Published : 22 Aug 2025 11:13 AM
Last Updated : 22 Aug 2025 11:13 AM

யார் இந்த ஃப்ராங்க் கேப்ரியோ? - சுவாரஸ்ய தீர்ப்புகளால் கவனம் ஈர்த்த நீதிபதி!

நீங்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டா என சமூக வலைதளங்களில் உலா வருபவர்கள் என்றால் அமெரிக்க நீதிபதி ஃப்ராங்க் கேப்ரியோவின் சுவாரஸ்ய தீர்ப்புகளை தவறவிட்டிருக்க வாய்ப்பில்லை. அமெரிக்காவின் ரோட் தீவுகளின் முனிசிபல் நீதிபதியாக இருந்தவர் ஃப்ராங்க் கேப்ரியோ, அவரது சமூக வலைதளப் பக்கத்தில் புதன்கிழமை பகிரப்பட்ட பதிவொன்று பலரையும் வருந்தச் செய்தது. ஆம், நீங்கள் ஊகிப்பதுபோல் மரணம்தான். 88 வயதான ஃப்ராங்க் கேப்ரியோ கணையப் புற்றுநோயால் இறந்தார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

கேப்ரியோ இருந்தால் அந்த நீதிமன்றம் அமைதி, இரக்கத்தின் இருப்பிடமாக இருக்கும். நீதி வழங்கும்போது கூட கனிவான அணுகுமுறையையே அவர் கடைப்பிடிப்பார். சில நேரங்களில் அவர் பேச்சில் நகைச்சுவை சற்று தூக்கலாகவே இருக்கும். ஆனால், பெரும்பாலும் அவர் இலகுவாக அணுகும் வழக்குகள் எல்லாம் சாதாரண குற்றங்களாகவே இருக்கும்.

உதாரணத்துக்கு, வீட்டில் சத்தமாக இசையை ஒலித்தது போன்ற குற்றங்களாக இருக்கும். அதனால், அந்த வழக்குகளுக்கு அன்பு ததும்பும் அவரது தீர்ப்பு வீடியோக்கள் தேசங்கள், மொழிகள் கடந்து சர்வ சாதாரணமாக கோடிக்கணக்கான பார்வைகளைப் பெறுவதுண்டு. அதுபோல் கேப்ரியோ சட்ட சேவைகளை எல்லோராலும் சமமாக அணுக முடியாமல் இருக்கும் நெருக்கடி குறித்தும் குரல் கொடுப்பார்.

இதன் நிமித்தமாக கேப்ரியோ, “சுதந்திரம், நீதியும் அனைவருக்குமானதாக இருக்க வேண்டும். அது எல்லோரும் அடையக் கூடியதாக இருக்க வேண்டும். ஆனால் அது அப்படியில்லை” என்று கூறியது பிரபலமானது.

அமெரிக்காவில் குறைந்த வருமானம் கொண்டவர்களில் 90% பேருக்கு சட்ட சேவைகளைப் பெறுவது அவ்வளவு எளிதாக முடிவதில்லை. ஹெல்த் கேர், ஓய்வுக்கால பலன்கள், நியாயமற்ற வெளியேற்றம் போன்ற சிவில் வழக்குகளில் அவர்கள் நீதி பெற நிறைய செலவழிக்க வேண்டியுள்ளது. அதனால்தான் அவர்களுக்காகவே கேப்ரியோவின் குரல் எப்போதும் ஓங்கி ஒலித்தது.

ஒரு நீதிபதியாக கேப்ரியோவின் உற்சாகமான அணுகுமுறை அவரது வீடியோக்களுக்கு கோடிக்கணக்கான பார்வைகளைப் பெற்றுத் தந்தது. பெற்றோருக்கு தீர்ப்பு வழங்க குழந்தைகளை நீதிமன்றத்துக்கு அழைக்கும் வீடியோக்கள் மிகவும் பிரபலமானவை. கொல்லப்பட்ட ஒரு இளைஞரின் தாயின் பேச்சை அனுதாபத்துடன் கேட்டு, பின்னர் அந்தப் பெண்ணுக்கு இருந்த 400 டாலர் டிராபிக் அபராதத்தை அவர் தள்ளுபடி செய்த வீடியோ ஒரு உதாரணம்.

மற்றொரு வீடியோவில், ஒரு மணி நேரத்துக்கு 4 டாலர் சம்பாதித்து வந்த ஒரு பார் டெண்டருக்கு போக்குவரத்து விதிமீறல் வழக்கை தள்ளுபடி செய்த கேப்ரியோ, வீடியோவைப் பார்ப்பவர்கள் தங்கள் பில்களை செலுத்தாமல் ஓடவேண்டாம் என்று வலியுறுத்துவார்.

அதில், “இதை பார்த்துக் கொண்டிருப்பவர்கள், நீங்கள் சாப்பிட்டு விட்டு பில் கொடுக்காமல் ஓடாமல் இருப்பது நல்லது. ஏனென்றால் நீங்கள் கண்டிப்பாக மாட்டிக் கொள்வீர்கள். மேலும் ஒரு மணி நேரத்திற்கு மூன்று டாலர்கள் வீதம், நாள் முழுவதும் கடினமாக உழைக்கும் ஏழை மக்கள் உங்கள் பில்லுக்கு பணம் செலுத்த வேண்டியிருக்கும் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்” என்று அவர் கூறியிருப்பார்.

அவரது காலை பழக்கவழக்கங்களை, அதாவது பல் துலக்குதல், புத்தகத்தில் கையெழுத்திடுதல் மற்றும் அவரது சொந்த நிகழ்ச்சியின் வீடியோக்களைப் பார்ப்பது போன்றவற்றை காட்டும் ஒரு டிக்டாக் வீடியோ கூட 50 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. அந்த அளவுக்கு சமூக வலைதளங்களில் அவரது தாக்கம் பெரிது.

2019-ம் ஆண்டு கொடுத்த ஒரு நேர்காணலில், நீதிபதி கேப்ரியோ தனது நீதிமன்ற நடவடிக்கைகள் "மிகவும் சுவாரஸ்யம் நிறைந்த ரோட் தீவின் வாழ்க்கையின் ஒரு பகுதியை காட்டுகின்றன. இது நாடு முழுவதும் மக்கள் அனுபவிக்கும் அதே பிரச்சினைகளை பிரதிபலிக்கிறது" என்று கூறினார். ​​கேப்ரியோவின் ‘காட் இன் பிராவிடன்ஸ்’ (Caught in Providence) நிகழ்ச்சி மூன்று எம்மி விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

நீதிபதி ஃபிராங்க் கேப்ரியோ 1936-ம் ஆண்டு ரோட் தீவின் பிராவிடன்ஸ் நகரில் பிறந்தார். அவர் ஒரு இத்தாலிய - அமெரிக்க குடும்பத்தைச் சேர்ந்தவர்.தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை பிராவிடன்ஸிலேயே கழித்தார். பின்னர் அங்கு அவர் தலைமை நகராட்சி நீதிபதியாகப் பணியாற்றினார்.

மிக எளிமையான குடும்பத்திலிருந்து வந்த கேப்ரியோ, 1985 முதல் 2023-ல் ஓய்வு பெறும் வரை பிராவிடன்ஸ் நகராட்சி நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்றினார். கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் நீதித் துறையில் தனது வாழ்க்கையை அர்ப்பணித்திருக்கிறார். ஆயிரக்கணக்கான வழக்குகளை தீர்த்து வைத்திருக்கிறார்.

2023-ம் ஆண்டு கணையப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்ட பிறகு, நீதிபதி கேப்ரியோ, "என்னால் முடிந்தவரை போராட முழுமையாகத் தயாராக இருக்கிறேன்" என்று தெரிவித்திருந்தார். தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வந்த அவர் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். கேப்ரியோவுக்கு ஜாய்ஸ் என்ற மனைவியும், 5 பிள்ளைகளும், 7 பேரக்குழந்தைகளும், 2 கொள்ளுப் பேரன்களும் உள்ளனர். கேப்ரியோவின் மறைவுக்கு உலகம் முழுவதும் உள்ள பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஃப்ராங்க் கேப்​ரியோ​ மறைவையொட்டி, அவரது மகன் டேவிட் கேப்​ரியோ வெளியிட்ட செய்தி ஒன்றில், “எனது தந்தைக்கு ஆதர​வும், பா​ராட்​டும் வழங்​கிய அனை​வரும் அவரது நினை​வாக கருணை​யை சிறிதளவேனும்​ உலகில்​ பரப்​ப வேண்​டும்”​ என்​று வேண்​டு​கோள்​ விடுத்​தார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x