Published : 25 Sep 2025 03:05 PM
Last Updated : 25 Sep 2025 03:05 PM
தஞ்சாவூரில் பொதுமக்களை கவரும் வகையில் `புட் ஸ்ட்ரீட்' உருவாகி வருகிறது.
தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே சரபோஜி கல்லூரியின் சாலையோரத்தில் இட்லி, பானி பூரி, சுண்டல், சூப், பிரியாணி, சிக்கன், ஐஸ்கிரீம் கடைகள், பாஸ்ட் புட் கடைகள் ஆகியவை செயல்படுகின்றன. இந்த கடைகளில் மாலை தொடங்கி இரவு வரை வியாபாரம் நடைபெறும். இதனால், இந்த பகுதியில் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.
இந்த கூட்டங்களால் அவ்வபோது போக்குவரத்துக்கு இடையூறும் ஏற்பட்டு வந்ததால் பாதிக்கப்பட்ட அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் நீதிமன்றத்தை நாடினர். நீதிமன்றம், பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள சாலையோரை கடைகளை அகற்ற நெடுஞ்சாலைத் துறையினருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் உத்தரவிட்டது.
இதையடுத்து, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் சரபோஜி கல்லூரி சாலையில் இருந்த தற்காலிக கடைகளை அப்புறப்படுத்தினர். இதன் காரணமாக வாழ்வாதாரம் இழந்த ஏராளமான வியாபாரிகள், தங்களுக்கு மாற்று இடம் வேண்டும் எனக் கேட்டு மாநகராட்சி மேயரிடம் முறையிட்டனர்.
இதைத்தொடர்ந்து, தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரிக்கும் அரசு ஐடிஐக்கும் இடையில் உள்ள புல்புதர்கள் மண்டி காணப்பட்ட சாலையில் வியாபாரிகள் கடைகளை வைத்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டு, கடந்த ஒரிரு மாதங்களாக அந்த பகுதியில் கடைகள் மாலை நேரங்களில் தொடங்கப்பட்டு இரவு வரை செயல்பட்டன. இந்த கடைகளுக்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதன் தொடர்ச்சியாக, மாநகராட்சி நிர்வாகம் `தஞ்சாவூர் புட் ஸ்ட்ரீட்' என்ற பெயரில் தெருவோர கடைகளை அமைக்கவும், அங்கு பொது மக்களுக்கு தேவையான சாலை வசதி, குடிநீர், மின்விளக்கு, கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தி வருகிறது. இங்கு அமைக்கப்படும் கடைகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் உரிய வாடகையை வசூலிக்கவும் முடிவு செய்துள்ளது. தற்போது 40 அடி அகலத்தில் தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த `புட் ஸ்ட்ரீட்' முறையாக தொடங்கப்படவுள்ளது.
இதுகுறித்து மேயர் சண்.ராமநாதன் கூறியது: தஞ்சாவூர் மாநகரில் பல இடங்களிலும் சாலையோர கடைகள் மாலையிலிருந்து இரவு வரை செயல்படுகின்றன. இந்த கடைகளால் பல இடங்களில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதால், இந்த கடைகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து குறிப்பிட்ட ஒரு இடத்தில் `தஞ்சாவூர் புட் ஸ்ட்ரீட்' என அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இந்த கடைகள் மூலம் குறைந்தபட்ச வாடகை வசூலித்து மாநகராட்சிக்கும் வருவாயை ஏற்படுத்தப்படும். இதனால் வியாபாரிகளும் வாழ்வாதாரத்தை பெருக்க முடியும். அதே நேரத்தில் சாலையோரத்தில் பொதுமக்கள் விரும்பும் நல்ல உணவு வகைகளையும் பெற முடியும். இந்த புட் ஸ்ட்ரீட்டுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் மாநகராட்சி நிர்வாகம் செய்து தரும். விரைவில் இந்த இடத்தில் முழுமையான வசதிகளுடன் "புட் ஸ்ட்ரீட்" போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் செயல்படும். தற்போது 50 கடைகள் வரை வந்துள்ளன. விரைவில் 100 கடைகள் வரும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT