Published : 30 Sep 2025 06:21 PM
Last Updated : 30 Sep 2025 06:21 PM

உணவு சுற்றுலா: திருவையாறு அசோகா

சரித்திரப் புகழ்பெற்ற தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவையாறுதான் அசோகாவின் புகலிடம். ராம ஐயர் என்பவர்தான் அசோகாவுக்குக் காரணகர்த்தா! திருமணப் பந்தியில் அசோகா இல்லை என்பதால், களேபரம் ஆன திருமணக் கதைகள் இருக்கின்றன. திருமண நிகழ்வுகள், பண்டிகைக் காலங்களில் அனைவரின் இல்லங்களிலும் தவறாமல் இடம்பெறும் முக்கிய இன்பண்டம் அசோகா.

எப்படித் தயாரிக்கிறார்கள்? பாசிப்பருப்பு, நெய், கோதுமை ஆகியவை அசோகா அல்வா தயாரிப்பதற்கான மூலப் பொருள்கள். பாசிப்பருப்பை லேசாக வறுத்து வேக வைத்து, உருவம் தெரியாமல் கடைந்துகொள்கிறார்கள். வாணலியில் நெய் ஊற்றி, கோதுமை மாவு சேர்த்து நன்றாகக் கிளறிக்கொண்டே இருக்கிறார்கள். மாவு வறுபட்டவுடன் பாசிப்பருப்பையும் சேர்த்துக் கிளறுகிறார்கள். குறிப்பிட்ட பதத்துக்கு வந்ததும் சர்க்கரை சேர்த்து, தொடர்ந்து கிளற அல்வா பதத்துக்கு வந்து நிற்கிறது. நெய்யில் வறுத்த முந்திரி சேர்க்கிறார்கள். வாசனைக்கு கிராம்பு சேர்க்கப்படுகிறது. குங்குமப் பூ சேர்க்க அல்வாவுக்கு கூடுதல் நிறம் கிடைக்கிறது.

திருவையாறு பேருந்து நிலையத்துக்கு அருகில் இருக்கும் கடையில் அசோகாவை வாங்கிச் சாப்பிட சுவையின்பத்தை அளிக்கிறது. நாவில் வைத்ததும் வழுக்கிச் செல்லும் தின்பண்டத்தின் நளினம்தான் அசோகாவைத் தனித்துவமாக்குகிறது.
பாசிப்பருப்பின் இருப்பும், கோதுமை மாவின் சேர்மானமும், நெய்யின் வாசனையும் அல்வாவைத் தூக்கி நிறுத்துகின்றன. இடையிடையே கடிபடும் முந்திரி கூடுதல் சுவையைக் கொடுக்கிறது. பாசிப்பருப்பும் கோதுமையும் இணைந்து புதுமையான சுவைப் பரிமாணத்தைப் புகுத்துகின்றன.

பாசிப்பருப்பில் உள்ள புரதம், அசோகாவுக்கு வலிமை சேர்க்கிறது. இனிப்புச் சுவைக் கொடுக்கும் கபத்தைக் கட்டுப்படுத்த கிராம்பின் சேர்மானம் பயன்படுகிறது.ஆன்மிக நிகழ்வுகளுக்குப் புகழ்பெற்ற மாதங்களில் திருவையாறு அசோகாவின் விற்பனை களைககட்டும். தஞ்சாவூர் மாவட்டம் மட்டுமல்லாமல் அருகில் உள்ள மாவட்ட மக்களுக்கும் அசோகா மீது கூடுதல் பிரியம் இருக்கிறது. பல்வேறு மாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கும் அசோகாவை அனுப்பி வைக்கிறார்கள். அரை கிலோ அசோகா முன்னூறு ரூபாய்க்குக் கிடைக்கிறது.

வீட்டிலேயே தயாரிக்கும் போது, அசோகாவுக்கு நிறம் கொடுக்க வேண்டும் என்பதற்காகச் செயற்கை நிறமூட்டிகளை அளவுக்கு மீறிச் சேர்த்து அசோகாவுக்குக் களங்கம் ஏற்படுத்த வேண்டாம். பாசிப்பருப்பு, கோதுமை, நெய் போன்றவற்றைச் சேர்ப்பதால் கிடைக்கும் நிறமே ஆரோக்கியமான அசோகாவைப் பரிசளிக்கும். கூடுதலாக உடைத்து வைத்த பாதாம், பிஸ்தா ஆகியவற்றைச் சேர்த்து மெருகேற்றலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x