Published : 25 Jul 2025 07:56 PM
Last Updated : 25 Jul 2025 07:56 PM

கலாமின் எழுத்து உலகம்

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர், ‘ஏவுகணை நாயகர்’ என்கிற பெருமைக்குச் சொந்தக்காரரான அப்துல் கலாம் ஒரு சிறந்த எழுத்தாளரும்கூட. இளைய தலைமுறையைக் கனவு காணச் சொன்ன அவரின் எழுத்துகள் இன்றும் பலருக்கு உத்வேகம் தருவதாக இருக்கின்றன. அறிவியல், கல்வி, தேச முன்னேற்றம், எதிர்காலக் கனவு போன்ற தலைப்புகளில் வெளியாகியுள்ள சுமார் 25 புத்தகங்களை அவர் தனியாகவும், பிற எழுத்தாளர்களோடு சேர்ந்தும் எழுதியுள்ளார்.

வாசிப்பும் எழுத்தும்: தீவிர வாசிப்புப் பழக்கம் கொண்ட கலாம் ஆங்கிலம், தமிழ் மொழிகளில் சிறப்பாக எழுதக்கூடியவர். எளிமையான நடையில் இளம் வாசகர்கள் புரிந்துகொள்ளும் வகையில் அவரின் எழுத்துகள் இருப்பது தனிச் சிறப்பு. ‘ஒரு சிறந்த புத்தகம் நூறு நண்பர்களுக்குச் சமம், ஒரு சிறந்த நண்பர் ஒரு நூலகத்துக்குச் சமம்’ என்றார் கலாம். தனது வாழ்நாளில் தீவிர வாசிப்புப் பழக்கத்தைக் கொண்டிருந்த அவர், மாணவர்களையும் அதிகம் வாசிக்கத் தூண்டினார், வாசிப்பையும் அறிவை மேம்படுத்திக் கொள்வதைப் பற்றியும் தொடர்ந்து பேசினார்.

‘அக்னிச் சிறகுகள்’ (Wings of Fire) என்கிற புத்தகம் கலாம் எழுதிய பிரபலமான புத்தகங்களில் ஒன்று. இந்தியாவின் வளர்ச்சி, முன்னேற்றத்தைப் பற்றி ‘இந்தியா 2020: புத்தாயிரம் ஆண்டுக்கான ஒரு தொலைநோக்கு’ (India 2020: A Vision for the New Millennium), ‘எழுச்சி தீபங்கள்’ (Ignited Minds) போன்ற புத்தகங்களையும், தனது வாழ்க்கையில் நடந்த முக்கிய விஷயங்களைத் தொகுத்து, ‘திருப்புமுனைகள்: சவால்களுக்கு இடையே ஒரு பயணம்’ (Turning Points: A journey through challenges) என்கிற புத்தகத்தையும் எழுதியுள்ளார்.

அவர் எழுதிய கவிதைகள், ‘எனது பயணம்’ (My Journey: Transforming dreams into actions) என்கிற தலைப்பில் வெளியாகி உள்ளது. அவர் எழுதிய பெரும்பாலான புத்தகங்கள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு, பின்பு தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அவரின் எழுத்துகள் நேர்மறையான எண்ணங்களை, நம்பிக்கையை விதைப்பதாக இருக் கின்றன. ஏனென்றால், ‘வாய்ப்புக்காகக் காத்திருக்காதே; வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்’ எனச் சொல்லி இருக்கிறார் கலாம். - ராகா

| ஜூலை 27: கலாமின் 10-ம் ஆண்டு நினைவு நாள் |

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x