Published : 29 Sep 2025 07:37 PM
Last Updated : 29 Sep 2025 07:37 PM
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் பகுதியில் கடல்நீர் உட்புகும் கால்வாய்களுடன் அமைந்திருந்த ஒழுகற்ற வட்ட வடிவ குளங்களில் செயற்கையாக சீதோஷண நிலைகளை ஏற்படுத்தி முத்துக்களை பாண்டியர்கள் வளர்த்திருக்கலாம் என்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. இது தொடர்பாக மத்திய, மாநில தொல்லியல் துறை விரிவாக ஆய்வு நடத்த வேண்டும் என தொல்லியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து தூத்துக்குடியை சேர்ந்த தொல்லியல் ஆர்வலர் பெ.ராஜேஷ் 'இந்து தமிழ் திசை' நாளிதழிடம் கூறியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தின் பனையூர் அணைக்கட்டு பகுதியில் 10.09.2025 அன்று மேற்கொண்ட கள ஆய்வுகளில் மிக அதிக அளவிலான கடல் சிப்பிகளின் எச்சங்கள் படிமங்களாகவும், மிக மிக பழமையான மணல் கற்களால் கட்டமைக்கப்பட்ட சுவற்றினையும், மதகில் காணப்பட்ட ராமாயண நிகழ்வு குறித்த சிற்பத்தையும், சுவர்களில் காணப்பட்ட மிக மிக தொன்மையான எழுத்து குறியீடுகளையும் கண்டறிந்தோம்.
குறியீடுகளை உற்று நோக்கி ஆய்வு செய்ததன் அடிப்படையில் இவைகள் பெருங்கற்காலம் அல்லது அதற்கு முற்பட்ட மாண்டிங் குறியீடுகளை ஒத்து காணப்படுகின்றன. இவற்றில் பிராமி எழுத்து போன்ற குறியீடுகளும் உள்ளன. அவை நமக்கு இந்த பகுதியின் நீண்ட நெடிய தொடர் வரலாற்று முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.
மேலும், இந்த அணைக்கட்டுக்கு தெற்கே இன்றும் பாயும் காட்டாறு (கல்லாறு) வழித்தடம் குறித்தும், இதற்கு வடக்கே அமைந்திருந்த சுமார் 4 கி.மீ. விட்டம் கொண்ட ஒழுங்கற்ற வட்ட வடிவ குளம் குறித்தும், ஆங்கிலேய வரைபட அறிஞர் ராபர்ட் ஓரம் 1778-ம் ஆண்டு தங்கள் ராணுவத்துக்காக வரைந்த ஆவணத்தில் தெளிவாக குறிப்பட்டுள்ளார்.
மிகுந்த வியப்பளித்தது: இதேபோன்ற குளங்கள் நமது கிழக்கு கடற்கரை பகுதிகளான கீழக்கரை, பட்டினமருதூர் (கீழ்பட்டினம்) மற்றும் காயல்பட்டினம் ஆகிய மூன்று பகுதிகளில் மட்டுமே ராபர்ட் ஓரமின் வரைபடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது நமக்கு வரலாற்றில் ஏதோ ஒரு மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிகொணர சான்றுகளாக அமைகிறது என எண்ணிணோம்.
இதையடுத்து இந்தப் பகுதியில் மீண்டும் புவியியல் மற்றும் கட்டிடவியல் வல்லுநர்கள் துணையோடு 14.09.2025 அன்று நுட்பமான கள ஆய்வுகளை மேற்கோண்டோம். அப்போது, இவை அனைத்தும் கடல்சார் புதைபடிமங்கள் தான் என்பதை நமக்கு உணர்த்தும் வகையில் வித விதமான சிப்பிகளின் எச்ச படிமங்கள் கிடைத்தன.
கடல் நீர் உட்புகு கால்வாயோடு அமைக்கப்பட்ட இந்த குளம் போன்ற பகுதியில் செயற்கையாக சீதோஷண நிலைகளை ஏற்படுத்தி முத்துக்களை விளைவித்திடும் வித்தைகளை நமது முன்னோர்கள் மிக நீண்ட நெடுங்காலமாக கையாண்டு வந்திருக்கலாமோ? என்ற ஐயப்பாட்டினை நமக்கு எழுப்புகிறது.
இந்த பகுதியில் அதிக அளவிலான மண்கல் தொட்டிகள் மற்றும் கட்டிட சிதைவுகள் இன்றும் மக்களின் பயன்பாட்டில் எச்சங்களின் சான்றுகளாக உள்ளன. தொடர்ந்து ராபர்ட் ஓரம் 1778-ம் ஆண்டு வரைந்த வரைபடத்தினை அட்சரேகை மற்றும் தீர்க்கரேகை ஆகியவற்றின் அமைவிட புள்ளிகள் அடிப்படையில், பெரிய வட்ட தூர அளவீடு முறையில் தூரங்களை கணக்கீடு செய்து பார்த்தோம்.
அதில் காயல்பட்டினம் பகுதியின் வடக்கே வரைபடத்தில் காணப்படும் மிகப்பெரிய ஒழுங்கற்ற வட்டவடிவ குளம் மற்றும் கடல்நீர் இணைப்பு கால்வாய் ஆகியவை தற்போதைய காயல்பட்டினத்தின் சிங்கித்துறை பகுதியின் வடக்கே காணப்படும் கால்வாயின் எச்ச அடையாள பகுதியில் இருந்து மேற்கே 12.2 கி.மீ முதல் 6.8 கி.மீ வரை என்ற 5.4 கி.மீ விட்டத்துடன் காணப்பட்டது புலனாகியது.
உலகறிய செய்ய வேண்டும்: இந்த குளத்தின் மையப்புள்ளியானது திருச்செந்தூர் வள்ளி குகை பகுதியில் இருந்து 11.8 கி.மீ தூரத்திலும், மணப்பாடு வடகிழக்கு மூலையில் இருந்து 22.05 கி.மீ தூரத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த துரங்களை பரிதி சந்திப்பு முறையில் செயற்கைக் கோள் வரை படத்தில் குறிப்பிடும் போது, அது தூத்துக்குடி மாவட்டத்தின் புகழ்பெற்ற அருஞ்சுனை காத்த அய்யனார் ஆலய பகுதியின் கீழ் புறமும், புதுக்குடி ஊருக்கு வட புறமும் அமைந்துள்ள குளத்தின் வடகோடி கரையில் குறிப்பாகிறது.
இந்த புள்ளியை ஆதாரமாக வைத்து 5.4 கி.மீ விட்டமுள்ள வட்டம் வரைந்து ஆராயும் போது இந்த வட்டத்தின் தென்கிழக்கு பகுதிகளாக காணம், மூலைப்பொழி, சோனகன்விளை, மூலக்கரை, புதுக்குளம் அகிய பகுதிகள் உள்ளன. வடகிழக்கு பகுதிகளாக வரண்டியவேல், சாகுபுரம், நாககனியாபுரம் ஆகிய பகுதிகள் உள்ளன.
வடமேற்கு பகுதிகளாக குரும்பூர், புரையூர் ஆகிய பகுதிகள் உள்ளன. தென்மேற்கு பகுதிகளாக வரைபடத்தில் மண்ணூர் என குறிப்பிடப்பட்டுள்ள தேரிக்காடு பகுதிகள் தான் உள்ளன. மத்திப் பகுதிகளாக நாலுமாவடி, புதுக்குடி ஆகிய பகுதிகள் உள்ளன.
இந்த குளத்துக்கான கடல் நீர் உட்புகு கால்வாயானது தற்போதுள்ள சாகுபுரம் பகுதிகளாகும். இந்த முக்கிய ஆதாரங்கள், காயல்பட்டினம் துறைமுகப்பகுதி குறித்த ஆய்வுக்கும், கிழக்கரை, பட்டினமருதூர், காயல்பட்டினம் ஆகிய மன்னார் வளைகுடா பகுதி நிலப்பரப்புகளில் கட்டமைக்கப்பட்ட வட்ட வடிவ கடல் நீர் உட்புகும் கால்வாய்களோடு கூடிய பெருங்குளங்களில் பாண்டியர்கள் முத்து வளர்த்தார்களா? என்ற கேள்விகளுக்கு முக்கிய தடையங்கள் மற்றும் சான்றுகளாக அமைகின்றன. இது குறித்து மத்திய, மாநில தொல்லியல் துறை முழுமையாக ஆய்வு செய்து தமிழர்களின் பழம்பெருமையை உலகறிய செய்ய வேண்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT