Published : 13 Aug 2025 02:54 PM
Last Updated : 13 Aug 2025 02:54 PM

உணவு சுற்றுலா: வட ஆற்காடு சிமிலி உருண்டை

சரித்திரத்தில் புகழ்பெற்றவை ஆற்காடு மாவட்டங்கள். எத்தனை சாம்ராஜ்யங்கள்… பல்வேறு போர்கள்… கலாச்சாரப் பரிமாற்றங்களைக் கடந்து, கம்பீரமாக நிற்கின்றன ஆற்காடு மாவட்டங்கள். இப்போது பல மாவட்டங்களாகப் பிரிந்துவிட்டாலும், உணவியல்ரீதியில் ஆற்காடு மாவட்டங்களுக்குப் பல்வேறு ஒற்றுமைகள் உள்ளன.
அந்தப் பகுதிகளில் கிடைக்கும் பிரியாணி ரகங்கள், இனிப்பு ரகங்கள், உணவுப் பண்பாடு என அனைத்திலும் ஒரு தனித்துவத்தை உணர முடியும். அந்த வரிசையில் ‘சிமிலி உருண்டை’ எனும் ஊட்டச்சத்து மிக்கச் சிற்றுண்டி மிகப் பிரபலம்.

ஆரோக்கிய உருண்டை: கேழ்வரகுதான் சிமிலி உருண்டையின் மையப்பொருள். ஜவ்வாது மலைத் தொகுப்புகளில் சிறுதானிய விவசாயம் அதிகம் என்பதால் முதன்மைப் பொருளாகக் கேழ்வரகு இருந்திருக்கலாம். உடைத்த கடலை, எள், ஏலம் என ஆரோக்கியமான உணவுப் பொருட்களின் மூலம் சிமிலி உருண்டைத் தயாரிக்கப்படுகிறது.

கேழ்வரகை உரலில் இடித்து மாவாக்கி, அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து, தண்ணீர் விட்டுப் பிசைந்து உருண்டைகளாக உருட்டிக்கொள்கிறார்கள். இதை மண்சட்டியில் அல்லது தோசைக்கல்லில் தட்டிக் கொஞ்சம் எண்ணெய்விட்டு அடைகளாக வார்த்துக் கொள்கிறார்கள். பின்பு அடைகளை இடித்து, உதிர்த்து மீண்டும் உரலில் / மிக்ஸியில் மாவாக அரைத்துக் கொள்கிறார்கள். லேசாக வறுத்து, பொடித்த வேர்க்கடலையையும் எள்ளையும் ஏலப்பொடியையும் சேர்க்கிறார்கள். மறுபுறம் காய்ச்சி வைத்த வெல்லப் பாகை மேற்சொன்ன கலவையோடு சேர்த்து, கையில் எண்ணெய் தடவி, சிறு சிறு உருண்டைகளாகப் பிடிக்கிறார்கள்.

பெரிய நெல்லிக்காயைவிடக் கொஞ்சம் பெரிதாக இருக்கும் சிமிலி உருண்டையைக் கடித்துச் சாப்பிடும் போது இடையே கடிபடும் கடலைகள் சிமிலி உருண்டையின் தனித்த சுவைக்குக் காரணமாகின்றன. கேழ்வரகோடு சேர்ந்த எள்ளின் சுவை புதுமையாக இருக்கிறது. கேழ்வரகை இடித்து மாவாக்கி, அதை அடையாக வார்த்து, பின்பு மீண்டும் இடித்துத் தயாரிக்கப்படுவதில்தான் சிமிலி உருண்டைக்குத் தனித்துவம் கிடைக்கிறது போலும்! மற்ற பகுதிகளில் கிடைக்கும் கேழ்வரகு உருண்டைகளுக்கும் இந்தச் சிமிலி உருண்டைக்கும் உள்ள வித்தியாசத்தைச் சுவைக்கும் போது உணர முடியும்.

வேலூர் மாநகரத்தின் பெரும்பாலான இடங்களில் இப்போது சிமிலி உருண்டை கிடைக்கிறது. ஒரு சிமிலி உருண்டையின் விலை பத்து முதல் பதினைந்து ரூபாய். இரண்டு சிமிலி உருண்டைகளைச் சாப்பிட்டாலே தாராளமாக இடைப்பசி அடங்கிவிடும். குழந்தைகளுக்கு இந்த அரோக்கிய உருண்டைகளை அறிமுகப்படுத்திவிட்டால் ஊட்டத்தோடு வளர்வார்கள். எளிமையாக வீட்டிலேயும் தயாரித்துக் கொள்ளலாம். குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் அனைத்து வயதினருக்குமான தின்பண்டம் இது.

மாதவிடாய் காலங்களில் உடல் சோர்வுறும் போது சிறந்த ஊட்டப்பொருளாகச் சிமிலி உருண்டைகள் இருக்கும். முதியவர்களுக்குச் செரிமானச் சிக்கலைக் கொடுக்காமல் பசியாற்றும் பண்டமாக இதைப் பயன்படுத்தலாம். சிமிலி உருண்டை போன்ற தின்பண்டங்களைச் சிறுவயது முதலே சாப்பிட்டு வந்தால், எதிர்காலத்தில் எலும்பு அடர்த்திக் குறைவு போன்ற பிரச்சினைகளுக்கு வாய்ப்பு இருக்காது. சுண்ணச்சத்து பற்றாக்குறை ஏற்படாமல் தடுக்க இந்தச் சிமிலி உருண்டை நிச்சயம் உதவும். நிலக்கடலையின் புரதமும் எள்ளில் உள்ள இரும்புச் சத்தும் கூடுதல் ஊட்டமளிக்கும். மொத்தமாகச் சிமிலி உருண்டையில் உடலுக்குத் தேவைப்படும் நுண்ணூட்டங்கள் கலவையாக நமக்குக் கிடைக்கும். நார்ச்சத்தும் நிறைந்திருப்பதால் மலச்சிக்கலுக்கான தீர்வாகவும் அமையும்.

பெயர்க் காரணம்: ‘சிமிலி’ என்றால் வெல்லம் சேர்த்த எள்ளு விதைகள் என்று குறிப்பிடுகிறது சித்த மருத்துவ அகராதி. மேலும் ‘சிமிலம்’ என்றால் மலை என்கிற பொருளில், இந்தத் தின்பண்டம் நல்ல வலிமையை அளிக்கும் என்கிற ரீதியில் அப்பெயர் சூட்டப்பட்டிருக்கலாம். ஆற்காடு மாவட்டங்கள் மட்டுமல்லாமல், பல்வேறு இடங்களில் சிமிலி உருண்டைகள் பயன்பாட்டில் இருந்திருக்கின்றன.

வேலூர் மாநகரத்தின் பெருமையான கோட்டையைப் பார்த்துவிட்டு, அங்கிருக்கும் இனிப்புக் கடைகளில் சிமிலி உருண்டையைக் கேட்டுச் சாப்பிட்டுப் பாருங்கள்.

கட்டுரையாளர், சித்த மருத்துவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x