக்கு ஆயுள், புத்திசாலித்தனம் அதிகம். 90 வயதிலும் ஒருவர் தனது தேவைகளை தானே பூர்த்திசெய்துகொள்ளும் உடல் வலிமையுடன் இருக்க வேண்டும் என்பதே எனது லட்சியம். நீண்ட ஆயுள், சிறந்த ஆரோக்கியம், உணவுகட்டுப்பாடு, அவரவர் குடும்ப மரபணு சார்ந்த விவகாரங்களில் கவனம் செலுத்த மக்களிடம் அறிவுரைகளை கூறி வருகிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT