Published : 17 Sep 2025 06:44 PM
Last Updated : 17 Sep 2025 06:44 PM

உணவு சுற்றுலா: தாவனாகிரி பென்ன தோசை:

தோசைப் பிடிக்காத மனிதர்கள் தென்னிந்தியாவில் மிக மிகக் குறைவு என்று சொல்லுமளவுக்கு தோசை ரகங்கள் நம்மை மதி மயக்கி வைத்திருக்கின்றன. கல் தோசையில் தொடங்கி, பேப்பர் ரோஸ்ட், பொடி தோசை, நீர் தோசை, கறி தோசை, மசால் தோசை, சிறுதானிய தோசை… என நீளும் தோசைப் பட்டியலுக்கு முற்றுப் புள்ளி வைப்பது சற்று கடினம் தான்!

இந்த நீண்ட பட்டியலில் கர்நாடகத்தில் புகழ்பெற்ற ‘பென்ன தோசையையும்’ சேர்த்துக்கொள்ளலாம். தாவனாகிரி (Davanagere) நகரத்தில் முதன் முதலாக இவ்வகையிலான தோசை தயாரிக்கப்பட்டு பிரபலமடைந்ததால் ‘தாவனாகிரி பென்ன தோசை’ என்றும் அழைக்கப்படுகிறது. தாவனாகிரி நகரம் மட்டுமல்லாமல் கர்நாடக மாநிலத்தில் எந்த உணவகத்துக்குச் சென்றாலும் பென்ன தோசையை ருசிக்கலாம். கர்நாடகத்தின் சிறப்பு உணவு வரிசையில் பென்ன தோசைக்கு முக்கிய இடமுண்டு.

‘பென்ன’ என்றால் கன்னடத்தில் வெண்ணெய் என்று பெயர்! வழக்கமான தோசையிலிருந்து மாறுபட்டு வெண்ணெய்யைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படுவதால் வெண்ணெய் (பென்ன) தோசை என்று பெயர் பெற்றிருக்கிறது. பார்ப்பதற்கு நம்மூர் மசால் தோசையின் சாயல் பென்ன தோசைக்கு! மடித்துத் தரப்படும் பென்ன தோசை, மடிக்காமல் தரப்படும் பென்ன தோசை வகைகளும் இருக்கின்றன!

அரிசி, உளுந்து, வெந்தயத்தை அடிப்படையாக வைத்து வழக்கமான தோசைக்கு மாவு போல தயாராகிறது. கூடுதலாகப் பொரி சேர்க்கப்படுவது தனித்துவம். இனிப்புச் சுவைக்காக அதிலேயே கொஞ்சம் சர்க்கரையைச் சேர்த்துக் கொள்கிறவர்களும் இருக்கிறார்கள்! தோசைக் கல்லில் மாவை ஊற்றி, வெண்ணெய்யை மேற்பரப்ப வெண்ணெய் உருகி மனம் பரப்பத் தொடங்குகிறது!

பிறகுக் கொஞ்சம் பொடிக் கலவையைத் தூவி, தயாரித்து வைத்த உருளைக் கிழங்கு மசாலாவை உள் பொதித்து தோசையை மடித்துப் பரிமாறுகிறார்கள். பிளைன் மசாலா தோசை போல பெரிய அளவில் இல்லாமல் அதன் மினியேட்டர் போல காட்சி தருகிறது பென்ன தோசை! மொறுமொறுப்புத் தன்மையுடன் பென்ன தோசை உருவெடுக்கிறது. மொறுவல் தன்மைக்குச் சேர்க்கப்படும் பொரி முக்கிய காரணமாக அமைகிறது.

வாழை இலையில் தோசையைப் பரிமாறும் போது சிறிது வெண்ணெய்த் துண்டை மேல் வைக்க, அது தோசையின் சரிவில் வழுக்கிக்கொண்டு கீழிறங்குகிறது. தொட்டுக்கொள்ள தேங்காய்ச் சட்னியும், சாம்பாரும்! கொடுக்கப்பட்ட வெண்ணெய்யைத் தோசையின் மீது தடவி சாப்பிடத் தொடங்குபவர்கள் பலர்! சிலரோ ஒவ்வொரு முறை தோசையைச் சாப்பிடும் போதும் வெண்ணெய்யைத் தொட்டுக்கொண்டு அதன் பிறகுச் சட்னி, சாம்பாரைத் தொட்டுச் சாப்பிடுகின்றனர்.

தோசையைச் சாப்பிடும் போது, நெய் வாசனைப் போல வெண்ணெய் வாசனை கமகமக்கிறது. வெண்ணெய் வழிந்தோடும் பென்ன தோசையைச் சாப்பிட இனிப்புச் சுவை மேலோங்குகிறது. இனிப்புச் சுவைப் பிரியர்கள் பென்ன தோசையைச் சுவைத்துவிட்டால், மற்ற தோசைகளின் மீது அவர்களுக்கு நாட்டம் குறையத் தொடங்கலாம்.

கவனம்… வெண்ணெய்யைச் சேர்க்கிறேன் என்ற பெயரில் டால்டாவை வைத்து டால்டா தோசையைச் சுட்டுக்கொடுப்பவர்களும் இருக்கிறார்கள்! தரமான வெண்ணெய்யை வைத்து தயாரிக்கப்படும் பென்ன தோசை வயிற்றுப் புண் இருப்பவர்களுக்கான வரப்பிரசாதம்! வெண்ணெய் மற்றும் தேங்காய்யின் புண்ணாற்றும் மருத்துவ குணமும் அல்சர் பிரச்சனை இருப்பவர்களுக்கு உதவியாக இருக்கும். பொடி சேர்க்காமல் அல்சர் பிரச்சனை இருப்பவர்கள் பிளைன் பென்ன தோசையைச் சாப்பிடலாம். காரமான உணவைச் சாப்பிட்டு முடித்த பிறகு ஒரு பென்ன தோசையைச் சாப்பிட செரிமானப் பகுதிகள் உண்மையில் மகிழ்ச்சி அடையும்!

கொழுப்புச் சத்து அதிகம் இருப்பவர்கள்… உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் அதிகமாக இந்த பென்ன தோசை மீது நாட்டம் கொள்ள வேண்டாம். மற்றபடி குழந்தைகளுக்கும் உடல் ஊட்டம் பெற விரும்புபவர்களுக்கும் பென்ன தோசையை வீட்டிலேயே சுட்டுக் கொடுக்கலாம். எளிமையான தயாரிப்பில் புதுமையைப் புகுத்த பென்ன தோசை சிறந்த தேர்வு! பென்ன தோசை… தோசை வகையறாக்களில் தனித்துவமானது!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x