Published : 03 Aug 2025 01:20 PM
Last Updated : 03 Aug 2025 01:20 PM
நாட்டிலேயே உடல் உறுப்பு மாற்று சிகிச்சைகளை திறம்பட மேற்கொண்டதற்காக தமிழக அரசுக்கு விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்துள்ளது.
தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று சிகிச்சை அமைப்பு சார்பில் உறுப்பு தான விழிப்புணர்வு நிகழ்வு டெல்லியில் நேற்று நடந்தது. அதில், நாடு முழுவதும் உறுப்பு தான சிகிச்சைகள் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை சிறப்புற மேற்கொண்டவர்களுக்கு விருது வழங்கப்பட்டது.
இந்திய அளவில் உறுப்பு தான நடவடிக்கைகளில் திறம்பட செயல்பட்ட சிறந்த மாநிலமாக தமிழகம் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்த விருதை தமிழக உறுப்பு மாற்று ஆணைய உறுப்பினர் செயலர் மருத்துவர் என்.கோபாலகிருஷ்ணனிடம் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா வழங்கினார்.
இந்நிலையில், சென்னையில் நேற்று நடைபெற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் தொடக்க விழாவில் பங்கேற்ற சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ‘தமிழகத்தின் மகுடத்தில் மற்றுமொரு வைரக் கல்லாக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார்.
அரசு சார்பில் மரியாதை: இது தொடர்பாக மாநில உறுப்பு மாற்று ஆணைய உறுப்பினர் செயலர் மருத்துவர் என்.கோபால கிருஷ்ணன் கூறியதாவது: தமிழகத்தில் உறுப்பு தானம் செய்பவர்களின் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்படும் என்று கடந்த 2023-ம் ஆண்டு முதல்வர் அறிவித்தார். அதன் பிறகு, தமிழகத்தில் இதுவரை 479 பேர் உடல் உறுப்பு தானம் அளித்துள்ளனர். அவர்களுக்கு மரியாதை செலுத்தப் பட்டுள்ளது. கடந்த 2023-ல் 178 பேர் உறுப்பு தானம் செய்தனர். அவர்களிடமிருந்து தானமாக பெற்ற உறுப்புகள் மூலமாக 1,000 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மறுவாழ்வு பெற்றனர்.
கடந்த ஆண்டில் மூளைச்சாவு அடைந்த 268 பேரிடம் இருந்து உறுப்புகள் தானமாக பெறப்பட்டு 1,500 பேருக்கு பொருத்தப்பட்டுள்ளன. தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் இருந்து 28 பேரின் உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து பெறப்பட்ட 100-க்கும் மேற்பட்ட உறுப்புகள், தகுதியானவர்களுக்கு பொருத்தப்பட்டுள்ளன.
ஒருவர் மூளைச்சாவு அடையும்போது, அதனைக் குறிப்பிட்ட கால இடைவெளியில், உரிய மருத்துவ அறிவியல் முறையில் உறுதி செய்வது அவசியம் ஆகும். அதன் பின்னர், சம்பந்தப்பட்ட நோயாளியின் உறவினர்களிடம் ஆலோசனை செய்து, உறுப்பு தானத்துக்கு ஒப்புதல் பெறுவது முக்கியம். அதைத்தொடர்ந்து உறுப்புகளை முறையாக அகற்றி, பாதுகாப்பாக மற்ற நோயாளிகளுக்கு வெற்றிகரமாக பொருத்த வேண்டும்.
இந்த நடைமுறைகளில் மருத்துவ ரீதியாகவும், சட்ட ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் பல்வேறு சிக்கல்களும், சவால்களும் உள்ளன. அனைத்தையும் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை உள்பட தமிழகத்தின் பல அரசு மருத்துவமனைகள் திறம்பட செய்ததால், இந்த சாதனை சாத்தியமாகியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT